முதல் படத்திலேயே மூக்கால் அழுகை? அறிமுக ஹீரோவுக்கு அச்சச்சோ!
ஏரோனேட்டிக்கல்இஞ்ஜினியரிங் படித்துவிட்டு வந்திருக்கிறார் ஜிதேஷ். இப்போது இந்த பெயர் ரசிகர்களுக்கு பரிச்சயம் இல்லாவிட்டாலும், காலப்போக்கில் இந்த பெயரை சொல்லும்போதெல்லாம் அவர்கள் ‘ஹுய்..’ என்று விசிலடித்து ரசித்தாலும் ஆச்சர்யமில்லை. ஏனென்றால் ஜிதேஷ் நடித்த இரண்டு படங்களில் ஒன்று ரிலீஸ் ஆகிவிட்டது. இன்னொன்று ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. வேறு படங்களில் நடிக்க சிலர் கால்ஷீட் கேட்டு வந்து கொண்டிருக்கிறார்களாம்.
முதல் படம் சிக்கி முக்கி. ஆனால் ரெண்டாவது படமான தலக்கோணம்தான் திரைக்கு வருகிற விஷயத்தில் முந்திக் கொண்டது என்று கூறுகிற ஜிதேஷ், சின்னத்திரை ரசிகர்களுக்கு ரொம்பவே பிரபலம். அடிப்படையில் நடன இயக்குனரான இவர், சுட்டி டி.வி யில் குழந்தைகளுக்கு டான்ஸ் சொல்லித்தருகிற வேலையை செய்தவர். சிற்சில குறும்படங்களிலும் நடித்திருக்கிறாராம்.
UK வில் தயாரிக்கப்பட்ட குறும்படம் ஒன்றிலும் நடித்திருக்கிறார் ஜிதேஷ். ஆங்கிலத்தில் புகழ் பெற்ற ஷெர்லாக்ஹோல்ம்ஸ் நாவலின் ஒரு பகுதியிலிருந்து தயாரிக்கப்பட்ட குறும்படம் ஒன்றிலும் இவர்தான் ஹீரோ. இப்படி உள்நாடு வெளிநாடு என்று பறந்து பறந்து நடித்துக் கொண்டிருக்கும் ஜிதேஷ், ராமராஜ், மகாராஜா, சென்னை சில்க்ஸ், ஸ்ரீதேவி டெக்ஸ்ட்டைல்ஸ் போன்ற விளம்பர படங்களையும் விட்டு வைக்கவில்லை.
எல்லாம் ஓ.கே. ஆனால் இவர் நடித்து வெளிவந்த தலக்கோணம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கே இவரை அழைக்கவில்லை அப்படத்தின் தயாரிப்பாளர். அந்த படத்தின் பத்திரிகையாளர் ஷோவிலும் தலைகாட்டவில்லை ஜிதேஷ். என்னாச்சு பிரதர் என்றால், ‘என் மேல தப்பு இல்லைங்க. கூப்பிடல… அழைக்காத இடத்திற்கு வருவது சரியில்லேங்கறதுக்காக நானும் வரல…’ என்றார் கவலையாக! சின்ன ஹீரோவோ, பெரிய ஹீரோவோ, அறிமுக ஹீரோவோ, ஆதர்ஷ ஹீரோவோ? யாருக்காவது யாராலயாவது பிரச்சனை வந்துகிட்டேயிருக்கு!
சினிமாடா….!