பாண்டிராஜ் இயக்கும் படத்தில் ஜோதிகா?
தமிழ்சினிமாவில் எல்லா காலத்திலும் கொண்டாடப்பட வேண்டிய நடிகை ஒருவர் உண்டென்றால் அது ஜோதிகாதான். மொழி என்கிற ஒரு திரைப்படம் போதும், ஜோதிகாவின் நடிப்பு திறமையை நாட்டுக்கு சொல்ல! மார்க்கெட்டில் முதலிட நாயகியாக இருந்தபோதே திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டாலும், நல்ல கதையம்சம் கொண்ட படங்களை பார்க்கும் போதெல்லாம் ‘இதில் ஜோதிகா நடிச்சிருந்தா எப்படியிருக்கும்?’ என்று ஒரு வினாடியாவது யோசிக்க தவறாத மனங்களும் இங்கு ஏராளமாக உண்டு.
அவர்களுக்கெல்லாம் ஒரு ஸ்வீட் செய்தி காத்திருக்கிறது. அந்த நல்ல செய்தியை நாட்டுக்கு அர்ப்பணிப்பவர் பிரபல இயக்குனர் பாண்டிராஜ். ‘பசங்க’ படத்தின் மூலம் அறிமுகமான பாண்டிராஜுக்கு வளர்ச்சியும் வாழ்க்கையும் ஓஹோவென இருப்பதற்கு காரணம் அவர் வெறும் திறமையாளர் மட்டுமல்ல, மிக சிறந்த மார்க்கெட்டரும் கூட! சிம்புவுக்கு ஜோடியாக மீண்டும் நயன்தாராவை நடிக்க வைத்ததிலிருந்தே தெரிந்திருக்கும் அவரது டெக்னிக் பலம்.
இப்போது கிடைத்திருக்கும் செய்தி ஜோதிகா பிரியர்களுக்கு கோலாகலமான செய்தி. பசங்க படம் போலவே குழந்தைகளை மையமாக கொண்டு இன்னொரு படத்தை இயக்கப் போகிறார் பாண்டிராஜ். இதில் ஜோதிகா நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தவர், நேரடியாக சூர்யாவின் பர்மிஷனுடன் ஜோதிகாவுக்கு கதையும் சொல்லிவிட்டாராம். குடும்பத்திற்கே கதை பிடித்திருப்பதால், பாண்டிராஜ் இயக்கும் படத்தில் மீண்டும் ரீ என்ட்ரி ஆகிறார் ஜோதிகா.
இந்த சலுகை ஒரு படத்திற்கு மட்டும்தான் என்கிறது ஜோதிகா வட்டாரம். இருக்கட்டுமே, அடிக்கடி வந்தால் அதற்கு பெயர் அமாவாசை பவுர்ணமி. ஆண்டுக்கொரு முறை வந்தால்தான் தீபாவளி பொங்கல்!