தனக்கென ஒரு ‘பாணி’ அது தண்டபாணி!
அதற்குள்ளாகவா போய் சேர வேண்டும் தண்டபாணி? தமிழ்சினிமா விமர்சகர்கள் தனக்கென ஒரு பாணி என்று அடிக்கடி எழுதுவதுண்டு. அந்த ‘பாணி’ தண்டபாணி என்பதை காதல் படத்தில் அறிமுகமாகும் போதே அறிவித்தவர்தான் அவர்.
இன்று அதிகாலை மாரடைப்பால் மரணமுற்ற தண்டபாணி இதுவரை 161 படங்களில் நடித்துவிட்டாராம். அதற்கு காரணம் அவரது நடிப்பு மட்டுமல்ல, குரல்! சாதாரணமாக மிமிக்ரி கலைஞர்களுக்கு சட்டென்று வசப்படுகிற குரல்களை விடவே மாட்டார்கள். காலம் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயனில் வந்து நின்றாலும் இன்னமும் ரகுவரன், நம்பியார், வினுச்சக்கரவர்த்திகளை விடவே மாட்டார்கள் அவர்கள். இந்த கலைஞர்களின் மிகப்பெரிய சொத்தாகவே இருந்தது தண்டபாணியின் குரல். கிராமபுறங்களில் நடைபெறும் காதுகுத்து, தீமிதி திருவிழாக்களில் நடைபெறும் எல்லா மிமிக்ரிகளிலும் தண்டபாணியின் குரல் இருக்கும்.
காதல் படத்தின் பத்திரிகையாளர் ஷோ முடிந்ததும் அங்கு வந்திருந்த பாலாஜி சக்திவேலிடம், அந்த ஆள் யாருங்க? எங்க கண்டு புடிச்சீங்க ? என்று தண்டபாணி பற்றி கேட்காத பத்திரிகையாளர் இல்லை. அவரது திடீர் மரணம் திரையுலகத்திற்கு இழப்பு என்பது ஒரு புறம் இருந்தாலும், தண்டபாணியின் மறைவு ஐம்பது வயதுக்கு மேலும் குடிப்பழக்கத்தை தொடர்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை!
அவரது ஆன்மா சாந்தியடையட்டும்….!