கமல் காத்திருந்தது யாருக்காக?

உத்தம வில்லனுக்கு பிறகு திரைக்கு வரப்போகும் கமல் படம் ‘பாபநாசம்’தான்! இப்படம் தொடர்பான புகைப்படங்கள் அவ்வப்போது வெளியிடப்பட்டாலும், டீஸர், ட்ரெய்லர், பாட்டு என்று எல்லாவற்றையும் காண துடித்துக் கொண்டிருக்கிறார்கள் கமல் ரசிகர்கள். மலையாளத்தில் பெரிய வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படத்தின் ரீமேக் என்பதாலும் இந்த படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு. இந்த நிலையில்தான் பாபநாசம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. பொதுவாகவே கமல் வந்துவிட்டால், காத்திருக்கும் படலமும் முடிந்துவிடும். அவரும் மளமளவென நிகழ்ச்சியை துவங்கி பேச ஆரம்பித்துவிடுவார். ஆனால் அவரே வந்த பின்பும் அரை மணிக்கு மேல் காத்திருந்தார்கள் அனைவரும்.

அந்த காத்திருத்தல் வேறொரு முக்கியமான விஐபிக்காக. சில நிமிஷ தாமதத்திற்கு பிறகு அவர் வந்து சேர, விழா துவங்கியது. அந்த விஐபி வேறு யாருமல்ல. கவுதமிதான். இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாகவும் நடித்திருக்கிறார் கவுதமி. நிகழ்ச்சி துவங்கியது. கமல் என்ற பட்டத்து யானையை வைத்துக் கொண்டு மற்றவர்களை பற்றியா பேச முடியும்? எல்லாரும் கமலின் உழைப்பையும் சினிமாவுக்கான அவரது அர்ப்பணிப்பையும் பேசிக் கொண்டிருக்க, எல்லாவற்றுக்கும் பதில் சொல்ல ஆரம்பித்தார் கமல்.

“ஏதோ ஒற்றை ஆளாக இந்தப் படத்தை நான் மட்டும் உருவாக்கியதுபோல், எல்லோரும் என்னைப் பற்றியே பேசினார்கள். அது சரியல்ல, சினிமா என்பது ஜனரஞ்சகம் மட்டுமல்ல, ஜனநாயகமும்கூட. சினிமா ஒரு கூட்டு முயற்சி. எல்லோரும் சேர்ந்து செய்தால்தான் சிறப்பாக வரும்.

நான் மட்டும் நடித்து பெயர் வாங்கினால் போதாது, அனைவரும் நன்றாக நடித்தால்தான் ஒரு படத்திற்குப் பெயர் கிடைக்கும். ‘பாபநாசம்’ படத்தில் எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அது எனக்குப் பெருமையாக இருக்கிறது. இந்த படம் 3 மொழிகளில் வெற்றி பெற்ற படம். அதை எங்கள் கையில் ஒத்திகை பார்க்க தந்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பாதி முடிந்தவுடன், படக் காட்சிகளை திரையிட்டுப் பார்த்தேன். அப்போது ஒரு நல்ல நடிகையை வீட்டுக்குள் பூட்டி வைத்துவிட்டோமோ என்ற குற்ற உணர்வு ஏற்பட்டது. அந்தளவுக்கு கவுதமி மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். இதை நான் தனிப்பட்ட ஆர்வம் காரணமாக சொல்லவில்லை, நிஜமாகவே கவுதமி திறமையான நடிகை.

இவ்வாறு கமல் பேசினார்.

த்ரிஷ்யம் படத்தை இயக்கிய ஜித்து ஜோசப்தான் இந்த படத்தையும் இயக்கியிருக்கிறார். அவர் வெளிநாட்டில் இருந்ததால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
செல்லதுரையே இருக்கட்டும்… உன்னிப்பாக கவனிக்கும் விஜய்!

வந்தமா? நடிச்சமா? போனமா? என்றில்லாமல் தன்னை சுற்றி நடக்கும் அத்தனை விஷயங்களையும் உன்னிப்பாக கவனிக்கிற ஒருவர்தான் நல்ல ஹீரோவாக வர முடியும். விஜய்யும் அஜீத்தும் இந்தளவுக்கு முதலிடத்தில்...

Close