காஞ்சனா 2 விமர்சனம்

கெட்ட பேய்க்கும் நல்ல பேய்க்கும் நடுவில் ஒரு பயந்தாக்குளி பையனும், ஒரு பச்சைக்கிளி பொண்ணும் சிக்கிகிட்டா என்னாகும்? ஆவி அமுதா, விக்கிரவாண்டி ரவிச்சந்திரன்கள் போன்ற ஹைடெக் பேய் ஓட்டிகள் பார்த்தால் கூட, அவர்களுக்கும் கடைவாயில் நுரை தள்ளுகிற அளவுக்கு மிரட்டுகிறார் லாரன்ஸ். வழக்கம் போல பேய் பிசாசுகளுக்கு நடுவில் அவர் தூவும் காமெடி சாம்பிராணிக்கு கந்தலாகிறது தியேட்டர். என்ன ஒன்று? ஓவர் டோஸ் ஓவர் டோஸ் என்பார்களே… இது ஒவருக்கெல்லாம் ஓவர் டோஸ். ஏழெட்டு தெலுங்கு மசாலா படங்களை ஒரே நேரத்தில் பார்த்த மாதிரி ஜிவ்வடிக்கிறது காதும் கண்ணும்.

இரண்டு சேனல்களுக்குள் நடக்கும் போட்டிதான் கதைக்கு ஆரம்பம். அவங்க பக்தி விஷயத்தை முன்னிருத்தி முன்னாடி வந்துட்டாங்க. நாம என்ன பண்ணுறது? குழம்பும் எம்.டி. சுஹாசினிக்கு சேனல் தொகுப்பாளினி டாப்ஸி ஒரு ஐடியா தருகிறார். ஒரு பாழடைந்த பங்களாவில் பேய் வருவதாக கதை கட்டுவோம். அங்கே நாமளே சில செட்டப் பேய்களை ஏற்பாடு பண்ணி டெலிகாஸ்ட்டை அடிச்சுவிட்டோம்னா நம்ம சேனல்தான் டாப் என்கிறார். கிளம்புகிறார்கள்… கூடவே சேனலின் கேமிராமேனும் படுபயங்கர பயந்தாக்கொள்ளியுமான லாரன்ஸ்சும் கிளம்புகிறார். போகிற இடத்தில் இவர்கள் செட்டப் பண்ணுவதற்குள், ஒரு பேய் குடும்பமே என்ட்ரியாகிறது ஏரியாவுக்குள். டாப்ஸி உடம்பில் புகுந்து கொள்ளும் ஆவிகள், அவர் மூலம் லாரன்ஸ் உடம்பிலும் புகுந்து கொண்டு எதிரிகளை வேட்டையாடுவதுதான் க்ளைமாக்ஸ்.

படத்தில் யார் இருக்கிறார்களோ, இல்லையோ? கோவை சரளா இருக்கிறார். அது போதாதா? மகன் லாரன்சுக்கும் அவருக்குமான டயலாக்ஸ்… பாடி லாங்குவேஜ்கள்… ரகளை ரகளை!

சேனல் கோஷ்டிகளில் மயில்சாமி, மனேபாலா, சாம்ஸ் எல்லாரும் போய் இறங்கிவிட்டால், அப்புறம் வாய்க்கு ரெஸ்ட ஏது? அவர்களும் பேசுகிறார்கள். நாமும் சிரிக்கிறோம். அதுவும் ராத்திரி பாத்ரூமிற்கு தனியாக போக அஞ்சும் லாரன்ஸ், ரூமிற்குள்ளேயே ஒரு வாட்ச்மேனை செட்டப் பண்ணி வைப்பதுதான் கொலீர்…. நடுராத்திரியில் இவர் அந்த வாட்ச்மேன் மயில்சாமியை எழுப்ப, மனோபாலா கோஷ்டிகள் தப்புக்கணக்கு போடுவதெல்லாம் ஏடாகூட ஆடம் டீஸ்!

பொசுக் பொசுக்கென அம்மா இடுப்பில் ஏறிக் கொள்ளும் வழக்கமுடைய லாரன்சுக்கு இந்த படத்தில் ஏகப்பட்ட ‘சிட்டிங்’ ஏரியாக்கள்! அதிலும் டாப்ஸி இவரை சுமப்பதெல்லாம் செம ஜீலீர். கூடவே வரும் அந்த தொகுப்பாளினியை தனியொரு படத்தில் தனி ஆவர்த்தன கதாநாயகியாகவே காட்டலாம். அந்தளவுக்கு நச் ஃபிகர். அவர் இடுப்பும் சமயங்களில் லாரன்சுக்காக ரிசர்வ் செய்யப்படுவதால், மனுஷன் கொடுத்து வைத்தவர்தான். லாரன்ஸ் நன்றாக ஆடுகிறார் என்பதையெல்லாம் தனி வரியாக எழுதினால் அடிக்க வருவீர்கள். எல்லாம் சரிதான்… தான் எடுப்பதையெல்லாம் நீங்க ரசிச்சே ஆகணும் என்பது போல, இரண்டாம் பாதியில் அவர் ஏற்றுகிற பாரத்தில், மொத்த படத்தின் அச்சாணியுமே டமால் ஆகுதே தலைவா?

டாப்ஸி! வெள்ளாவியில வெளுத்த பெண்ணாகவே இருக்கிறார். அவரை பேயாக காட்டும்போதுதான், அந்த அழகு முகத்தில் ஆங்காங்கே அங்கலாய்ப்பு லட்சணம். இருந்தாலும் ஒரு பேய் வேஷத்தில் அதுகூட இல்லையென்றால் எப்படி? பிழை பொறுக்கிறது டாப்ஸியின் யுனிவர்சல் ரசிகர் மன்றம். மண்ணிலிருக்கும் அந்த தாலியை டாப்ஸி இழுக்கும் அந்த வினாடி கடல் புறத்தில் தோன்றும் அலைகளும், அடிக்கிற காற்றும் சிஜி கலைஞர்களின் கடும் உழைப்புக்கு ஹன்ரட் மார்க் கொடுக்கிறது.

படத்தில் ஸ்ரீமன், மதுமிதா போன்ற ஸ்டிரெங்க்த் பீஸ்கள் இருந்தும், டம்மி பல்ப்தான் எரிகிறது. ஸோ ஸேட் பாஸ்…

இசை தமன். ட்யூன்களில் தாரை தப்பட்டையை உருட்டி எடுக்கிறார். பின்னணி இசை சும்மா கிழிந்து தொங்குகிறது. தெலுங்குக்கேற்ற காரம் இசையிலும் தெளிக்கப்பட்டிருப்பதால், நம்ம ஊர் ரசிகர்கள் தமனுக்கு தரப்போகும் பாராட்டுகளில் நாலைந்து மார்க்கை தாராளமாக உருவி எறியலாம்.

க்ளைமாக்ஸ் ஃபைட் முழுக்க ரோப்பில் பறக்கிறார்கள் வில்லன் கோஷ்டியும் ஹீரோ கோஷ்டியும். சீக்கிரம் யாராவது செத்து தொலைங்கப்பா என்கிற அளவுக்கு பொறுமை சோதிக்கப்படுவதால் க்ளைமாக்ஸ் இறுதியில், ‘காஞ்சனா 3 ம் வருதுல்ல?’ என்கிற மிரட்டல் அறிவிப்பை பார்க்க ரசிகர்கள் காலி.

காஞ்சனா மூன்றோ, அல்லது முனி பார்ட் ஏழோ… எதுவாகவும் இருக்கட்டும். அடுத்த படத்திலும் கூட பேயாகவே வாங்க லாரன்ஸ். ஆனால் வேற கதையோடு வந்தால்தான் நல்லது. இல்லேன்னா அகில உலக ஆவிகள் சங்கம் உங்களை சும்மா விடாது!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஏன் உம்முன்னு இருக்கேன்? லட்சுமிமேனன் விவகாரமான பதில்!

சில ஹீரோக்கள் சிரிக்கவே மாட்டார்கள். எதையோ பறி கொடுத்தது போலவே இருப்பார்கள். இப்போது ஹீரோயின்களுக்கும் அந்த வியாதி தொற்றிக் கொண்டது போலும். நடிகை லட்சுமிமேனன் முன்பு போலில்லை....

Close