பாலிட்டிக்ஸ் பற்றி தெரியணும்னா எங்கிட்ட வாங்க! -கமல் அழைப்பு
தமிழ்சினிமாவின் முதல் பேசும்படம், ‘காளிதாஸ்’. இத்தனை வருடம் கழித்து ‘காளிதாஸ்’ என்ற அதே பெயருடன் ஒரு நடிகர் அறிமுகமாகிறார். ஆனால் இந்த ஒரு ஒற்றுமைக்காக மட்டுமே கவனிக்கப்பட வேண்டியவர் அல்ல அவர். தமிழ்நாட்டில் பிறந்து கேரளாவில் கொடி நாட்டிய நடிகர் ஜெயராமின் மகன் என்பதாலும் சற்று கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டிய இளைஞராக இருக்கிறார் காளிதாஸ்.
‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்குகிற அடுத்தப்படம் ‘ஒரு பக்க கதை’. இதில்தான் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார் காளிதாஸ். இவரை பொறுத்தமான இயக்குனர் ஒருவர் அறிமுகப்படுத்தினாலும், பத்திரிகை உலகத்திற்கு அறிமுகப்படுத்த வந்திருந்தார் கலைஞானி கமல். தன் மகனை கமல் அறிமுகப்படுத்தும் அந்த இனிய வைபவத்தை காண குடும்பத்தோடு வந்திருந்தார் நடிகர் ஜெயராம். அவர் பேச பேச புருவம் விரித்தது பிரஸ். ஏன்? ‘ஜெயராமுக்கு சொந்த ஊர் நம்ம கும்பகோணமாம்ல?’
‘கும்பகோணத்திலிருந்து மாயவரம் போற வழியில் இருக்கிற அம்மங்குடிதான் எங்கம்மாவோட ஊர். அப்பல்லாம் நாங்க சினிமாவுக்கு போகணும்னா கும்பகோணம் டவுனுக்குதான் போகணும். அங்க மூணு தியேட்டர் உண்டு. பஸ்பிடிச்சு போனா மூணு தியேட்டர்லேயும் மூணு படத்தை பார்த்துட்டுதான் திரும்புவோம். ஒரு நான் அங்குள்ள ஜூபிடர் தியேட்டர்ல மரோசரித்ரா படம் பார்த்தேன். யப்பா… என்ன மாதிரி ஒரு நடிகன்னு கமல் சாரை வியந்தேன். நான் சொப்பனத்திலேயும் நினைச்சு பார்த்ததில்ல… கமல் சாரோட நானும் நடிப்பேன் என்றோ, என் மகனை கமல் சார் வாழ்த்தி அறிமுகப்படுத்துவார் என்றோ! இந்த இனிமையான சந்தர்ப்பத்தை வழங்கிய அந்த கடவுளுக்குதான் நான் நன்றி சொல்லணும்’ என்று நெகிழ்ந்தே போனார்.
இறுதியாக காளிதாசை வாழ்த்த வந்தார் கமல்.
காளிதாஸ் என்ற பெயர் சினிமாவில் யாருக்கும் கிடையாது. இந்தப் பெயர் மிக வித்தியாசமான பெயர். ஜெயராம் ஏற்கனவே பிளான் செய்துதான் இப்படி பெயர் வைத்திருக்கிறார். குடும்ப விஷயத்திலும் பிளான் செய்துள்ளார். அதனால்தான் அவருக்கு ஒரு பையன். ஒரு பெண். கணேசன் என்ற பெயர் தமிழ் சினிமாவில் பிரபலமான பெயர். அதனால்தான் கணேசன் என்ற பெயரில் வந்து பின்னர் ஜெமினி கணேசன் என்று மாற்ற வேண்டி வந்தது. இவருக்கு அந்த பெயர் மாற்றம் தேவை இல்லை. இவரை அறிமுகப்படுத்துவது நான் இல்லை. இயக்குனர்தான். நான் சும்மா இவர்தான் ஜெயராம் மகன் காளிதாஸ் என்று சொல்வதற்காக மட்டும்தான். இனிமேல் இயக்குனர் மற்றும் காளிதாஸ் கையில்தான் உள்ளது.
டி.என்.ஏ.யில் எனக்கு நம்பிக்கை இல்லை. உழைப்பில்தான் எனக்கு நம்பிக்கை உள்ளது. டி.என்.ஏ. எவ்வளவு பலமாக இருந்தாலும், அதை விரயம் செய்யும் ஊதாரித்தனமான பிள்ளையாக இருந்தால் டி.என்.ஏ. ஒன்றும் செய்யாது. நல்லவேளை காளிதாசுக்கு முன்னாடியே சினிமாவை பற்றி அனுபவம் உள்ளது. எதையும் கண்டு வியக்கமாட்டார். சினிமாவில் பணிவை மட்டும் கற்றுக்கொள்ளாதீர்கள். சினிமாத்துறைகளில் இருக்கும் எல்லா கஷ்டங்களையும் கற்றுக்கொள்கிறீர்களோ இல்லையோ புரிந்தாவது கொள்ளுங்கள். லைட் பாய், தயாரிப்பாளர், புரொடக்சன் நபர் என்ன செய்கிறார் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
ஏதாவது புரியாத குழப்பமான இண்டஸ்ட்ரீஸ், பாலிட்டிக்ஸ் அப்படினா என்னிடம் வந்து கேளுங்கள். அது ஜெயராமுக்கு தெரியாது. நான் ரொம்ப பட்டிருக்கிறேன். அதனால் எனக்குத் தெரியும். நல்லவர்கள் சூழ்ந்திருக்கும் உங்கள் வாழ்க்கையில் நல்லதே அமைய வாழ்த்துக்கள். வித்தியாசமான படங்களை எடுப்பவர்களைத்தான் மக்கள் விரும்புகிறார்கள். வித்தியாசமாகத்தான் மக்களே பார்க்கிறார்கள். அதற்காகத்தான் நான் நடிக்க வந்தேன். சினிமாவில் எத்தனையோ ஜாம்பவான்கள் இருந்தாலும் புதியவர்களுக்கு வாய்ப்புகள் உண்டு. அந்த வாய்ப்பை நல்லபடியாக பயன்படுத்தி கொள்ளுங்கள் என்றார் கமல்.