இன்னொரு வடிவேலு ஆகிறாரா கமல்?

சிக்குன எலியை சிதைக்காம விடமாட்டேன்னு ஒரு குரூப் கிளம்பறதும், எலிக்கு நடுவுல ஏதாவது ஒரு பூனை கிராஸ் பண்ணினா, அந்த கோரமான துரத்தலை அதை நோக்கி திருப்பறதும் அரசியல்வியாதிகளின் பொழுதுபோக்கு. அந்த அரசியல் (சாக்)கடையில் எதற்காக எண்ணையை வாங்கி, முகத்தில் தடவிக் கொண்டாரோ தெரியவில்லை… கமலின் முகத்தில் இப்போது டன் டன்னாக வழிசல்!

சிக்குவது அவருக்கு புதுசு இல்லை. பாதம் பணிந்த பெருமாள் சுவாமிகள் பலர் ‘அடுத்த பிரதமர் ஒரு சேலை கட்டிய சீதேவிதான்’ என்று ராத்திரியும் பகலுமாய் கூட்டுப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்க, ஒரு புத்தக வெளியீட்டு விழாவுக்கு போன கமல், அட்டை கிழிந்து அதற்குள்ளிருக்கும் தாள்களும் கிழிந்து வெளியே வந்தார். வேறொன்றுமில்லை. அங்கு பேசிய அவர், ‘இந்தியாவின் அடுத்த பிரதமர் வேட்டி கட்டிய ஒரு தமிழராக இருந்தால் நல்லது’ என்று பேசிவிட்டார். அழைத்தவர் வேஷ்டி கட்டிய ஒரு முன்னாள் மத்திய அமைச்சர். அவருக்கு பரிசு தருவதாக நினைத்து, தனது தலையில் விறகை சுமந்தார் கமல். அதற்கப்புறம் இவர் வேட்டி அவிழ்கிற அளவுக்கு ஓட ஓட குதறினார்கள் அரசியல்வியாதிகள். (முட்டாள் அரசியல்வாதிகள்! கமல் பேச்சை அவர் வீட்டு டேப் ரெக்கார்டர் கூட கேட்காது. ‘வேட்டி கட்டியவர்தான் பிரதமராக வருவார்’ என்று அவர் பேசிவிட்டால் அப்படியே நடந்துவிடுமா?)

ஒரு முக்கியமான விழாவுக்கு இவருக்கும் அழைப்பு போனது. போன இடத்தில் உட்கார நாற்காலி கூட தரப்படவில்லை. காலம் அவ்வளவு நாசுக்காக ட்யூஷன் எடுத்தும், இப்போதைய பரீட்சையில் முட்டை வாங்கிவிட்டாரே கமல்?

கடந்த வாரம் வெள்ள நிவாரணம் குறித்து கமல் சில கருத்துக்களை வெளியிட்டுவிட்டு, பின்பு அதை நான் சொல்லவே இல்லை என்று ஜம்ப் ஆகிவிட்டார். ஆனால் உலகம் நம்பினால்தானே? கடந்த ஒரு வாரமாக அவர் வீட்டில் கரண்ட் இல்லை. வீட்டு வாசலில் குவிந்த குப்பைகளை அகற்ற மாநாகராட்சி ஆட்கள் வரவேயில்லை. விட்டால் பாத்ரூம் குழாய்க்குள்ளேயும் ‘பஞ்ச்’ வைத்து அடைப்பார்கள் போலிருக்கிறது. கமல் பேசிய பஞ்ச் சுக்கு இப்படியெல்லாம் குறுக்கே புகுந்து குழாய்ல பஞ்ச் வச்சா ஏரியாவே நாறிப் போகுமல்லவா? போனது…

சர்வ வல்லமை கொண்ட ஒரு அரசு, கமல் சொன்னதை போல பணக்காரரல்லாத ஒரு படு ஏழையை இப்படியெல்லாம் இம்சித்தால், அதைவிட சிறு பிள்ளைத்தனம் வேறொன்று இல்லவே இல்லை! இந்த வீடு இல்லையென்றால் கமலுக்கு ஓசியிலேயே அறை கொடுக்க எத்தனையோ நட்சத்திர குடிசைகள் இருக்கின்றன. அதை யாரால் கட்டுப்படுத்த முடியும்? ஆனால் அரசியலில் படித்தவர்களை விட, பாலகர்கள்தானே அதிகம்? அதனால் இப்படியெல்லாம்தான் நடக்கும்.

இவர் வீட்டை மட்டும் குறி வைத்தால், அது திட்டமிட்டு செய்ததாக ஆகாதா? அதனால் பக்கத்து வீடுகளில் இருக்கும் பஞ்சாபகேசன்களும், பட்டு மாமிகளும் பெருத்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். தண்டனை அவர்களுக்கும்தான். எத்தனை நாள் “எங்க பக்கத்தாத்துலதான் கமல் இருக்கான். பார்க்கும் போதெல்லாம் ஸ்மைல் பண்ணுவான்” என்று பீத்தியிருப்பார்கள். இப்போ அனுபவிக்க வேண்டியதுதான்!

வெள்ளம் வந்து வேதனையில வடியுறோம். எலக்ஷன் வரட்டும்… நாங்க குடிச்ச எல்லா தண்ணியையும் அவங்க கண்லேர்ந்து கழட்றோம் என்று ஆளாளுக்கு, ஆள் காட்டி விரலில் மைக்கு பதில், கோபத்தை வைத்துக் கொண்டு காத்திருக்கிறார்கள். அவர்களின் சப்போர்ட் நியாயமாக கமல் பக்கம் திரும்ப வேண்டும்தானே? அங்குதான் துரதிருஷ்டசாலியாகிறார் கமல். “நீயும்தானே பத்து பைசா தர மனசில்லாமல் வியாக்யானம் பேசுன… வரட்டும். ஏதோ விஸ்வரோகமோ, கஷ்டகாலமோ வருதாமே? அப்ப வச்சுக்கலாம்” என்று குமுறிக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்.

விஸ்வரூபம் முதல் பார்ட் வரும்போது, ஆடு யானையை பிரசவித்த கதையாக ஒரேயடியாக இம்சைக்குள்ளாக்கப்பட்டார் கமல். “இந்தியாவை விட்டே போறேன்” என்று அவர் சொன்னபோது, “இந்தா தலைவா… நான் சேர்த்த ஐம்பது… நூறு” என்று அவர் வீட்டுக்கு மணியார்டர் அனுப்பி மனம் குளிர்ந்த ரசிகன் கூட, இப்போது அவர் பக்கம் இல்லை. கமலின் துரதிருஷ்டம் இதுதான்.

தமிழ்சினிமாவும், தமிழ்நாட்டு அரசியலும் வடிவேலுவை கண்டு சிரித்ததைவிட, அவரை அழவிட்டு வேடிக்கை பார்த்ததுதான் அதிகம். அதற்கு காரணம் அரசியல் அல்ல. வடிவேலு எடுத்த முடிவுதான்! கிட்டதட்ட அப்படியொரு வடிவேலுவாகதான் மாறிக் கொண்டிருக்கிறது கமலின் நிலைமை!

நடிகராகவும் இருந்து கொண்டு அரசியலையும் விமர்சிக்க வேண்டும் என்றால், அதற்கு நீங்கள் குறைந்த பட்சம் வாகை சந்திரசேகர் லெவலுக்காவது இறங்கி வரவேண்டும். அதைவிட்டுவிட்டு பரதநாட்டியம் ஒரு காலிலும் பப் டான்ஸ் இன்னொரு காலிலும் ஆடினால் இப்படிதான் கெரகம் தலையை காவு கேட்கும்!

மறுபடியும் ஒரு முறை இந்தியாவை விட்டு போக வேண்டும் என்றால், பிளைட் டிக்கெட், விசாவுக்கெல்லாம் அதிக சிரமம் தேவையில்லை. ஸ்பான்சர் செய்வதற்கு அடையாறின் கரையோர மக்கள் எப்போதும் தயாராகவே இருக்கிறார்கள் கமல் சார்!

-ஆர்.எஸ்.அந்தணன்

6 Comments
 1. Ganesh says

  இந்த கொசு தொல்லை தாங்க முடியலை .. இறங்கி வேலை செய்ய மாட்டான். ஆனா பப்ளிசிட்டி ஸ்டன்ட்க்கு குறைவே இருக்காது.. போய்யா போ !

 2. Jacob says

  மழை, வெள்ளத்தில் சென்னை மாநகரம் முழுவதும் மின்தடை இருந்தது. கழிவு நீர் சாக்கடையில் கலந்து சாலையில் ஓடியது, இப்போது நிலைமை படிப்படியாக சீரடைந்து வருகிறது. இன்னும் சில பகுதிகளில் மின் இணைப்பு கிடைக்கவில்லை. நிலைமை இப்படி இருக்க, இது எதோ கமலுக்கு மட்டும் தான் சென்னையிலேயே இந்த நிலைமை என்று எழுதுவது எந்த விதத்தில் நியாயம். இவ்வளவு வாய் கிழிய பேசிய கமல், இது வரை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன நிவாரணம் அளித்தார் என்று சொல்ல முடியுமா ???

 3. BABU says

  I am a Alwarpet recidence. This is false.

 4. Jothi says

  என்னவோ தமிழ்நாட்டில் மக்கள் எல்லாம் சுகபோகமாக இருப்பாதாகவும் இவருக்கு மட்டும் தான் அநீதி நடப்பதாகவும் பெருசா நியூஸ் போடுறீங்களே ! அவருக்கு பல வீடுகள் இருக்கலாம் இல்லை வெளிநாடு போகலாம் ..அய்யா ஏழை மக்களின் நிலைமைய எடுத்து சொல்லி, ஏதாவது வழி சொல்லுவதை விட்டு …

 5. shank says

  He truly is becoming a vadivelu.The reporter missed his speech on his birthday about bjp and H.Raja’s riveting reply to it.The reason he gave for O.pannerselvam reply was funny.That they mis translated his letter :).First place how did the letter even reach tamil magazines.He himself released and now looking for a hiding place.

 6. தமிழ் இனியன் says

  உண்மையா ???? உண்மை என்றால் இன்னும் அதிகமாக கொடுத்து இருக்கலாம் என்பதே எனது கருத்து. என்றேன்றால் இந்த ஆண்டு மட்டும் கமல் நடிப்பில் 3 படங்கள் வெளியாகி, மாபெரும் வெற்றி பெற்று இருக்கிறது. ஒரு படத்திற்கு குறைந்தது ரு. 20 கோடி என்றால் 3 படங்களுக்கு ரு. 60 கோடி சம்பளமாக பெற்று இருப்பார். ரு. 60 கோடி சம்பளம் பெற்று ரு. 15 லட்சம் நிவாரண நிதியாக கொடுத்தார் என்பது (அது உண்மையா அல்லது வழக்கம் போல வதந்தியா என்பது வேறு விஷயம்) நடுநிலையாலர்களுக்கே வெளிட்சம். ரஜினியாவது உள்ளூர் சூப்பர் ஸ்டார். ஆனால் கமலோ, உலகம் அறிந்த உலக நாயகன் இன்னும் அதிகமாக நிவாரண தொகை அளிப்பார் எதிர்பார்க்கிறேன் .

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சென்னை வெள்ளம், கரைஞ்சுதே வெல்லம்! கீர்த்தி சுரேஷின் திக் திக் அனுபவம்

ரஜினி முருகன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். தமிழ்சினிமாவில் வெல்லமென நுழைந்தவர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட பரிதாபக்கதை இது. அவர் வாயாலேயே கேளுங்களேன்... நீங்கள்...

Close