ஜில்லுன்னு கொஞ்சம் ஜின்! பீதி கிளப்ப வரும் புதுப்படம்
சரக்கு கடைக்கெல்லாம் ஹாஃப் டே லீவ் என்ற அபாய சங்கு ஒலிக்கக்கேட்டு, ‘சேச்சே… அதெல்லாம் வதந்திப்பா’ என்று பிற்பாடு மனசை சாந்தப்படுத்திக் கொண்ட அதே தமிழ்நாட்டில்தான் ‘சரக்கு’ பெயரிலேயே ஒரு தமிழ் படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. படத்தின் பெயர் ஜின்! கிளாஸ் எங்கே….. ஐஸ் க்யூப்ஸ் எங்கே… என்று பரபரப்பாகும் முன் கேளுங்க குடிகாரர்களே. இந்த ஜின் நீங்க நினைக்கிற அந்த ஜின் இல்ல. ஜின் என்றால் பேய் என்றொரு அர்த்தமாம். அதுவும் இங்கல்ல. அரபி மொழியில்.
‘அரபி மொழியில் நாங்க தலைப்பு வச்சதுக்கும் இந்த கதைக்கும் ஒரு சம்பந்தம் இருக்கு’ என்று பேச துவங்கினார் ஜின் படத்தின் இயக்குனர் சதீஷ் சந்திரசேகரன். இங்கு கடந்த பல மாதங்களாகவே பேய் ஆவி கதைகள்தான் மலிஞ்சு கிடக்கு. இந்த ஆவி பட ஏரியாவில் மேலும் ஒரு ஆவிப்படம்தானே என்கிற அலட்சியம் உங்க எல்லாருக்கும் இருக்கும். நிச்சயம் அதிலிருந்தெல்லாம் வேறு பட்ட படமா இது இருக்கும். குறிப்பா சொல்லணும்னா, இப்ப வர்ற பேய் படங்கள்ல எல்லாரும் கிளம்பி ஒரு இடத்துக்கு போவாங்க. அங்க ஒரு பேய் இருக்கும். அது இவங்கள்ல ஒருத்தரை பிடிக்கும்னு கதை போகும். ஆனால் இந்த படத்தில் பேய் பிடிச்ச ஒருத்தனையே கூட்டிகிட்டு பிக்னிக் போற பிரண்ட்ஸ் அங்கு என்னாவாகிறாங்கங்கறதுதான் கதை. (நல்லா கௌப்புறாங்கப்பா பீதிகள…) இந்த கதையை என் வாழ்க்கையில நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையா வச்சுதான் எழுதியிருக்கேன் என்றார் சதீஷ் சந்திரசேகர்.
இவரது நண்பர் ஒருவருக்கு பேய் பிடித்திருந்ததாம். அவரை அழைத்துக் கொண்டு வெளியூருக்கு போய் அவஸ்தைபட்டதைதான் இப்படி சினிமாவாக எடுத்திருக்கிறார் இவர். இந்தப் படத்தில் ‘மெட்ராஸ்’ படத்தில் நடித்த கலையரசன், ஜானி, ‘முண்டாசுப்பட்டி’ படத்தில் நடித்த முனீஸ்காந்த், காளி வெங்கட், ஹரி, அர்ஜுனன், ப்ரீத்தி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
பிஈ படித்துவிட்டு சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த சதீஷ் சந்திரசேகரன் சினிமா மீதிருக்கும் காதலால் இந்தப்பக்கம் வந்துவிட்டார். சினிமா மீதிருக்கும் காதலால்தான் பாதி பேய்கள் கோடம்பாக்கத்தில் நடமாடி வருகிறது.
ஒருவருக்கொருவர் கைகுலுக்கிகிட்டு கலகத்தை ஆரம்பிங்க!