சிவகார்த்திகேயன் தாக்கப்பட்ட விவகாரம் என்ன செய்ய வேண்டும் கமல்?

மதுரை ரசிகர்கள் மட்டும் பிற மாவட்டத்து ரசிகர்களை விட சற்று ஒரு படி மேல்தான்! அது ரஜினி மன்றமாக இருந்தாலும் சரி. குள்ளமணி மன்றமாக இருந்தாலும் சரி. அன்பு காட்டினாலும் ஓவராக காட்டுவார்கள். வம்பு வளர்த்தாலும் ஓவர்தான். நேற்று மதுரைக்கு ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்த சிவகார்த்திகேயனை, அதே பிளைட்டில் வந்த கமல்ஹாசனை வரவேற்ற ரசிகர்களில் ஒருவர் ஓங்கி முதுகில் அடித்த காட்சி ஒன்றுதான் லட்சோப லட்சம் வியூஸ்களை தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. அதற்கடுத்த ஒரு மணி நேரத்திற்கு பிறகு ஒரே மேடையில் காட்சியளித்த இருவரும் சகஜமாக பேசி சிரித்தாலும், சிவகார்த்திகேயன் முகத்தில் ஒரு இறுக்கம் இருந்ததை கவனிக்க முடிந்தது.

ரசிகர்களின் ரீயாக்ஷனுக்கெல்லாம் சம்பந்தப்பட்ட ஹீரோக்கள் பொறுப்பேற்றுக் கொள்ள முடியாதுதான். அதற்குள் சிலர் “இது கமல் திட்டமிட்டே நடத்திய தாக்குதல்” என்றெல்லாம் உளறுவாய் உலகநாதன் ஆகிக் கொண்டிருக்கிறார்கள். நாம் சொல்ல வந்தது ஒன்றுமில்லை. கமலுக்கு ஒரு சின்ன நினைவூட்டல் மட்டுமே!

சுமார் பதினைந்து வருஷங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது. கமல் பிறந்த நாள் விழா! தமிழகத்திலிருந்து பல்வேறு ஊர்களில் இருந்து திரண்டு வந்திருந்த ரசிகர்களுக்கு அறிவை புகட்டும் நோக்கத்தில் அதை ஒரு இலக்கிய விழாவாக முன்னெடுத்திருந்தார் கமல். முதல் கட்டமாக விசில் கூடாது என்று கட்டளையிடப்பட்டது. (இருந்தாலும் கமல் மேடையேறும் போது கட்டுப்படுத்த முடியாத ரசிகர்கள் மேகங்கள் கலைந்தோடுகிற அளவுக்கு விசிலடித்து தள்ளினார்கள்) அதற்கப்புறம் விழா ஸ்டார்ட் ஆனது.

அன்றைய தினம் ரசிகர்கள் முன்னிலையில் சிறப்பு சொற்பொழிவாற்ற அழைக்கப்பட்டிருந்தவர் பட்டிமன்ற பேச்சாளரும், சிறந்த இலக்கியவாதியுமான பாரதி பாஸ்கர். அவர் ஒரு பெண்மணி என்பதும், அது சினிமா மேடை என்பதும் ரசிகர்களை சிலரை என்ன மனநிலைக்கு கொண்டு சென்றதோ? அவரையும் ஒரு நடிகையாக பாவித்து அவர் பெயரை சொல்லும்போதெல்லாம் சற்று ஓவராகவே கைதட்டி மகிழ்ந்தார்கள். பிரச்சனை அப்போதெல்லாம் இல்லை. பாரதி பாஸ்கரை பேச அழைத்தார்கள். அவர் எழுந்து போடியம் அருகே செல்வதற்குள், மாடியில் அமர்ந்து நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த ஒரு ரசிகர், வினோதமான சற்றே கேவலமான ஒரு ஒலியை எழுப்ப, அங்கிருந்த அமைதியை கிழித்த அந்த சப்தம் எல்லாரையும் சிரிக்க வைத்துவிட்டது.

இதுபோன்ற பல்லாயிரம் மேடைகளை பார்த்தவர் பாரதிபாஸ்கர். தன் உரையை எவ்வித தயக்கமும் இன்றி ஆரம்பித்தார். அதற்கு இடையில் கமல் செய்ததுதான் இந்த செய்தியின் சாரம்சம். அற்புதமான விஷயமும் கூட. ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டிருந்த அந்த கூட்டத்தில் குறிப்பிட்ட அந்த இளைஞரை மட்டும் கண்டுபிடித்துவிட்டார். தனது ரசிகர் மன்ற தலைவரிடம் சொல்லி அவரை அழைத்து வர வைத்துவிட்டார். பாரதி பாஸ்கர் பேசி முடிக்கவும், அந்த இளைஞர் மேடைக்கு வரவும் சரியாக இருந்தது.

மைக்கை பிடித்த கமல், “நீங்கள்லாம் விசிலடிச்சான் குஞ்சுகள் என்ற கெட்ட பெயர் வரக்கூடாது என்பதற்காகதான் ஒவ்வொரு வருடமும் இதுபோன்ற இலக்கியவாதிகளை அழைத்து உங்கள் பேச வைக்கிறேன். என் நோக்கத்தையே இந்த இளைஞர் சிதைத்துவிட்டார். பாரதி பாஸ்கரிடம் அவர் இப்போது பகிரங்கமாக மன்னிப்பு கேட்பார்” என்று கூற, அரங்கமே எழுந்து நின்று கைதட்டியது. அந்த இளைஞர் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டார் பாரதி பாஸ்கரிடம்.

இப்போதும் கமல் அப்படியொரு ஸ்கேலை எடுத்து நச் நச்சென்று உள்ளங்கையில் அடித்து பனிஷ்மென்ட் கொடுக்க வேண்டிய நிலையில்தான் இருக்கிறார். அந்த மதுரை ரசிகரின் உருவம் வீடியோவில் பதிந்திருக்கிறது. அதுமட்டுமல்ல, சிவகார்த்திகேயன் மேலேயே கைய வச்சுட்டேன்ல? என்று அவர் இந்நேரம் மாவட்டம் முழுக்க தெரிகிற அளவுக்கு உதார் விட்டிருப்பார். அவரை சென்னைக்கு அழையுங்கள். பத்திரிகையாளர்கள் முன்னிலையில் சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்க வையுங்கள்.

கமலால் நிச்சயம் இது முடியும். ஏனென்றால் கமல் என்பவர் வெறும் நடிகர் மட்டுமல்ல! அதையும் தாண்டி….!

சிவகார்த்திகேயன் தாக்கப்பட்ட வீடியோ கீழே- நன்றி நியூஸ்7

Read previous post:
ஜோதிகா வீட்டுக்கு மாறிய ரெங்கநாதன் தெரு! பிய்த்துக் கொண்டு கொட்டிய பீஸ்!

ரெங்கநாதன் தெருவிலிருக்கும் அத்தனை வியாபார ஸ்தலங்களின் ஒரு நாள் கலெக்ஷனையும் பிடுங்கினால், தமிழ்நாட்டில் ஒரு மாத பட்ஜெட் செலவை ஈடுகட்டலாம். சுண்டைக்காய் சோன்பப்டியில் ஆரம்பித்து, தங்கம், பிளாட்டினம்,...

Close