கட்டுக்கட்டாக பணத்தை விட்டவர் காகித கப்பலை மிதக்கவிட்டார்! இது ‘கப்பல்’ ஆடியோ விழா?

ஒரு காகித கப்பலை டைரக்டர் ஷங்கர் கொடுக்க, அதை தன் கையால் அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் மிதக்கவிட்டார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். கடந்த சில வருடங்களில் சொந்தப்படம் எடுத்து, தான் சேர்த்து வைத்த கட்டுக் கட்டான பணத்தையெல்லாம் இப்படி காகித கப்பலாக தொலைத்தவர் ஷங்கர். இந்த முறை, ‘கப்பல்’ என்ற பெயரில் வேறொருவர் தயாரித்த படத்தை வாங்கி வெளியிடுகிறார். போன பணமெல்லாம் கப்பலில் ஏற்றுகிற அளவுக்கு வந்து சேரட்டும் என்று வாழ்த்துவோம்.

ஆனால் அதே நேரத்தில் பல்லை நறநறவாக்கிய அந்த ஆடியோ ரிலீஸ் விழா பற்றியும் சொல்லியே ஆக வேண்டும். விஜய் விக்ரம், ஷங்கர், ரஹ்மான் வந்தால் அந்த இடம், சந்தை மடம்தான். அதற்காக இந்தியா பாகிஸ்தான் எல்லை பகுதியில் கூட அப்படியொரு கட்டுப்பாடு இருந்திருக்காது. ஐடி கார்டு இருக்கா? ரேஷன் கார்டு இருக்கா? பி.பி. நார்மலா இருக்கா?பர்சுல சில்லறை இருக்கா? என்றெல்லாம் கேட்டு பி.பி யை எகிற வைத்தார்கள் செக்யூரிடிகள். பத்திரிகையாளர் என்று சொன்னாலும், ‘உள்ள இடமில்ல’ என்று விரட்டியடிக்காத குறையாக இருந்தது ஷங்கரால் ஏற்பாடு செய்யப்பட்ட அந்த கடோத்கஜன்களின் கடமை கண்ணியம் கட்டுப்பாடு. பாதி நிருபர்கள், ‘அட போங்கப்பா… உங்களை பற்றி எழுத வந்தா எங்களையே கிறுக்கு புடிக்க வைப்பீங்களா?’ என்று வாசலோடு கழன்று கொண்டார்கள்.

எப்படியோ உருண்டு புரண்டு உள்ளே போன தியாக சீலர்கள் சொன்ன விஷயத்திலிருந்து ஒன்றிரண்டை உங்களுக்கும் சொல்வோமே என்பதால்தான் இந்த பதிவு. நிகழ்ச்சியில் விஜய் பேசிய பேச்சு கீழே-

“இயக்குநர் ஷங்கர் ஒரு படத்தை வாங்கி வெளியிடுகிறார் என்றால், அதற்கு மேல் அந்தப் படத்திற்கு வேறு எதுவும் தேவையில்லை. ஷங்கருக்கு ஒரு படம் பிடித்துவிட்டால், அதற்கு மேல் இயக்குநருக்கு வேறு எதுவும் தேவையில்லை.’கப்பல்’ திரைப்படம் ஷங்கர் சார் உள்ளே வந்தவுடன் ஏற்கனவே வெற்றியடைந்து விட்டது. படத்தின் போஸ்டர்கள் மற்றும் பாடல்கள் அனைத்துமே புதுமையாக உள்ளன.

நீண்ட நாள் கழித்து எனது நண்பர் விக்ரமுடன் மேடையில் நிற்பது சந்தோஷமாக இருக்கிறது. யாராவது என்னிடம் திரையுலகில் உங்களுடைய நண்பர் யார் என்று கேட்டால், நான் உடனே சொல்லுவது கென்னி என்றுதான். விக்ரமுடனான நட்பு சினிமாவை தாண்டிய நட்பு.அவரது குடும்பம் எங்களது வீட்டிற்கு வருவது, எனது குடும்பம் அவரது வீட்டிற்கு செல்வது என எங்களது நட்பு குடும்பம் வரை தொடர்கிறது.

அதே போல இயக்குநர் ஷங்கரும் எனக்கு நெருக்கமான நண்பர்களில் ஒருவர் மட்டுமன்றி அவரை நான் குருவாக கருதுகிறேன். ‘நண்பன்’ படத்தில் நடிக்கும் போது ஷங்கர் எப்படி பணியாற்றுகிறார் என்பதை பார்த்து நிறைய கற்றுக் கொண்டேன்” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நீங்க சிலுக்கு மாதிரியே இருக்கீங்க… பிந்து மாதவியிடம் வழிந்த காமெடி நடிகர்

‘லிரிக் என்ஜினியர்’ என்று சும்மாவா சொன்னார்கள் மதன் கார்க்கியை. கத்துகிட்ட மொத்த படிப்பையும் இப்போதெல்லாம் தான் எழுதுகிற பாடல்களில்தான் இறக்கி வைக்கிறார் மனுஷன். ‘நாங்கள்லாம் படிச்சது வேற....

Close