காவியத்தலைவன் இப்படிதான்! -வசந்தபாலன் அழைப்பும் விளக்கமும்

ஒரு படத்தை ரிலீஸ் செய்வது கூட பிரச்சனையில்லை. ‘உள்ள வாங்க மக்களே…’ என்று தியேட்டருக்குள் அழைப்பதிலும், அப்படி வர்ற மக்களை ரிப்பீட் ஆடியன்ஸ் ஆக்கவும்தான் அவ்வளவு பாடு படுகிறார்கள் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும். நவம்பர் 14 ந் தேதி காவியத்தலைவன் ரிலீஸ். சித்தார்த், வேதிகா, நாசர், தம்பி ராமய்யா, ப்ருத்விராஜ் உள்ளிட்டோர் நடிக்க, வசந்தபாலன் இயக்கியிருக்கிறார். இசை ஏ.ஆர்.ரஹ்மான்.

தமிழ்ல ஒரு மியூசிக்கல் பிலிம் வந்து வெகு நாளாச்சு. அதை போக்கணும்னுதான் இந்த படம் பண்ணியிருக்கோம். மொத்தம் 14 பெரிய பாடல்களும் அதுபோக நிறைய குட்டி குட்டி பாடல்களும் இருக்கு. ரஹ்மான் சார் அப்படி ரசிச்சு ரசிச்சு பாடல்கள் போட்டுக் கொடுத்துருக்கார் என்று நெகிழ்ந்தார் வசந்தபாலன். கதை? 1940 களில் வாழ்ந்த நாடக மேதை கிட்டப்பா, அவரது காதலியும் துணைவியுமான கே.பி.சுந்தராம்பாள் ஆகியோரின் கதையை தழுவி எழுதப்பட்டிருக்கிறது. அப்படியே நேரடியாக அவங்க கதையை எடுக்காமல், நிறைய சுவாரஸ்யம் சேர்த்துருக்கோம். அந்த காலத்தில் நாடகம் பார்க்க வாங்க என்று அழைப்பதற்கு ஒரு யுக்தி வைத்திருந்தார்கள். தெருவுக்குள் மேக்கப் போட்டுக் கொண்டு வருவார்கள். மாலையில் நாடகத்தில் வரப்போகும் ஒரு காட்சியை அந்த வீதியிலேயே நடித்துக் காட்டுவார்கள். மக்கள் ஆசையாய் பார்த்துக் கொண்டிருக்கும் இடத்தில் டக்கென்று கட் கொடுத்து, மிச்சத்தை பார்க்கணும்னா ஈவினிங் நாடகக் கொட்டாய்க்கு வாங்க என்று கூறிவிட்டு கிளம்புவார்கள். இப்படி தெருத்தெருவாக வந்து ட்ரெய்லர் ஓட்டியிருக்கிறார்கள் என்பது எவ்வளவு சுவாரஸ்யமான விஷயம். அதையெல்லாம் இந்த படத்தில் வைச்சுருக்கோம் என்றார் வசந்தபாலன்.

ஒரு ஆக்ஷ்ஷன் படம் மாதிரி காட்சிகள் சட்டு சட்டுன்னு மாறிடாது. விறுவிறு சேசிங் இருக்காது. ஆனால் சுவாரஸ்யமான காட்சிகள் இருக்கும். நீரோடை மாதிரி ஒரு திரைக்கதை இருக்கும். ரசிகர்கள் அதுக்கேற்ற மனநிலையோடு தியேட்டருக்குள் வரணும் என்று வசந்தபாலன் கூறியபோது வியப்பாக இருந்தது.

தியேட்டருக்கு உள்ளே வரும்போதே ஆடியன்ஸ் அதற்கேற்ற மனநிலையோடு வர வேண்டும் என்பதுதான் சிறந்தது. இல்லையென்றால் அவன் தேடுகிற எதுவும் திரையில் இருக்காது. அப்புறம் படம்…? ‘ங்கொய்யால’ என்பார்கள் வெளியே வந்து. அதையெல்லாம் தவிர்க்கதான் படம் சார்ந்த மனநிலையோடு ரசிகர்களை அழைக்கிறார் வசந்தபாலன்.

மக்களே… உள்ள வாங்க, உள்ள வாங்க!

பின் குறிப்பு- இந்த படத்தின் விளம்பரங்களை அந்தகால ஸ்டைலில் செய்யப் போகிறார்களாம். அதாவது மாட்டு வண்டியில் புனல் ரேடியோ கட்டி…., பிட் நோட்டீஸ் விநியோகித்து… ஒரு பழமையான முறையில்! இந்த பழமையான முறைதான் இப்போ புதுமையான முறை!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
விஜய், முருகதாஸ், லைகாவுக்கு மதுரை நீதிமன்றம் நோட்டீஸ்! இது 2ஜி வசனத்தால் வந்த வினை!

இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கு குறித்து கத்தி படத்தில் தவறான வசனம் பேசிய, அதை எழுதிய, படமாக எடுத்த நடிகர் விஜய்,...

Close