கங்காரு- விமர்சனம் – அந்தகால ஷோபனாவை பார்த்தது போலிருக்கிறார் பிரியங்கா. இவர்தான் அந்த முரட்டு அண்ணனின் முள்ளங்கி பத்தை தங்கச்சி.

குட்டி வளர்கிற வரைக்கும் அதை தன் வயிற்றிலேயே சுமக்கும் கங்காருதான் கதையின் ‘சிம்பல்!’

பொதுவாகவே ‘குட்டி’ என்றால் டைரக்டர் சாமிக்கு பிடிக்கும் என்பது முந்தைய வரலாறு. அந்த ஒரு காரணத்திற்காகவே, ‘யாரும் யாரும் யாரோடு?’ என்கிற சந்தேகமும், பதற்றமுமாக ஒவ்வொரு ரீலையும் கடந்தால், ‘அட… அசல் நெய்யில் செய்யப்பட்ட அக்மார்க் அண்ணன் தங்கச்சி கதை மக்களே!’ அந்த கதையின் ஹீரோ லேசாக மன நிலை பாதிக்கப்பட்டவன் என்கிற அடிஷனல் ‘டச்‘சும் ஒட்டிக் கொள்வதால், அவன் ஏன் அப்படி குரூரமாக இருக்கிறான்? என்கிற கேள்விக்கெல்லாம் அதிகம் வேலை வைக்காமல் கதை பரபரவென நகர்கிறது. ‘சாமி’யை குளிப்பாட்டி சுத்தம் பண்ணிய தயாரிப்பாளருக்கு முதல் மலர் கொத்து போய் சேரட்டும்.

பால் குடிக்கும் ஒரு தங்கச்சியும், பால் வடியும் ஒரு அண்ணனுமாக அந்த ஊருக்கு வந்து சேரும் ஹீரோ மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவன் ஆகிறான். எந்நேரமும் எதையோ இழந்த முகக் களை அவனுக்கு. தங்கையை நல்லபடியாக கட்டிக் கொடுத்துவிட வேண்டும் என்பதையே லட்சியமாக கொண்டு திரியும் அவன், குடிப்பழக்கம், சிகரெட் பழக்கம் இல்லாத மாப்பிள்ளைகளாக தேடுகிறான். ஆனால் தங்கையே ஒருவனை காதலிக்க, பொறுத்தமாக வந்து சேர்ந்த அவனுக்கு கட்டிக் கொடுக்கும் நேரத்தில்தான் அந்த மாப்பிள்ளை மர்கயா. நடுவில் இந்த கோளாறு பிடித்தவனையும் காதலிக்கிறாள் ஒருத்தி. தனது நோக்கம் முழுக்க தங்கை மட்டும்தான் என்று வாழும் அவன், தன்னை நேசிப்பவளையும் வெறுக்கிறான்.

மீண்டும் தங்கைக்கு இன்னொரு மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்தால், அவனும் கல்யாண நேரத்தில் செத்துப் போகிறான். அவமானம் தாங்காமல் வெளியூர் கிளம்பினால், அங்கும் ஒரு மாப்பிள்ளையை கட்டிக்கொள்ள சொல்லி, வற்புறுத்தப்படுகிறாள் தங்கை. கடைசியில் அந்த மாப்பிள்ளைக்கும் ஆக்சிடென்ட். அதற்கப்புறம்தான் தெரிகிறது. அதுவரை நடந்தது விபத்தல்ல…. கொலை என்று! கொலையாளியை போலீஸ் தேடும் இரண்டாம் பாதி. யூகிக்க முடியாத திருப்பத்துடன் ஓடுகிறது. கங்காருவின் அந்த பாய்ச்சல், தடையோட்டம் போல விட்டுவிட்டு வேகம் எடுக்கிறது.

அறிமுக ஹீரோ அர்ஜுனா அப்படியே மிருகம் ஆதி போல இருக்கிறார். ஒரு ஹீரோவை அறிமுகப்படுத்துவதற்கு முன்பே அவனுக்கு கொடுக்கப்படுகிற டிஸ்கிரிப்ஷன், அவன் எப்படிப்பட்டவன் என்று நம்மை தயார் படுத்தி விடுவதால், அந்த முரட்டு ஆசாமியிடம் இன்னும் இன்னும் எதிர்பார்க்கிறோம் என்று துணிந்துவிடுகிறது பார்வையாளர் மனசு. அதற்காக தங்கச்சிக்கு சோறு ஊட்டும் போது கூட, நெட்டையும் போல்ட்டையும் டைட்டாக முடுக்கிவிட்ட எந்திரன் ரோபோ போல அர்ஜுனா செயல்படுவதுதான் அதிர்ச்சி. மற்றபடி சண்டைக்காட்சிகளில் நரம்பு தெறிக்க அடிக்கிறார். ஒவ்வொன்றும் இடி போல இறங்குகிறது. வருங்காலம் அவருக்கு ஒரு சரியான ஆக்ஷன் நாற்காலியோடு காத்திருக்கிறது.

அந்தகால ஷோபனாவை பார்த்தது போலிருக்கிறார் பிரியங்கா. இவர்தான் அந்த முரட்டு அண்ணனின் முள்ளங்கி பத்தை தங்கச்சி. ‘ஏன் அவனை அடிச்சே? போய் மன்னிப்பு கேளு’ என்று இவர் சொன்ன அடுத்த வினாடியே அண்ணன் பறப்பதும், விரட்டி விரட்டி மன்னிப்பு கேட்பதும் சிரிப்பு சிப்ஸ். படத்தில் அஜீத் ரசிகையாக வருகிறார் இவர். பிரியங்காவும், அவரது காதலரும் வெறும் அஜீத் பட சி.டிகளாக பரிமாற்றம் செய்து கடைசியில் காதலில் விழுவது லைவ் லவ்!

என் ஏத்தத்துக்கும் எறக்கத்துக்கும் என்னா குறை? என்று அரையும் குறையுமாக மழையில் நனைந்து புரளும் அந்த செகன்ட் ஹீரோயின் வர்ஷாவுக்கு ‘நாளைய நமீதா’ பட்டமே கொடுக்கலாம். கடைசிவரை ஹீரோவை விரட்டி விரட்டி காதலித்தாலும், ஹீரோ சாப்பிட்ட எச்சில் தட்டில் ஒட்டியிருக்கும் ஒன்றிரண்டு பருக்கை மட்டுமே அவர் கண்ட பலன்!

தம்பி ராமய்யாவுக்கு வெயிட்டான ரோல். அவரது தும்பை பூ தலையும், அதைவிட வெளுப்பான வேட்டியும் அவர்பால் மதிப்பை வாரித் தருகிறது. நல்லவேளை… சீப் காமெடியில் விழுந்து புரளாமல், நாகரீமாக சிரிக்க வைக்கிறார். ஒரு சில காட்சிகளோடு கஞ்சா கருப்பை நிறைவு செய்த டைரக்டருக்கு வண்டி வண்டியாக நன்றி. கொஞ்சமே வந்ததால்தான் குறையில்லாமல் விடைபெறுகிறார் அவரும். வில்லனே கலாபவன் மணிதான். அவரது மேனரிசங்களை ரசிக்கலாம். ஒரு காட்சியில் பொளக்கென்று அவர் பேண்ட் அவிழ்ந்து விழுகையில் பேரதிர்ச்சியாகிறது தியேட்டர்.

காவல் துறை அதிகாரியாக டைரக்டர் சாமியே நடித்திருக்கிறார். மிக பொருத்தமாக இருக்கிறது. பிரியங்காவை கல்யாணம் செய்து கொள்கிற கேரக்டரில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாச்சியே நடித்திருக்கிறார். இந்த படத்தை பொருத்தவரை இரண்டு புதிய நடிகர்களின் வரவு. எதிர்காலத்திலும் கூச்சமின்றி தொடரலாம்…

ராஜ ரத்னத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பொருத்தமான டோர்ன் கொடுத்திருப்பதால், ஏதோ அந்த ஊரையே நிஜத்தில் சுற்றி வந்த ஃபீலிங்ஸ். படத்தின் பெரிய பலம் இசை. பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ்தான் இசையமைப்பாளர். எல்லா பாடல்களும் இனிமை. குறிப்பாக அண்ணனின் பாசத்தை விளக்கும் பாடலும், வர்ஷாவின் ‘என் ஏத்தத்துக்கும் எறக்கத்துக்கும் என்னா குறை’ பாடலும்…! பின்னணி இசையிலும் கூட ஆக்ஷனுக்கேற்ப குதித்து தடதடக்கிறது அவரது இசை நுணுக்கம்.

பரிதாபத்திற்குரியவர்களுக்காக பரிதாபப்படுங்கள் என்பதை ‘படுத்தாமல்’ சொல்லியிருக்கிறார் சாமி! அதுக்காகவே உங்களை கும்புடுறோம் சாமியோவ்….!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கிளிய வளர்த்து பூனை கையில் கொடுத்துட்டாங்களே…

சற்று அதிர்ச்சியான தகவல்தான். ஆனால் சம்பந்தப்பட்ட நடிகையே, ‘ஆகட்டும்... நான் நடிக்கிறேன்’ என்று ஒப்புக் கொண்ட பிறகு, பொதுநலம் கருதி குமுறுவோர் சங்கம் இறுமினாலென்ன? கதறினாலென்ன? வேறொன்றுமில்லை....

Close