கக்கனையே தெரியாத ஜனங்கள் அவரது மனநோயாளி மகனை பற்றியா யோசிக்கப் போகிறார்கள்? டைரக்டர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
ருத்ரனுக்கும் மன நோய் காப்பகத்திற்கும் பூர்வ ஜென்ம தொடர்பு இருப்பதாகவே படுகிறது. பிரபல மனநல மருத்துவர் ருத்ரனை அறியாதவர்கள் இருக்க முடியாது. அதே பெயரை கொண்டிருக்கும் டைரக்டர் ருத்ரனும் தனது ‘வெற்றிச் செல்வன்’ படத்தின் அழுத்தமான க்ளைமாக்சை மன நோய் காப்பகத்தில் வைத்திருக்கிறார் என்பது எவ்வளவு பெரிய ஆச்சர்யம்! ‘சென்னை கீழ் பாக்கம் மன நல மருத்துவமனையில் பத்து நாளுக்கும் மேல் ஷுட் பண்ணினோம். ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கிதான் பண்ணியிருக்கோம். நிஜ நோயாளிகள் யாரையும் படத்தில் காட்டவில்லை என்றாலும், அவங்க கூட பேசக்கூடிய வாய்ப்பு கிடைச்சது’.
‘பெரிய வருத்தமான செய்தி, முன்னாள் அமைச்சரான கக்கனின் மகன் கடந்த ஐம்பது வருஷக்கும் மேலாக இந்த மருத்துவமனையில் நோயாளியாக இருக்கிறார். அவரை யாருமே கண்டு கொள்ளவில்லை’ என்றார் ருத்ரன். காமராஜர் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர்தான் கக்கன். எளிமை, எளிமை என்று தன் வாழ்நாள் முழக்க எளிமையாகவே இருந்து எளிமையாகவே செத்துப் போனவர் அவர். ஒரு முறை அரசு மருத்துவமனையில் ஒரு ஓரமாக கீழே படுக்க வைக்கப்பட்டிருந்தார் அவர். யாரோ ஒரு வயசாளிதான் அவரை கக்கன் என்று அடையாளம் கண்டு ஊர் உலகத்திற்கு சொல்ல, மீடியாக்கள் அதை பெரிது படுத்தி அவருக்கு ஒரு ‘பெட்’ வாங்கி கொடுத்தது. (நேர்மையாளர்களுக்கு இதுதான் தேசம் தருகிற கவுரவம்)
அதுபோகட்டும்… ஹீரோ அஜ்மல் இந்த படத்தில் மன நோயாளியாக நடித்திருக்கிறாராம். ‘சேது’வுக்கு பிறகு உள்ளத்தை பிழியும் இன்னொரு க்ளைமாக்ஸ்சாக இப்படம் இருக்கும் என்றார் ருத்ரன். படத்தில் டபுள் ஆக்ட்டில் நடித்திருக்கும் அஜ்மலுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் ராதிகா ஆப்தே.
காமெடி ரூட்டில் போய் கொண்டிருக்கும் தமிழ்சினிமாவின் ஸ்டியரிங்கை வலுக்கட்டாயமாக திருப்புமா வெற்றிச்செல்வன்?