வாடி ராசாத்தி…. வந்தார் ஜோதிகா! இனிப்பு கருவாடான உப்பு கருவாடு?
36 வயதினிலே படத்தின் மூலம், நான் எப்பவும் கலெக்ஷன்தான் குயின்தான் என்பதை நிரூபித்துவிட்டார் ஜோதிகா. வசூலில் பெரிய ஹிட்டடித்த அந்த படம், இன்னும் ஆங்காங்கே ஓடிக் கொண்டிருக்க, அதே வெற்றி மனநிலையோடு அவரை வரவேற்றது ‘உப்பு கருவாடு’ டீம். யாருக்கும் இல்லாத உரிமை கூட இப்படத்தின் இயக்குனர் ராதாமோகனுக்கு உண்டு. ஏனென்றால் ஜோதிகாவுக்கு காலம் முழுக்க பெயர் சொல்லும் விதத்தில் அமைந்த மொழி திரைப்படம் ராதாமோகனின் கை வண்ணம் அல்லவா?
ராதாமோகனின் படம் போலவே பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாத நிகழ்ச்சியாக அமைந்தது உப்பு கருவாடு டீசர் வெளியீட்டு விழா. இதில் கலந்து கொள்ள வந்திருந்த ஜோதிகா, பேசப் போகும் ஒவ்வொரு வார்த்தைக்காகவும் காத்திருந்தார்கள் அவர்கள். டீசரை பார்த்து சந்தோஷப்பட்ட ஜோதிகா, ‘மொழி’ போல் உப்பு கருவாடு திரைப்படமும் ராதா மோகனுக்கு முக்கியமான திரைப்படமாக அமையும். இப்படத்தில் நந்திதா நடித்திருப்பது போலான கதா பாத்திரம் எந்த ஒருக் காலக் கட்டத்திலும் எல்லா கதா நாயகிகளுக்கும் கிடைப்பதில்லை. அந்த வகையில் நந்திதா கொடுத்து வைத்தவர்தான் ‘ என்றார்.
பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும் நடிகை என்பதால், ஜோதிகாவின் வரவை அதிகம் கொண்டாடியது இந்த படத்தின் ஹீரோயின் நந்திதாதான். அபியும் நானும், மொழி படங்களை பார்த்துட்டு அந்த படத்தின் டைரக்டர் படத்தில் நடிக்க மாட்டோமான்னு ஏங்கியிருக்கேன். அந்த படத்தில் நடித்ததும் அல்லாமல், மொழி படத்தின் நாயகியான ஜோதிகாவே இங்கு வந்திருந்து இந்த ட்ரெய்லரை வெளியிடுவது எனக்கு சந்தோஷம். அவங்க எளிமையும் பழகுற விதமும் எனக்கு ஆச்சர்யமா இருக்கு என்றார் நந்திதா.