தயாரிப்பாளர் கோபம் சமுத்திரக்கனிக்கும் கோபம்! காடு வளர்ந்தென்ன மச்சான்… நமக்கு கவுரவம்தானே மிச்சம்?

காடு வளர்க்கும் திட்டம் ஒருபுறம் தீவிரமாக இருந்தாலும், காடு ஒழிப்பு திட்டத்தை அதைவிட கவனமாக செய்து வருகிறார்கள் சமூக விரோதிகள். இந்த நேரத்தில்தான் காடும் அதன் அவசியமும் பற்றி படமெடுக்க வந்திருக்கிறார் கோவை நேரு நகர் நந்து. இவர் ஒரு அரசியல் கட்சி பிரமுகரும் கூட (முதலில் இவர் பெயரை சொல்லுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அது கடைசியில்) ‘காடு’ என்றே பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தை இயக்கியிருக்கிறார் ஸ்டாலின் ராமலிங்கம்.

நிமிடத்திற்கு நிமிடம் சமூக பொறுப்போடு இந்த படம் நகரும் என்கிற நம்பிக்கையை ட்ரெய்லர் தந்தாலும், இது கமர்ஷியல் படம் என்கிற உணர்வை காதல் காட்சிகளும், சண்டைக்காட்சிகளும் உணர்த்தியதை குறிப்பிட்டேயாக வேண்டும். விதார்த், சமுத்திரக்கனி இருவரும்தான் படத்தின் முதுகெலும்பு மற்றும் முக்கிய நரம்புகள்.

கே என்ற இளைஞர் இசையமைத்திருக்கிறார். (மிஷ்கினின் அறிமுகம்) பாடல்கள் மைனா போன்ற முக்கியமான படங்களின் அழகையும் ஈர்ப்பையும் நினைவுபடுத்தியதால் கே-வுக்கு தனி பாராட்டுகள்.

‘இந்த படம் எவ்வளவு முக்கியமான படம் என்பதை நான் சொல்லியாக வேண்டும். படத்தில் ஹீரோவின் பெயர் வேலு. வில்லனின் பெயர் கருணா. காடு என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறதே தவிர, அதை நாடு என்றும் கூட நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்’ என்று ஊசி தைத்துவிட்டு போனார் கவிஞர் யுகபாரதி. (ஓஹோ அப்டியா)

ஸ்டாலின் ராமலிங்கத்திடம் கேட்டால், ‘எல்லா ஊர்லயும் ஒரு வேலுவும் ஒரு கருணாவும் இருக்காங்க. இந்த படத்திலேயும் இருக்காங்க அவ்வளவுதான் என்று தப்பித்துக் கொண்டார். இந்த படத்தின் தயாரிப்பாளர் நந்துவிடம் ஏதாவது கேள்வி இருந்தா கேளுங்க என்று ஒவ்வொரு முறையும் அவர் மைக்கை இவர் பக்கம் தள்ளிவிடுவதிலேயே குறியாக இருந்தார். ஏன்? (சொல்லுவோம்ல?) இருந்தாலும் அவரே நந்துவின் புகழ் பாடி பிரஸ்மீட்டை நிறைவு செய்தார். ‘ஃபைட் சீன்ல யூஸ் பண்ணுறதுக்கு ஒரு முக்கியமான கருவி வேணும்னு ஸ்டன்ட் மாஸ்டர் சொல்லிட்டார். என்ன செலவானாலும் அது வரட்டும் என்று பர்மிஷன் கொடுத்தார் நந்து சார். மும்பையில இருந்து அது வர்ற வரைக்கும் காத்திருந்து படமாக்குனோம். அதனாலேயே செலவு எக்ஸ்ட்ரா ஆச்சு. அந்தளவுக்கு இந்த படத்தை ரசிச்சு உருவாக்கியவர் எங்க தயாரிப்பாளர் நந்து’ என்றார் ஸ்டாலின் ராமலிங்கம்.

அதென்ன கடைசியில் சொல்றோம் என்றொரு சஸ்பென்ஸ்?

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா ஒரு ரேடியோ நிலையத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் பேசியவர்கள் யாரும் தயாரிப்பாளர் நேரு நகர் நந்து பற்றி எதுவுமே சொல்லவில்லையாம். செம டென்ஷன் ஆகிவிட்டார் அவர். ஏம்ப்பா… படம் எடுக்கறதுக்கு பணம் போடுறது நான். என்னைய பற்றி பேசாம எதை எதையோ பேசிகிட்டு இருக்கீங்க என்று சவுண்ட் விட்டாராம். இந்த தாக்குதலை எதிர்பார்க்காத நடிகர் சமுத்திரக்கனி, கோபித்துக் கொண்டு நிலையத்தை விட்டே கிளம்பிவிட்டார். மாலையில் நடைபெற்ற பிரஸ்மீட்டுக்கு கூட சமுத்திரக்கனி வரவில்லை.

அதனால்தான் இந்த செய்தியை எழுதத் துவங்கும்போதே தயாரிப்பாளரான நேரு நகர் நந்து பெயரை சொல்லி துவங்கினோம். திருப்தியா நந்து சார்…?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
போங்கய்யா நீங்களும் உங்க தொழில் பக்தியும்!

ஒரு ரோஜாவுக்காக தொட்டியையும் சேர்த்து வாங்கும் அவலத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார் தனுஷ். இப்படி தனுஷ் செய்வதெல்லாம் ஒரு ‘தினுஷ்’ஷாகவே இருக்கிறதே, என்னப்பா மேட்டர் என்றால், எல்லாம் பேஷன்ப்பா பேஷன்...

Close