செவாலியர்! கமலுக்கு கிடைச்சாச்சு! ரஜினிக்கு எப்போ? -ஸ்டான்லி ராஜன்
செவாலியர் என்றால் பெருமையான மரியாதைக்குரியவர் என பொருள்படும் பிரெஞ்ச் வார்த்தை, மாவீரன் நெப்போலியன் காலத்தில் ஏற்படுத்தபட்ட விருது அது. அவன் முழுக்க முழுக்க ராணுவ ஆட்சியாளர், ராணுவத்தில் சிறப்பான பணிகளை செய்ததற்காக அவன் அப்படி சில விருந்துகளை வழங்கிகொண்டிருந்தான் அதிலொன்று செவாலியே.
திப்புசுல்தான் கொஞ்சகாலம் இருந்திருந்தால் அன்றே நெப்போலியன் வழங்கி இருப்பார், ஆனால் விதி முந்திகொண்டது. பின்னாளில் பிரென்ச் அரசாங்கம் அதனை உலகில் சில துறைகளில் சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு கொடுக்க ஆரம்பித்தது, அப்படி பல இந்தியர்களும் வாங்கிகொண்டிருந்தனர், பாண்டிச்சேரி வாசிகள் முதலில் வாங்கினர் பின் டாடா வாங்கினார், சத்யஜித்ரே வாங்கினார், அதன் பின் சிவாஜி என பலர் வாங்கினர், இப்பொழுது கமலஹாசன் முறை.
கல்வி தந்தைகள் என தங்களை தாங்களாகவே அழைத்துகொண்ட சிலர், செவாலியே பட்டங்களை தன் பெயருக்கு முன்பு சூட்டிகொண்டனர். அதெல்லாம் அவர்களுக்கு பிரெஞ் அரசால் வழங்கபட்டதாக தெரியவில்லை கள்ள நோட்டு போல, கள்ள விருதுகளும் அவர்களாக அடித்திருக்கலாம், தொழிலதிபர் உலகத்தில் இதெல்லாம் சகஜம், அவர்கள் ஆஸ்கர் விருதினை தங்களுக்கு அடிக்காதவரை சர்ச்சையில்லை.
கமலஹாசனை பொருத்தவரை அவர் முழுக்க முழுக்க சினிமா விருதுகளுக்கு தகுதியானவர், அவரை தவிர இன்னொருவருக்கு கொடுத்தால்தான் அது சர்ச்சையே, இது மகா பொருத்தமானது பொதுவாக இந்திய சினிமா விருதுகளிலும் அரசியல் உண்டு, எம்ஜிஆர் சிறந்த நடிகர் என்பார்கள், விருது கொடுப்பார்கள், சிவாஜியினை கண்டுகொள்ளமாட்டார்கள். அப்படி எம்ஜிஆர் என்ன நடித்தார் என தேடினால் ஒரு மண்ணாங்கட்டியும் இருக்காது.
அக்காலத்தில் சிறந்த நடிப்பினை வெளிபடுத்திய ரஜினிக்கு அப்பொழுது விட்டுவிட்டு இப்பொழுது அவர் வாக்கிங் போகும் படங்களுக்காக பத்ம பூஷன் வரை கொடுப்பார்கள். பிரான்ஸ் அரசு சிவாஜிக்கு செவாலியே விருது கொடுத்த பின்பே இந்திய படீரென விழித்து அவருக்கு ஏதோ ஒன்றை கொடுத்து கவுரவித்தது, இனி கமலஹாசனுக்கும் அது நடக்கலாம்!
எப்படியோ தமிழ் சினிமாவின் வாழும் அடையாளம் கமலஹாசன், சினிமாவிற்காக வாழ்வினை அர்பணித்துள்ள வெகுசில நடிகர்களில் அவரும் ஒருவர். இமேஜ் பற்றியெல்லாம் இல்லாமல் கிடைத்த வேடங்களில் தன்னை நிறுத்தியே வளர்ந்தவர். பொதுவாக அவர் படங்களை பார்ப்பதற்கு நுண்ணிய ரசனை வேண்டும், சில தரவுகள் வேண்டும். அவற்றை எல்லாம் கொண்டு அவர் படங்களை ரசித்தால் ரசித்துகொண்டே இருக்கலாம்.
சரி அவருக்கு செவாலியே கிடைத்துவிட்டது, கபாலிக்கு ஏன் செவாலியே கிடைக்கவில்லை (கபாலி வந்து மலேசிய அரசின் டத்தொ விருதிலும் மண் அள்ளி போட்டாயிற்று, உபயம் ரஞ்சித்) எவனாவது புலம்பினால் அவர்களுக்கான பதில் ஒன்றேதான். அது பிரெஞ்ச் அரசாங்கம், வருடா வருடம் கேன்ஸ் விழா நடந்தி உலகின் சிறந்த படங்களை, நடிகர்களை கண்டறியும் நாடு, அவர்களுக்கு எது யாருக்கு பொருத்தம் என தெரியும் கொடுத்திருக்கின்றார்கள். (டாக்டர் கிருஷ்ணசாமி , சில பிராமண அமைப்புகள் இன்னபிற அழிச்சாட்டியங்கள் எப்படி பிரென்ஞ் அரசினை கண்டிக்கபோகின்றார்களோ தெரியவில்லை)
பெரும் விருதுதான், ஒரு விழா நடத்தபடவேண்டும்தான், ஆனால் நடக்குமா என்றால் அதுதான் தமிழ்நாடு, இன்னும் கொஞ்சநேரத்தில் முரசொலியின் முகநூல் பக்கத்தில், “களத்தூர் கண்ணம்மா படத்தில் நான் கொஞ்சிய செல்லமே, செவாலியே….” என ஒரு பாராட்டு வரும், அங்கே புகைய ஆரம்பிக்கும். …விடுங்கள்
சினிமா அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருந்தால் தமிழகம் எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும்.
-ஸ்டான்லி ராஜன்