சிவன் வர்றாரு. சித்தர் வர்றாரு. ஆனாலும் இது காதல் கதை! கண்ணு கட்டுதப்பா கமரகட்டு…!
‘பார்த்திபன் இயக்கிய ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தை தயாரித்த சந்திரசேகரன், அதற்கப்புறம் சுமார் ஐம்பது கதைகளையாவது கேட்டிருப்பார். ஆனால் அவருக்கு பிடித்த கதை என்னுடையதுதான்…!’ இப்படி ஒருவர் சொன்னால் சற்று நிமிர்ந்து உட்காரத்தானே தோன்றும்? உட்கார்ந்தோம்… பேச ஆரம்பித்தார் ராம்கி ராமகிருஷ்ணன். கமரகட்டு பட இயக்குனர்.
யுவன், ஸ்ரீராம், ரக்ஷா ராஜ், மணிஷாஜித் என்று ஒண்ணா படிக்கிற இரண்டு ஜோடி மாணவ மாணவிகளுக்கு இடையே ஏற்படுகிற காதலும் அதனால் வரும் விளைவுகளும்தான் நான் இயக்கியிருக்கும் கமரகட்டு என்று பலரும் நினைக்கிறாங்க.. அது ஒரு போர்ஷன்தான். அதைவிட படத்தில் நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கு. ஆன்மீகம் கலந்த ஹாரர் கதைதான் இது என்றார் ராம்கி. அடிப்படையில் அரை சித்தராக வாழ்ந்து கொண்டிருப்பவர் மாதிரி பேசுகிற அவர் இந்த படத்தில் சித்தர்களை பற்றியும் சிவ பெருமான் பற்றியெல்லாம் காட்சிகளை வைத்திருக்கிறாராம். ஒரு காட்சியில் சிவனே வருகிறார் என்று அவர் சொன்னால் அதிர்ச்சி வருமா, வராதா?
பள்ளி சீருடையில் பசங்க அடிக்கிற லூட்டியெல்லாம் ட்ரெய்லரில் வருகிறது. எருமாட்டு பயலே எருமாட்டு பயலே… என்று ஹீரோயின் ஹீரோவை பார்த்து பாட்டெல்லாம் பாடுகிறார். அப்படியிருந்தும் இந்த படம் அரை ஆன்மீக படம் போல இருக்கும் போலிருக்கிறதே என்றால், சிவன்னா கையில சூலாயுதம், கழுத்துல பாம்போட வர மாட்டாரு சார். மனுஷ ரூபத்துல வருவார். திருவண்ணாமலையை சுற்றி படமெடுத்துவிட்டு அங்கு நடைபெறும் ஆன்மீக அதிசயங்களை பேசலேன்னா எப்படி என்றார் ராம்கி.
பசங்களை யூனிபார்ம்ல லவ் பண்ண வைச்சுட்டு ஆன்மீகம் பேசுனா அழகாவா இருக்கு? என்றால், அதற்கும் பொருத்தமாக ஒரு பதிலை சொல்லி எஸ்கேப் ஆகிறது பார்ட்டி. ப்ளஸ்டூ முடிச்சுட்டு கல்லூரி போற வயசுல எல்லாருக்கும் ஏற்படுற குழப்பங்கள், தானே முடிவெடுக்கிற விஷயங்கள்னு நிறைய சொல்லியிருக்கேன். ஆனால் உங்களுக்கு அந்த யூனிபார்ம்தான் உறுத்தலா தெரியுதா என்றார்.
நமக்கு இல்லைங்க… பின்னாடியே குரல் கொடுக்க கிளம்பும் பெண்கள் அமைப்புக்கு!