காதலும் கடந்து போகும் விமர்சனம்

காதலும் ‘நடந்து’ போகும்… என்பதைதான் ‘கடந்து’ போகும் என்று மாற்றிவிட்டார்களோ? என்று அச்சப்படுகிற அளவுக்கு ஸ்லோவான திரைக்கதை! ஆனால் அக்கம் பக்கம் நகர விடாமல் அந்த திரைக்கதைக்குள் நம்மை டைட்டாக உட்கார வைத்திருக்கிறார் நலன் குமரசாமி! கொரியன் படம் ஒன்றின் ரீமேக் இது. அந்த மூலக்கதை முனிஸ்வரன்களுக்கு முட்டை பரோட்டாவே படைக்கலாம்… மனசார! அதுவும் இரண்டு நடிப்பு புலிகள் இந்த கதைக்குள் நுழைந்துவிட்டால் என்னாகும் என்பதை நிமிஷத்துக்கு நிமிஷம் புரிய வைத்துக் கொண்டேயிருக்கிறார்கள் விஜய் சேதுபதியும் மடோனாவும்! டைரக்டர் தனது ஸ்கிரிப்ட்டில் எங்காவது முற்றுப்புள்ளி, கால் புள்ளி வைத்திருந்தால் கூட, அதற்கும் ஒரு பர்பாமென்ஸ் கொடுத்திருப்பார்கள் போலிருக்கிறது. அவ்வளவு அழகு!

விழுப்புரம் ஸ்டேஷன் மாஸ்டரின் பெண் மடோனா, ஐடி வேலையில் சேரும் ஆசையில் சென்னைக்கு ஓடி வருகிறார். வந்த இடத்தில் பாதியிலேயே வேலை பறிபோக, ஒரு சுமாரான வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டு வேலை தேடுகிறார். பார்த்தால்…? எதிர்வீட்டில் ஒரு இளைஞன். தொழில் அடியாள். லட்சியம் பார் வைப்பது! மேற்படி இளைஞரான விஜய் சேதுபதியை பார்த்த மாத்திரத்திலேயே பற்றிக் கொண்டு வருகிற மடோனாவுக்கு, அவரால் ஆகிற உதவிகள் என்ன? மடோனா விஜய் சேதுபதி மீது மையல் கொள்வது எப்போது? இந்த ஒரு அடி ஸ்கேலை வைத்துக் கொண்டு ரயில் தண்டவாளமே போட்டிருக்கிறார் நலன்.

சமீபத்தில் வெளிவந்த ‘நானும் ரவுடிதான்’ படத்தில்தான் ரவுடியாக நடித்திருந்தார் விஜய் சேதுபதி. இந்த படத்திலும் கிட்டதட்ட அதே ரோல். ஆனால் அதற்கும் இதற்கும்தான் எத்தனை வித்தியாசம்! டயலாக்குகளை உச்சரிக்கிற அலட்சியத்திலேயே அவரது முழு கேரக்டரும் வெளிப்பட்டு விடுகிறது. ரவுடிதான். ஆனால் நல்லவன் இமேஜுக்கு ஏற்றார் போல நடந்து கொள்ளும் அந்த கேரக்டர் பார்க்க பார்க்க பிடித்துவிடுவதில் வியப்பில்லை. முக்கியமாக அந்த இன்டர்வியூ சீன். மடோனா வரும்வரை அந்த இன்டர்வியூ ஆபிசர்களை அவர் சின்னாபின்னமாக்குவதும், அதற்கப்புறம் மடோனா எதிரிலேயே அவர் தரதரவென இழுத்துச் செல்லப்படுவதும் மனசை நிறையவும் பதறவும் வைக்கிற காட்சிகள். தமிழ்சினிமா வியாபாரத்தில் கொடி கட்டி பறக்கும் ஒரு இமேஜ் ஹீரோ, கதைக்காக நாலு அடியாட்களிடம் அடிவாங்கி சரிவதற்கெல்லாம் ஒரு மனசு வேண்டும். வெல்டன் விஜய் சேதுபதி.

தமிழ்சினிமாவுக்கு நயன்தாரா போலவே ஒரு நடிப்பு ராட்சஷி கிடைத்திருக்கிறார். மடோனா! தண்ணியடித்துவிட்டு ஸ்லோ அண்டு ஸ்டடியாக அவர் உளற ஆரம்பிக்கிற அழகை இன்னும் எத்தனை ‘ரவுண்டு’ வேண்டுமானாலும் ரசிக்கலாம். மன இறுக்கத்திற்கு ஒரே வழி குடிதான் என்கிற அந்த ஒரு காட்சிக்கு மட்டும் நம்ம சார்பில் ஒரு ரெட் கார்டு!

படத்தில் ஆங்காங்கே இழையோடும் மிக மெல்லிசான நகைச்சுவை இதம். குறிப்பாக விஜய் சேதுபதியிடம் பஞ்சாயத்துக்கு வரும் அந்த கள்ளக்காதல் மேட்டர்!

சமுத்திரக்கனி மூன்றே மூன்று காட்சிகளில் வருகிறார். இதை ஒரு ஜுனியர் ஆர்ட்டிஸ்ட்டே செய்துவிட்டு போயிருக்கலாம். என்னாச்சு சமுத்திரம் உங்களுக்கு?

படத்தில் ஒரு காட்சியில் தலை காட்டி விட்டு போகும் நடிகர்கள் கூட சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

சந்தோஷ் நாராயணனின் இசை வழக்கம் போல டாப்! ஆனால் சேதுபதி படத்தில் வருவது போலவே இதிலும் ஒரு பாடல். ஏணுங்ணா?

ரசனை மேம்பாட்டு திட்டத்துடன் எடுக்கப்பட்டிருக்கும் படம்! அத்துடன் மனசை விட்டு கடந்து போகவே முடியாத காதல் படம் கூட!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
வாங்கம்மா! இப்படி பண்ணுங்கம்மா!

எதன் அருமையும் அது இல்லாதபோதுதான் தெரியும் என்பார்கள். அப்படிதான் ஆகியிருக்கிறது இந்த விஷயமும்! ஒரு காலத்தில் ‘சொல்வதெல்லாம் உண்மை’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி, அதை நடத்தி வந்த...

Close