பிடிச்சது இந்தியன்னா எடுக்கறது பாய்ஸ்சா? கப்பல் பட இயக்குனரின் ‘சவாலே சமாளி ’ பதில்!
கடந்த வாரம் வெளியான கயல், மீகாமன், கப்பல், வெள்ளைக்கார துரை ஆகிய அந்த நான்கு படங்களில் எது ஹிட் என்கிற கேள்விக்கு பொருத்தமான விடை ரசிகர்கள் மனசிலும் தியேட்டர்காரர்களின் அக்கவுண்ட்டிலும்தான் இருக்கிறது. இருந்தாலும், மீகாமன், கப்பல் ஆகிய இரு பட இயக்குனர்களும் பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள். இது ‘சக்சஸ் மீட்’ என்றும் அறிவிக்கப்பட்டது.
எல்லாருமே பிரஸ்சை மீட் பண்ணி அவங்கவங்க படம் ஹிட்டுன்னு சொல்றீங்க, குழப்புறீங்களே…? என்று கப்பல் பட இயக்குனர் கார்த்திக் ஜி க்ரிஷ்ஷிடம் கேட்கப்பட்டது. ‘எங்க படம் வெற்றிதான். ஒரே வகுப்புல இரண்டு பர்ஸ்ட் மார்க் வாங்குன மாணவர்கள் இருக்கக் கூடாதா? மற்ற படங்களும் ஹிட்டாகட்டும்’ என்றார் கார்த்திக். கேள்விகள் மெல்ல படம் குறித்த விமர்சனமாக திரும்பியது.
‘இந்த படத்தை டைரக்டர் ஷங்கர் ரிலீஸ் செய்திருக்கார். அவர் படங்களில் உங்களுக்கு பிடிச்சது எது?’ இது கேள்வி. பதிலளித்த கார்த்திக், ‘இந்தியன்’ என்றார். ‘அப்படின்னா ஏன் இந்த படத்தை ‘பாய்ஸ்’ மாதிரி எடுத்திருக்கீங்க?’ என்று அதே செய்தியாளர் மடக்க, சற்றே தடுமாறிதான் போனார் கார்த்திக் ஜி.க்ரிஷ். ‘சார்… இந்த படத்தின் கதைக்கு என்ன தேவையோ, அதை படத்தில் வச்சுருக்கோம். மற்றபடி ஆபாசம்னு சொல்றதை நான் ஏத்துக்க மாட்டேன். என்னுடைய நெக்ஸ்ட் படத்தை வேணும்னா இந்தியன் மாதிரி எடுக்க ட்ரை பண்றேன்’ என்றார் விடாப்பிடியாக.
படத்தில் மிக முக்கியமான ‘ச்சீய்…’காட்சியே ஒருவர் தன் ஹாஃப் பேண்டுக்குள் கையை விட்டு சொறிந்து கொள்கிற காட்சிதான். அது குறித்தும் விமர்சனம் திரும்பியது. அப்படியொரு செயலை பப்ளிக்கா செய்ய முடியுமா? படத்தில் அது ஆபாசமா இருக்கே? என்றார்கள். அதற்கும் அதே நிலையில் நின்று பதிலளித்தார் கப்பல் இயக்குனர் கார்த்திக். ‘சார்… அவருக்கு அரிக்கிற இடத்துலதானே சொறிஞ்சுக்க முடியும்? இதெல்லாம் ஜஸ்ட் காமெடியான காட்சி. சிரிச்சுருங்க’ என்றார் சீரியசாக.
இந்த படத்தை டைரக்டர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் வெளியிட்டிருப்பதால், ஷங்கர் படம் பார்க்கிற ஆர்வத்தோடுதான் தியேட்டருக்குள் குவிகிறார்கள் இளம் ரசிகர்கள். டீன் ஏஜர்களை மீன் வலை போட்டு மொத்தமாய் அள்ளுகிறது இந்த கப்பல்!