சந்தானத்தை பற்றி பேச விரும்பாத கமல்!
சந்தோஷத்துக்கு வரலேன்னாலும் துக்கத்துக்கு வந்து சேர் என்பார்கள். ஆனால் தமிழ்சினிமாவில் மட்டுமல்ல, சந்தானத்தின் வாழ்விலும் முக்கிய நபராக விளங்கிய இராம.நாராயணன் மறைவுக்கு சந்தானம் வரவில்லை. லிங்கா படப்பிடிப்பில் இருந்தததாக கூறப்படுகிறது. எங்கோ வெளிநாட்டில் இருந்த கவிஞர் வைரமுத்து, அங்கிருந்தபடியே தன் இரங்கலை தெரிவித்துக் கொண்டதை போல, லிங்கா படப்பிடிப்பிலிருந்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தால், போட மாட்டேன் என்றா சொல்லியிருக்கும் மீடியா?
ஆனால் அதுபற்றியெல்லாம் யோசிக்கக் கூட நேரமில்லாமல் நடித்துக் கொண்டிருக்கிறார் அவர். ஹ்ம்ம்ம்… அவரது இந்த ‘மிதப்பு’ கமல்ஹாசனையே கவலை கொள்ள வைத்திருப்பதுதான் நியூ நியூஸ்! அண்மையில் சந்தானம் முக்கிய ரோலில் நடித்திருக்கும் ‘வாலிப ராஜா’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார் கமல். இந்த நிகழ்ச்சிக்கு அவரை அழைத்தது தயாரிப்பாளர் எச்.முரளிதான் என்றாலும், சந்தானம் அந்த நிகழ்ச்சிக்கு வராதது பளிச்சென உறுத்தியதாம் கமலுக்கு. ‘அவர் எங்கே?’ என்று கேட்டதாகவும் கூறுகிறார்கள்.
இது ஒரு புறமிருக்க விழாவில் பேசிய கமல், ஒரு வார்த்தை கூட சந்தானத்தை பற்றி பேசவில்லை. மிக எச்சரிக்கையாக சந்தானத்தின் பெயரை தவிர்த்துவிட்டுதான் பேசினார். ஆனால் படத்தின் இசையமைப்பாளரான ரதன் என்ற புதியவரை பற்றி ஸ்பெஷலாக அவர் பேச பேச, முன் வரிசையில் உட்கார்ந்திருந்த ரதனின் பெற்றோர்கள் கண்களில் ஆனந்த கண்ணீர். கமல் இளம் இசையமைப்பாளர் ஜிப்ரானுடன் கை கோர்த்த நாளிலிருந்தே புதுப்புது இசையமைப்பாளர்களை ஸ்பெஷலாக பாராட்ட தவறுவதில்லை. அந்த அதிர்ஷ்டம் ரதனுக்கும் கிடைத்திருப்பதில் வியப்பில்லைதான்.