கமரகட்டு- விமர்சனம்
கமர் கட்டுன்னு நினைச்சு அசால்ட்டா கடிச்சா, பல்லே பணால் ஆகிடும் சமயத்துல… என்பதுதான் இந்த படத்தின் கான்செப்ட்! டைரக்டர் ராம்கி ராமகிருஷ்ணன் சொல்ல வரும் அந்த கமர்கட், படத்தின் ஹீரோக்களான ஸ்ரீராம், யுவன் இருவரையும்தான்.
‘அட பொன்னான மனசே பூவான மனசே வைக்காத பொண்ணு மேல ஆச…’ தான் படத்தின் ஒன் லைன்! ஸ்கூல் படிக்கும் போது உடன் படிக்கும் மணிஷாஜித், ரக்க்ஷாராஜ் இருவரையும் விழுந்து விழுந்து லவ் பண்ணுகிறார்கள் ஸ்ரீராமும், யுவனும். குச்சி ஐஸ், உடைஞ்ச பென்சில் என்று வளர்கிற காதல், கல்லூரிக்கு போன பின்பும் தொடர்கிறதா? காதலிக்களுக்காக பரிட்சை கூட ஒழுங்காக எழுதாமல் பெயிலாகும் இந்த பசங்களை, தங்கள் வாழ்க்கையிலிருந்தே பெயிலாக்கிவிட்டு கல்லூரியில் வேறு இரு பணக்கார பசங்களை காதலிக்கிறார்கள் மணிஷாவும் ரக்ஷாவும். அதற்கப்புறம் திட்டமிட்டு கொல்லப்படுகிறார்கள் பயலுங்க ரெண்டு பேரும். ஆவியாக கிளம்பி வரும் அவர்கள், தங்கள் காதலிகளை மீண்டும் அடைவதுதான் கமர்கட்!
ஆக மொத்தம் இதுவும் கோடம்பாக்தின் ட்ரென்ட் ஆக விளங்கும் ஆவிப்பட லிஸ்டுக்குள் ‘அடக்கமான’ கதைதான்!
எடுத்த எடுப்பிலேயை கதைக்குள் வந்துவிடுவதால், டைரக்டருக்கு திருப்தியாக ஒரு தேங்காய் உடைத்துவிடலாம். அடலசன்ட் ஏஜ். அஞ்சரை அடி மெழுகில் செய்யப்பட்ட அல்வா துண்டு போல ரெண்டு ஹீரோயின்கள். எப்படியெல்லாம் காண்பித்திருக்கலாம் அவர்களை? ஆனால் மந்திரத்திற்கும் மாயத்திற்கும் எடுத்துக் கொண்ட நேரத்தை, மற்ற மற்ற அங்க அவயங்களில் மேய்வதில் காட்டாமல் விட்டிருக்கிறார். அதற்காகவும் ஒரு ஆஹா டைரக்டரே!
படம் முழுக்க அந்த ரெண்டு பெண்களையும் பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போலிருக்கிறது. அப்படியொரு அழகு. காஸ்டயூம் விஷயத்தில் இருவரும் கடைசிவரை ஒரே மாதிரி டிரஸ் வேறு அணிகிறார்களா! அதிலும் மேய்கிறது கண்கள். அவ்வப்போது இவர்களுக்குள் ஆவி புகுந்துவிடுகிறதா? சென்ட் பாட்டிலுக்குள் பெருங்காயம் விழுந்த மாதிரி, முகத்தை கர்ண கடூரமாக வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது இருவரும். குழந்தைங்க அப்போதும் அழகு என்பதுதான் இந்த படத்தின் ஐயோ பாவ சமாச்சாரம்!
யுவனும் ஸ்ரீராமும் இவ்விரு பெண்களுக்கு நேர் எதிர். கேமிராவை குளோஸ் அப்புக்கு கொண்டு போகும்போதெல்லாம் பர்பாமென்ஸ் பண்ணுகிறேன் என்று பயமுறுத்துகிறார்கள். பல்லை கடிப்பதும், கண்ணை உருட்டுவதுமாக அவர்கள் காட்டும் பர்பாமென்ஸ், கதற வைக்கிறது. ஒரு கட்டத்தில் அவங்க செத்துட்டாங்களா, உயிரோட இருக்காங்களா என்பதே தெரியாத அளவுக்கு எல்லார் கண்ணுக்கும் தெரிகிறார்கள். எல்லாருடனும் பேசுகிறார்கள். சவால் விடுகிறார்கள். அப்படியே அந்த ஊர்லேயே ரெண்டு ரேஷன் கார்டை வாங்கிட்டு வாழ்ந்துட்டுதான் போங்களேன்ப்பா என்கிற அளவுக்கு திரிகிறார்கள்.
நாங்கள்லாம் ஆவி. அதனால் நினைச்சதெல்லாம் செய்வோம்னு, படு லோக்கலாக இறங்கி வேலை பார்ப்பதெல்லாம் காமெடி ஜானருக்குள் ஒதுங்கிவிடும் என்பதால் ஓ.கே.
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் காட்சியையும், அதற்கான மெனக்கெடல்களையும் அழகாக படம் பிடித்திருக்கிறார் ராம்கி ராமகிருஷ்ணன். அதற்காகவே கிரிவல பக்தர்கள் கமர்கட் ஓடும் தியேட்டரை ஒரு முறை முற்றுகையிடலாம்.
படத்தில் காமெடி, பைட், டான்ஸ், எல்லாமே இருக்கிறது. ஆனால் எல்லா தரப்பும் ரசிக்கும்படி இருக்கிறதா என்றால், ‘டவுட்டுதானுங்க….’
பின்னணி இசையில் சொதப்பினாலும், பாடல்களில் ஸ்கோர் செய்திருக்கிறார் இசையமைப்பாளர் பைசல். அதிலும் அந்த எருமாட்டுப் பயலே பாட்டு நல்ல ட்யூன்.
இரண்டேமுக்கால் மணி நேர படத்தில் கூசாமல் இருபது நிமிடங்களை நீக்கியிருக்கலாம். எடிட்டருக்கு என்ன பிரச்சனையோ?
கமர்கட் இனிப்புதான்! ஆனால் பல்லு பத்திரம்…
-ஆர்.எஸ்.அந்தணன்