ஏடிஎம், ஒரு கடப்பாரை, லெக்பீஸ், வாட்டர் பாக்கெட்! கமல்ஹாசனை மிரட்டிய சினிமா டீம்?
ஏ.பி.ஸ்ரீதர் என்றால், கூடவே கமல் ஓவியமும் பளிசென மனசுக்கு வந்துவிடும். இதுவரை கமல்ஹாசனை விதவிதமாக வரைந்து மகிழ்ந்தவர்களில் ஸ்ரீதருக்குதான் முதலிடமும்,… முக்கியத்துவமும்! ஏனென்றால் அவையெல்லாம் வெறும் ஓவியங்கள் மட்டுமல்ல, ஒவ்வொன்றும் ஒரு சங்கதி! அவரே ஒரு படத்தை தயாரித்து, கதை திரைக்கதை அமைத்திருக்கிறார் என்றால், அதற்கு கமலின் ஆதரவு எப்படியிருக்கும்? சும்மா அசத்திவிட்டார் கமல். மொத்த படக்குழுவையும் தனது ஆபிசுக்கு வரவழைத்து, அங்கேயே இப்படத்தின் பாடல்களை வெளியிட்டு தம்பதி சமேதராக நின்று வாழ்த்தி அனுப்பிவிட்டார்.
“ஆர்.சி.சக்தி என்ற இளைஞனும், கமல்ஹாசன் என்ற இளைஞனும் வசதியில்லாத காலத்தில் எடுத்த ‘உணர்ச்சிகள்’ திரைப்படம் இங்குதான் உருவானது. பெரிசா செலவு பண்ணி எடுக்க முடியாமல் இந்த ஆபிஸ் மாடியில்தான் எடுத்தோம். அந்த புகைப்படத்தை பார்த்துதான் ஐயா பாலசந்தர் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். இந்த அலுவலகத்திற்கு நல்லதும் மனதுக்குள் நிறைந்திருப்பதுமாக ஏராளமான பெருமைகள் உண்டு. இங்குதான் பாரதிராஜா, மணிரத்னமெல்லாம் பேசி மகிழ்ந்திருக்கிறோம். பாலசந்தர் பலமுறை வந்து போயிருக்கிறார். அதோ அந்த பக்கத்து மாடியில் நின்று ஓயாமல் சிகரெட் குடித்து வந்த இளைஞன் ரஜினிகாந்த். அப்படியெல்லாம் பெருமைபெற்ற இந்த இடத்தில் ஏ.பி.ஸ்ரீதர் மய்யமாக இருந்து தயாரிக்கும் மய்யம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. மகிழ்ச்சி” என்றார் கமல்.
இப்ப வர்ற படம் எல்லாமே சில்வர் ஜுப்ளிதான். காலை ஷோ, மதியானம் ஷோ, ஈவினிங் ஷோ ஓடிச்சுன்னா அதுவே பெரிய விஷயம்னு ஆகிடுது… என்று சினிமாவின் தற்போதையை வலியையும் தமாஷாக எடுத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார் தயாரிப்பாளர் ஏ.பி.ஸ்ரீதர். முதல் ரீல் ஆரம்பிச்சு முடியறதுக்குள்ளாகவே விமர்சனம் எழுதி பேஸ்புக் ட்விட்டர்ல போட்டுர்றாங்க. இன்னும் பத்து பனிரெண்டு ரீல் இருக்கு. அதுக்குள்ள ஏன்ப்பான்னு கேட்க முடியாது. அப்படிப்பட்ட காலகட்டத்தில் ஒரு படம் தயாரிக்கிறோம். அது எப்படி இருக்கணும்னு யோசிச்சு யோசிச்சு இந்த படத்தை எடுத்திருக்கோம்.
இந்த படத்தின் டைரக்டர் ஆதித்யா பாஸ்கர்ல ஆரம்பிச்சு, பங்குபெற்ற அத்தனை பேரும் கல்லூரிகளில் படிச்சுக்கிட்டு இருக்கிற ஸ்டூடன்ட்ஸ். லீவ் ஆரம்பிக்கும் போது படம் எடுத்து, லீவ் முடியறதுக்குள்ள படத்தை முடிச்சுட்டோம். படத்தை போட்டு பார்க்கிற வரைக்கும் இந்த விஷயத்தை யாருக்கும் சொல்லக் கூடாதுன்னு இருந்தேன். முழுசா பார்த்து திருப்தியான பிறகுதான் இப்படியொரு படம் எடுக்கிற தகவலையே வெளியில் சொல்ல ஆரம்பிச்சேன் என்றார் ஸ்ரீதர்.
ஒரு கடப்பாரை, மூன்று ஏடிஎம் கார்டுகள், புல் பாட்டில் ஒன்று, லெக்பீஸ், வாட்டர் பாக்கெட், நான்கு ஆண்கள், மூன்று பெண்கள்… இவைதான் படத்தின் பிராப்பர்ட்டி. இதை வைத்துக் கொண்டு சுட சுட ஒரு படத்தை தரப் போகிறார்களாம்.
மய்யமா உட்கார்ந்து யோசிச்சாலும், மப்படிச்ச மாதிரி கொயப்பமா இருக்கே தலீவா?