ஜோதிகா படம் நடக்குமா? திக் திக் திகிலில் படக்குழு?
வெகு காலம் கழித்து ஜோதிகா ஒரு படத்தில் நடிக்கப் போகிறார். இந்த நல்லசெய்தியை நாட்டுக்கு அறிவித்து புண்ணியம் கட்டிக் கொண்ட அந்த கலைஞர்களுக்கு இப்போது கம்பி மேல் நடை! என்னவாம்?
தமிழ்சினிமாவில் நடிகை ஜோதிகாவை போல ஒருவர் வர வேண்டும் என்றால், அவரே வந்தால்தான் உண்டு. அந்தளவுக்கு அந்த நடிப்பும் அப்பாவித்தனமும் அழகும் ஒட்டுமொத்த தமிழுலகத்தையே அவர் பக்கம் தள்ளியது. அதுவும் மொழி போன்ற முக்கியமான படத்தில் ஜோதிகா இல்லையென்றால் அந்த படமே பப்படம் ஆகியிருக்கும். வாய் பேசாத காது கேளாத பெண்ணாக அவ்வளவு சிறப்பாக நடித்திருந்தார் அவர். இருந்தாலும் குடும்ப வாழ்க்கை சினிமாவை விட முக்கியமாச்சே? அருமையான குடும்பம். அன்பான கணவர் என்று செட்டில் ஆகிவிட்டார் ஜோதிகா. குடும்பம், குழந்தைகள் என்று இருந்தவரை மீண்டும் நடிக்க வரும்படி அழைத்துக் கொண்டேயிருந்தது திரையுலகம்.
எல்லா அழைப்புகளையும் வேண்டாம் என்றே நிராகரித்து வந்த ஜோதிகா, இப்போது அதுவும் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் யெஸ் சொன்னாராம். சூர்யாவும் நல்ல கதையாக இருந்தால் ஓ. கே என்று கூறிவிட, மலையாளத்தில் வெளிவந்த ஹவ் ஓல்டு ஆர் யூ என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்ய முனைந்தார்கள். மலையாளத்தில் அந்த படத்தை இயக்கியவரே இங்கும் இயக்குவதாக ஏற்பாடு. மஞ்சுவாரியர் வெகுகாலத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க வந்த படம் அது. அவருக்கு நல்ல பெயரையும் பெற்றுத்தந்தது. அதன் காரணமாகதான் இந்த படத்தில் நடிக்கவும் ஒப்புக் கொண்டாராம் ஜோதிகா.
நவம்பர் 12 ந் தேதி படப்பிடிப்பு துவக்கம் என்கிறார்கள். ஆனால் கடைசி நேரத்தில் ‘இந்த படத்தில் நடிக்க வேண்டுமா?’ என்று நினைக்கிறாராம் ஜோதிகா. கதைப்படி கணவரை பிரிந்திருப்பது போல அமைந்திருக்கிறதாம் அவரது கேரக்டர். சந்தோஷமான குடும்பமாக ஊர் போற்ற வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இப்படியொரு கதையம்சம் கொண்ட படத்தில் நடித்தால் அது சரியாக இருக்குமா என்று யோசிக்கிறாராம் இப்போது.
படப்பிடிப்பு நடக்குமா? பொறுத்திருப்போம்.