காக்கா முட்டை – விமர்சனம்

இடது கையில உட்கார்ந்திருக்கிற கொசுவை வலது கை வந்து அடிப்பதற்குள் சம்பந்தப்பட்ட கொசு, அதே ஸ்பாட்டில் ஏழெட்டு முட்டைகள் விட்டு குஞ்சு பொறித்திருந்தால், அதுதான் நாம் இத்தனை காலமும் பார்த்துக் கொண்டிருக்கும் அவார்டு சினிமாவின் லட்சணம்! படத்தில் வரும் கேரக்டர்கள் நடக்க, படுக்க, பல்லு விளக்க என்று எல்லாவற்றையும் நிஜமாகவே செய்து கொண்டிருப்பார்கள். இப்படி அவார்டு சினிமாவின் சூத்திரங்கள் அடிவயிற்றை கலக்கிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில்தான் இந்த காக்கா முட்டையும் வந்திருக்கிறது. படம் எப்படி? சேரிக் குழந்தைகளின் அவல வாழ்க்கையை அழுது வடித்து வைக்காமல் கலகலப்பாக சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர் மணிகண்டன்.

பீட்சா ருசி எப்படியிருக்கும்? நாக்கை சப்புக் கொட்டுகிற இரண்டு குட்டிப் பசங்கள், அதற்காக உழைத்து, அதற்காக பணம் சேர்த்து, அதை வாங்கி ருசிக்க துடிப்பதுதான் கதை. இந்த சின்னஞ் சிறுகதைக்குள் மணிகண்டன் வைத்திருக்கும் திருப்பங்களும், சுவாரஸ்யங்களும் கொஞ்ச நஞ்சமல்ல! குப்பத்தின் வலி, குழந்தைகளின் வறுமையறியா விளையாட்டு, மீடியாவின் செய்தி அரிப்பு, சுற்றுசூழலின் அலட்சியம் என்று எல்லா பக்கமும் நின்று கணை வீசியிருக்கிறார். ஆனால் அதன் வேகம் யார் கண்ணுக்கும் புலப்படாத நுண்ணறிவுடன்! படத்தை இயக்கிய மணிகண்டன்… சாதாரண ஆளில்லை, மஹா கலைஞன்தான்!

எல்லா குழந்தைகளும் இயல்பாக விளையாடிக் கொண்டிருக்க, தனது தம்பியின் உதவியுடன் காக்காவின் கவனத்தை டைவர்ட் பண்ணிவிட்டு, அதன் முட்டையை ‘லபக்’ செய்யும் அந்த அண்ணனும், அவன் தம்பியும்தான் இந்த படத்தின் ஆகப்பெரிய சொத்து. இந்த கேரக்டர்களில் நடிக்க இவர்களை விட்டால் வேறு பசங்களே அமைந்திருக்க மாட்டார்கள். அந்தளவுக்கு கச்சிதம். ‘மை நேம் இஸ் சின்ன காக்காமுட்டை’, ‘மை நேம் இஸ் பெரிய காக்கா முட்டை’ என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும் அவர்கள்தான் அந்த பாழாய் போன பீட்சாவுக்கும் ஆசைப்படுகிறார்கள். டிவியில் வரும் அந்த பீட்சாவை ஏக்கத்தோடு பார்த்து, டெலிவரிக்கு அந்த வழியாக செல்லும் பீட்சா பையனை தந்திரமாக வழி மறித்து, ‘ரோட்டுக்கு போக வழி சொல்றேன். அதுக்கு முன்னாடி பீட்சாவை ஒரு தடவ கண்ல காட்டேன். எப்படியிருக்கும்னு பார்த்துடுறோம்’ என்று பார்த்து சுவாசித்து அனுபவிக்கிற அந்த காட்சியில் கூட அதற்கப்புறம் என்னென்ன திருப்பங்களை இந்த கதை சந்திக்க போகிறது என்பதை யூகிக்கவே முடியவில்லையே! கிரேட்…

பேரக்குழந்தைகள் ஆசைப்படுகிறார்கள் என்பதற்காக அந்த குப்பத்து பாட்டியே பீட்சாவின் படம் பார்த்து அப்படியே அதை செய்ய ட்ரை பண்ணுகிற காட்சி ரகளை. ‘ஐயே… ஆயா. இது ஒண்ணும் பீட்சா இல்ல. அதுல இழுத்தா நூலா வரும்’ என்று பசங்க சொல்ல, ‘கெட்டுப் போனாதாண்டா நூல் வரும்’ என்று ஆயா சொல்கையில் கிழிகிறது தியேட்டர்.

புது சட்டை போட்டுக் கொண்டு போனால்தான் பீட்சா கடைக்குள் விடுவார்கள் என்று நினைத்துக் கொண்டு புது சட்டையை தந்திரமாக அணிந்து கொள்ளும் சிறுவர்கள் இருவரும் மறுபடியும் பீட்சா கடைக்குள் நுழைகிற நேரம்தான் படத்திற்கே நல்ல நேரம். அதற்கப்புறம் ஒரு ஆக்ஷன் படத்தின் அடுத்தடுத்த காட்சிகள் போல விறுவிறுவென பற்றிக் கொள்கிறது ஓட்டம். பீட்சா கடை வாட்ச்மேன் பசங்களை அறைந்துவிட, அது வாட்ஸ் அப்பில் பரவி சன் டி.வி யின் தலைப்பு செய்தியாகி, எல்லா சேனலும் அந்த குப்பத்தை தேடி வந்து அந்த சின்ன சம்பவத்தை பெரிய அரசியலாக்கிவிடுகிற வேகத்தில், சமூக அநியாயங்களை சகட்டுமேனிக்கு தோலுரிக்கிறார் மணிகண்டன்.

தங்கள் இருவரையும் பற்றிதான் நாடே விவாதித்துக் கொண்டிருக்கிறது என்பதே தெரியாமல் அந்த டி.வி தொகுப்பாளினியை தாண்டிப்போகிற அந்த சிறுவர்களின் நிலை, படம் பார்ப்பவர்களை சிரிக்க மட்டுமல்ல, நிறைய யோசிக்கவும் வைக்கும்.

முதலில் விக்னேஷ், ரமேஷ் என்ற அந்த இரு சிறுவர்களுக்கும்தான் அவ்வளவு பாராட்டுகளையும் அள்ளித்தர வேண்டும். ஒரு சின்ன நூலிழை அளவுக்கு கூட இது நடிப்பு என்பதே தெரியாமல் நடித்திருக்கிறார்கள். நிஜத்தில் அவர்கள் இருவருமே அந்த குப்பத்துக் குழந்தைகள்தான் என்பது ஜீரணிக்க முடியாத வலி. எவ்வளவு பெரிய நடிகன்களை கொண்டிருக்கிறது அந்த குப்பம்? நடிகர் சிம்புவின் படம் சம்பந்தப்பட்ட அந்த காட்சியை டி.வி யில் பார்த்துவிட்டு அப்படியே அவரைப்போலவே நடித்துக் காட்டுகிற அந்த திறமை இன்னும் எத்தனை குழந்தைகளுக்கு இருக்கிறதோ அங்கே? சினிமாவில் காட்ட்டப்படுகிற கெட்ட விஷயங்கள் எப்படி பசங்க மனசில் ஈசியாக ஒட்டிக் கொள்கிறது என்பதற்கு உதாரணமாக அதை சொல்ல வந்திருக்கிறார் டைரக்டர்.

அந்த ஆயா உட்பட படத்தில் நடித்திருக்கும் எல்லாருமே நிஜம்போல வாழ்ந்துவிட்டார்கள். குறிப்பாக நடிகை ஐஸ்வர்யா. இவர்தான் அந்த பசங்களின் அம்மா. ஒருபுறம் அவர்களை அதட்டிக் கொண்டே அவர்களின் குறும்பையும் ரசிக்கிற காட்சிகளில் ஒரு நிஜ அம்மாவாகவே ஆகிவிட்டார் அவர். வளர்ந்து வரும் நடிகை, இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்க சம்மதித்திருப்பதும், அதுவும் மேக்கப் இல்லாமல் நடிக்க முன் வந்திருப்பதும் எவ்வளவு பாராட்டுகளுக்கும் தகுதியான நடிகையாக அவரை உயர்த்தியிருக்கிறது. இனியும் தொடருங்கள் ஐஸ்வர்யா.

முழு படமுமே கச்சிதம் என்று கூறிவிட்டபின் எடிட்டிங், இசை, ஆர்ட் டைரக்ஷன் என்று தனித்தனியாக சொல்வானேன். எல்லாரையும் நிற்க வைத்து வணங்குகிறார்கள் நல்ல சினிமா விரும்பிகள்!

ஆங்… சொல்ல மறந்தாச்சே. படத்தில் வரும் ஒரு நிமிஷ காட்சியில் கவுரவ தோற்றத்தில் நடித்திருக்கிறார் சிம்பு. ஒப்புக் கொண்ட அவரது பெரிய மனதுக்கு தனி பாராட்டுகள். இருந்தாலும், படத்திலும் அவரை நல்லாவே ஓட்டுகிறார்கள். பட்… நிஜம்தானே அது கூட?

ஒரு குப்பத்திற்குள் இப்படியெல்லாம் வாழ்கிறார்கள் என்பதை இரண்டு தெரு தள்ளியிருக்கிற ஜனங்களே உணர்ந்திருக்கப் போவதில்லை. ஆனால் அந்த எளிய குப்பத்து ஜனங்களின் வாழ்க்கையை, அந்த சிரமத்திலும் சந்தோஷமாக வாழும் அவர்களின் உலகத்தை, உலக சினிமாவாக்கி ஊரெங்கும் கொண்டு போயிருக்கிறார் இயக்குனர் மணிகண்டன்.

காக்கா முட்டை மூலமாக தமிழ்சினிமாவுக்கு ஒரு தங்க முட்டை கிடைத்திருக்கிறது. மணிகண்டன்…. இதே போல இன்னும் நிறைய சொல்லுங்கள். பார்த்து ரசிக்க காத்திருக்கிறோம்….!

-ஆர்.எஸ்.அந்தணன்

முக்கிய குறிப்பு- இந்த படத்தை நடிகர் தனுஷும், இயக்குனர் வெற்றிமாறனும் தயாரித்திருக்கிறார்கள். இதற்காகவே அவர்களை மாற்று சினிமா ரசிகர்கள் மனமார பாராட்டலாம்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
எதுக்கு மச்சான் காதலு?

வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை என்று வரிசையாக சிவகார்த்திகேயன் படங்களாக வெளியிட்டு அவருக்கு வெற்றிக்கனி பறிக்க உதவிய நிறுவனம் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம்....

Close