கமல் படத்தில் கிரேஸிக்கு இன்சல்ட்?
ரசிகர்களை சிரிக்க வைக்கிறேன் பேர்வழி என்று தயாரிப்பாளர்களை சிரிப்பாய் சிரிக்க வைத்த நகைச்சுவை படங்கள் தமிழில் ஏராளமாக உண்டு. ஒரு ஆக்ஷன் படத்தை எடுப்பதை விடவும் ஆபத்தான விஷயம் நகைச்சுவை படம் எடுப்பது. இது புரியாமல் முழு நீள நகைச்சுவை காவியத்தை எடுத்து, கஷாயத்தை குடித்த தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் ஒருவர் இருக்கும் திசை நோக்கி வணங்கிவிட்டு அந்த முயற்சியை அத்தோடு விட்டுவிடலாம். அந்த ஒருவர்தான் கிரேஸி மோகன்.
நாடகமாகட்டும்… சினிமாவாகட்டும்… கிரேஸியின் பங்கு இருந்தால், கெக்கேபிக்கேவுக்கு ஹன்ரட் பர்சென்ட் உத்தரவாதம் உண்டு. அதுவும் கமல் – கிரேஸி இணைந்துவிட்டால், உம்மணாமூஞ்சிகளுக்கு கூட உற்சாகம் வந்துவிடும். இப்படியெல்லாம் புகழ் பெற்ற இந்த காம்பினேஷன், ‘உத்தம வில்லன்’ படத்திலும் ஒன்றாகியிருக்கிறது. ஆனால் ஒரு சிராய்ப்பு. ஒரு வருத்தம். ஒரு அன்ஃபார்ச்சுனேட்லி அய்யய்யோ எல்லாமிருக்கிறது இந்த காம்பினேஷனுக்கு பின்னால். அது என்னவென்று தெரியாமல் குழம்பி போயிருக்கிறார் சம்பந்தப்பட்ட கிரேஸியே!
இப்படியொரு படத்தை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தவுடனேயே கமலின் விரல்கள் செய்த முதல் ‘கால்’ கிரேஸி மோகனுக்குதான். அதற்கப்புறம் கிரேஸி வீட்டுக்கு கமலும், கமல் வீட்டிற்கு கிரேஸியும் அடிக்கடி ட்ரிப் அடித்து தமிழ்சினிமாவின் நகைச்சுவை பட ரசனைக்கே ட்ரிப் ஏற்றினார்கள். நினைத்தமாதிரியே எல்லாம் நன்றாக வந்தது. உற்சாகமாக படப்பிடிப்புக்கும் கிளம்பிவிட்டார் கமல். கிட்டதட்ட ஒரு மாதமாக கிரேஸியும் கமலும் சேர்ந்து உருவாக்கிய நகைச்சுவை பகுதிகள் படமாகப் போகிறது. ஆனால்?
என்ன ஆனால்? இந்த படத்தின் துவக்க விழா விளம்பரங்களில் கிரேஸி மோகன் பெயர் எங்குமே இல்லை. இது திட்டமிட்டு விடப்பட்டதா? அல்லது யதேச்சையாக நடந்ததா? புரியாமல் குழம்பியிருக்கிறாராம் கிரேஸி. சேச்சே… கமல் அப்படியெல்லாம் கலைஞர்களை அவமதிக்கிறவர் அல்லவே?
ஒண்ணுமே புரியல உலகத்துல…!