பாபநாசம் படத்திற்கு வரிவிலக்கு தராதது அரசின் சரியான முடிவுதான்! -கமல் பதிலால் பரபரப்பு

பாபநாசம் படத்திற்கு ஊடகங்களின் உற்சாகமான விமர்சனங்களால், கலெக்ஷனும் எதிர்பார்த்ததை விட பிரமாதமாம்! படத்தின் வெற்றிக்கு ஊடகங்களும் ஒரு காரணம் என்பதால் இன்று அத்தனை பேரையும் சந்தித்து தன் நன்றியை தெரிவித்துக் கொண்டார் கமல். அதுமட்டுமல்ல, வெறும் சம்பிரதாயமாக அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே படத்தில் இடம்பெற்ற ஜெயில், வீடு, டீக்கடை ஆகியவற்றை தத்ரூபமாக மேடையில் உருவாக்கி படத்தில் நடித்திருந்த அத்தனை பேரையும் அதே காஸ்ட்யூம்களில் மேடையில் ஏற்றி விட்டிருந்தார். மிக சுவாரஸ்யமான நேரம் அது.

பேசிய அத்தனை பேரும் சொல்லி வைத்தார் போல, அரைப்புள்ளி, காற்புள்ளிக்கு மிகாமல் பேசிவிட்டு அமர, இறுதியில் மைக் பிடித்த படத்தின் இயக்குனர் ஜித்து ஜோசப்பும், கமலும்தான் சற்று நேரம் எடுத்துக் கொண்டார்கள்.

‘என்னிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கும்போது கமல், மோகன்லால் ரெண்டு பேரையும் வைத்து இயக்கிய அனுபவம் எப்படியிருந்தது என்று கேட்டார்கள். பதில் சொன்னேன். இருவரில் யார் சிறந்த நடிகர்கள் என்று கேட்டார்கள். இந்த படத்தில் ஒரு டயலாக் வரும். அந்த ரகசியம் எனக்குள்ளேயே புதைஞ்சு போகட்டும். அதுதான் உங்களுக்கு நல்லது என்று. இந்த கேள்விக்கும் நான் அதையே பதிலாக சொல்கிறேன் என்றேன்…’ என்றார் ஜித்து.

விஸ்வரூபம், தசாவதாரம் மாதிரியான பிரமாண்ட படங்கள் தந்ததை விட பிரமாதமான பாராட்டுகளையும், வெற்றியையும் இந்த எளிமையான படத்திற்கு கொடுத்த எல்லாருக்கும் நன்றி என்ற பேச ஆரம்பித்தார் கமல். நாற்பது நாளில் இந்த படத்தை எடுத்து முடிச்சோம். பல நாட்கள் மழை பெய்து செட் கரைந்து போயிருக்கிறது. அப்போதெல்லாம் ஒரு பக்கம் வேலை நடக்கும். இன்னொரு பக்கம் நாங்கள் நடித்தோம். அதனால்தான் நாற்பது நாளில் இந்த படத்தை எடுக்க முடிந்தது. இதுபோன்ற கதைகள் எப்பவாவதுதான் அமையும். அப்படியொரு சிறந்த கதையை எனக்காக கொண்டு வந்த ஜித்து ஜோசப்புக்கு நன்றி. அதுமட்டுமில்ல… இந்த கதையில் சுயம்புலிங்கமா நடிக்க பொறுத்தமானவர் கமல்தான் என்று மோகன்லால் கூறியிருக்கிறார். அவருக்கும் என் நன்றி என்றார் கமல்.

அதற்கப்புறம் கேள்வி பதில் நேரம். எடுத்த எடுப்பிலேயே இந்த படத்திற்கு வரிவிலக்கு தரப்படவில்லையே? என்றொரு கேள்வி. எவ்வித டென்ஷனுக்கும் இடம் கொடுக்கவில்லை கமல். ‘ஏன் கொடுக்கலங்கறதுக்கான காரணத்தை இணையதளத்தில் தெரிவிச்சுருக்காங்களே…’ என்றார். ஆனால் நீங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கலையே? கேள்வி விடாமல் தொடர…. ‘அரசு சரியாதானே முடிவெடுத்துருக்கு?’ என்றார் கமல். பலருக்கும் இந்த பதில் அதிர்ச்சிதான். இருந்தாலும் என்ன செய்வது?

அதற்கப்புறம் நடிகர் சங்க விவகாரத்தில் நீங்களோ, ரஜினியோ இரு தரப்பையும் அழைத்து பேசவில்லையே? என்றொரு கேள்வி.

எங்களை யாரும் அணுகவில்லை. அப்படி வந்திருந்தால் பேசுவோம் என்றார் கமல்.

இனிமேலாவது கிளம்பிப் போய் ஆலோசனை கேட்கலாமே விஷால்?

Read previous post:
பாபநாசம் பாப்பா நாசம்?

பாபநாசம் படத்தில் கமலின் நடிப்பை வியந்த மாதிரியே இன்னொருவர் நடிப்பையும் வியந்து போற்றிக் கொண்டிருக்கிறது மீடியா. தியேட்டர்களில் கூட அந்த பெண்ணை கண்டால் அவ்வளவு உற்சாகமாகிறார்களாம் ரசிகர்கள்....

Close