விஜய்… பிரம்மானந்தம்… யார் ஒசத்தி?
‘அய்யர் -முக்கியமா, அமாவாசை முக்கியமா’ என்பதற்கு நிகரான கேள்வி இது. இருந்தாலும் காம்பினேஷன்னு ஒண்ணு இருக்குல்ல? விரைவில் ‘ஜில்லா’ படத்தை தெலுங்கில் வெளியிடப் போகிறார்கள். ‘டப்பிங்’தான் என்றாலும், அதற்கான தடபுடல் ஏற்பாடுகள் ஆந்திரா இண்டஸ்ட்ரியை அதிரிபுதிரியாக்கிவிடும் போல தெரிகிறது. ஆர்.டி.நேசன் இயக்கியிருக்கும் இந்த படத்தை ஜில்லா என்ற பெயரிலேயே தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள். முதலில் படத்தை தமது நிறுவனத்தின் மூலமே வெளியிட திட்டமிட்டிருந்த அப்படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, வெயிட்டாக ஒருவர் விலை கேட்டதும் அவருக்கே கொடுத்துவிட்டாராம்.
அவர்தான் ஆர்.டி.நேசனின் புத்திசாலித்தனத்தை இப்போது மெச்சிக் கொண்டிருக்கிறார். ஏன்?
இந்த படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் சென்னை வந்திருந்தார் ஆந்திராவின் சூப்பர் டூப்பர் காமெடி கிங் பிரம்மானந்தம். இவர் ஒரு ரீல் இருந்தால் போதும். அந்த படம் ஹிட் என்று ஊர் உலகம் உற்சாகப்படுகிற அளவுக்கு ஹிட்டுகளை அள்ளிக்குவித்தவர் அவர். வெறும் இரண்டு நாள் கால்ஷீட்டில் சென்னை வந்தவரை, ‘இருந்து ஆறு நாள் நடிச்சு கொடுங்க சார்… ’ என்று ஷெட்யூலை மாற்றி, சம்திங் ஸ்பெஷலாக்கிவிட்டார் நேசன். ஆறு நாட்களும் அவரை விதவிதமாக நடிக்க வைத்தவர், ‘அவ்வளவு புட்டேஜும் தெலுங்கு ரிலீஸ் சமயத்தில் தேவைப்படும்’ என்று ஒதுக்கி ஓரமாக வைத்துவிட்டாராம். அதுதான் இப்போது கை கொடுத்திருக்கிறது.
தமிழில் பார்க்காத பல காட்சிகளை தெலுங்கு ரசிகர்கள் ரசிக்கலாம். அந்தளவுக்கு பிரம்மானந்தம், விஜய் போர்ஷனை நீட்……டியிருக்கிறார் நேசன். பிரம்மானந்தம் இருப்பதால் படத்திற்கு இப்பவே எதிர்பார்ப்பு களை கட்டி வருவதால், ‘விஜய் பிரம்மானந்தம்… யார் ஒசத்தி’ என்ற கேள்வியை கேட்காமல் எப்படி இந்த செய்தியை முடிப்பது?