தவறவிட்ட ஜோக்கர்! தட்டிச்சென்ற கோ2
ஆளே இல்லாத கடையில யாருக்குடா டீ ஆத்துற? என்பார் விவேக் ஒரு படத்தில். சுட சுட தயாரான ஜோக்கர், ஆளே இல்லாத டீக்கடையில் ஆற்ற பயன்பட்டுவிடுமோ என்கிற அச்சம் ராஜு முருகனின் எழுத்தை வாசித்தவர்களுக்கு வந்திருக்கிறது. தமிழ்சினிமாவில் முழுக்க முழுக்க அரசியலையும், அரசியல்வாதிகளையும் கழுவி காயப் போட்ட படங்களுக்கு தனி மரியாதை உண்டு. அதுவும் தேர்தல் நேரங்களில் இத்தகைய படங்கள் வந்தால், சொல்ல முடியாது… தலையெழுத்தே மாறிப்போகும். ஜோக்கரும் அப்படி தலையெழுத்தை மாற்றும் என்றுதான் யோசித்தது ரசிகர் வட்டாரம். ஆனால் இன்று வரை ஜோக்கர் படத்திற்கான ரிலீஸ் தேதி சொல்லப்படவில்லை.
இத்தனைக்கும் தேர்தலுக்கு முன் இப்படம் வர வேண்டும் என்று பெரிதும் விரும்பினாராம் டைரக்டர் ராஜுமுருகன்.
இதற்கிடையில் பாபி சிம்ஹா நடித்த கோ2 இந்த மாதம் 13 ந் தேதி திரைக்கு வருகிறது. முழுக்க முழுக்க அரசியல் பஞ்ச், நையாண்டி, கலாட்டா, என்று நகரும் படம், ஒரு கட்டத்தில் அரசியல்வாதிகள் மீதான கோப முகத்தையும் காட்டுவதாக எடுக்கப்பட்டுள்ளது. கோ2 ஐ பார்க்கிற ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் குபீரென பிளட் பிரஷர் ஏறும் என்பது மட்டும் உறுதி. முதலில் இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட விஜய் சேதுபதியே, படத்தின் வசனங்களையும் கதையையும் கேட்டுவிட்டு ஐயோ சாமீய். நமக்கெதுக்கு பொல்லாப்பு என்று ஓடியதாக கேள்வி.
அப்படிப்பட்ட ஒரு படம் தமிழகம் முழுக்க பரவலாக ரிலீஸ் ஆகி, எந்த கட்சியின் குடியை கெடுக்கப் போகிறதோ? இருந்தாலும் மக்கள் திருந்தினால் சரி.