குழந்தையாவே இருந்திருந்திருக்கலாம்! ஏங்கிய ஹீரோயின்!

சில மாதங்களுக்கு முன் குழந்தைகளுக்கான படம் என்ற லேபிளில் வெளியே வந்தது ஒரு படம். ‘இதுல எங்கப்பா குழந்தைகளுக்கான மெசேஜ் இருக்கு. அந்த புள்ளைங்க லவ்வை பற்றியும், வயசுக்கு வர்றதை பற்றியும் அல்லவா பேசுறாங்க?’ என்று அப்படத்தை பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சியானார்கள். அத்துடன் அந்த படத்தையும் ஒன்றிரண்டு ஷோவிலேயே ஓரங்கட்டினார்கள். இந்த உண்மையெல்லாம் புரிந்தே படம் எடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் கல்யாண் என்று நம்ப வேண்டியிருக்கிறது. ஏனென்றால் இந்த படத்தின் கதை சுருக்கம் அப்படி.

அனாதை ஆசிரமத்தை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கும், பக்கத்திலேயே அமைந்திருக்கும் வசதியான பள்ளி மாணவ மாணவிகளுக்கும் இடையே நடக்கும் கலாட்டாக்கள்தான் படமாம். ஆடுகளம் நரேன், முண்டாசு பட்டி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான படங்களில் நடித்து வரும் காளி, அப்புறம் நண்டும் சிண்டுமாக அரை டஜன் பொடிசுகள் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தார் நடிகை தன்ஷிகா. இதில் நிறைய குழந்தைகள் நடிச்சிருக்காங்க. அவங்களையெல்லாம் பார்க்கும் போது நாமளும் சின்ன குழந்தையா இருந்திருக்கக் கூடாதான்னு தோணுது. குழந்தையா இருந்திட்டா எந்த கவலையும் இல்ல. வளர வளரதான் எல்லாம் வந்து சேருது என்று வருத்தப்பட்டார். (ஆருப்பா அது தன்ஷிகாவுக்கு டார்ச்சர் தர்றது?)

குழந்தைகளை வைத்து படம் எடுப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை நரேனும் விளக்கினார். என் குருநாதர் பாலு மகேந்திரா அடிக்கடி சொல்வார். ஒருவர் தன் முதல் படத்தில் குழந்தைகளையும் அனிமல்சையும் நடிக்க வைக்கவே கூடாது. அப்படி வச்சா அது பெரிய சிக்கல்லதான் கொண்டு போய் விடும்னு. ஆனால் முதல் படத்திலேயே கல்யாண் அந்த துணிச்சலான முயற்சியை கையாண்டிருக்கிறார். அதையும் சிறப்பா செஞ்சுருக்கார் என்றார்.

தெகிடி இயக்குனர், முண்டாசுபட்டி இயக்குனர் என்று குறும்பட இயக்குனர்களும் வாழ்த்த வந்திருந்தார்கள். ஏனென்றால் நாளை இயக்குனர் நிகழ்ச்சியில் பல முறை பரிசு வென்றவராம் இந்த கல்யாண். அவர் ஒரு கதை குடோன். எப்ப கதை கேட்டாலும் சட்டுன்னு ஒரு புதுக்கதையை உருவாக்கி சொல்லிடுவார். அவரால் பத்தாயிரத்திற்கும் குறும்படம் எடுக்க முடியும், ஒரு லட்சத்திற்கும் குறும்படம் எடுக்க முடியும் என்று வியந்தார்கள் அவர்கள்.

‘கத சொல்லப் போறோம்’ படத்தை வாங்கி வெளியிடுகிறது E5 என்ட்டர்டெயின்மென்ட்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சிறையில் அம்மா … அதிர்ச்சியில் ஜீவாவின் ‘ யான் ’

மற்ற சேனல்களை விட கொஞ்சம் கம்மியாத்தான் கிடைக்கும். ஆனா பிரமோஷன் விஷயத்துல பின்னிருவாங்க பின்னி... அதனால படம் அவங்களுக்குதான்! என்று ஒரு குறிப்பிட்ட சேனலுக்கு மட்டும் முதல்...

Close