இனிமே இப்படிதான்! கார்த்தி, சூர்யாவுக்கு அப்பா சிவகுமார் அட்வைஸ்
நடிகர் கார்த்தி இதுவரை நடித்த படங்களில் 90 சதவீத படங்கள் சொந்த கம்பெனியான ஸ்டூடியோ கிரீன் தயாரிப்புதான். இப்படி ஒரு கல்லாவிலேயே பணம் சேர்ந்தால், மற்ற கல்லாக்கள் சும்மாவா இருக்கும்? எப்படா விழுவார் என்று காத்திருந்து கைகொட்டினார்கள். அவரது சமீபத்திய படங்கள் சறுக்கிய போதெல்லாம் ‘நல்லா வேணும்…’ என்ற குரல்கள் கேட்க ஆரம்பித்தனவாம் கோடம்பாக்கத்தில். அதுவும் போதாதென்று அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்ட நேரத்தில் கூட ஆறுதலாக விசாரித்தவர்களில் பட முதலாளிகள் குறைவுதானாம்.
இதையெல்லாம் கருத்தில் கொண்ட அப்பா சிவகுமார், கார்த்தியை அழைத்து ஒரு நிபந்தனை விதித்தாராம். ‘தம்பி யாரோட சாபமும் நமக்கு வேண்டாம். இனிமே சொந்தக்கம்பெனி படங்கள்தான் என்கிற முடிவை மாற்றி வேறு கம்பெனி படங்களுக்கும் கால்ஷீட் கொடுங்க’ என்றாராம். பருத்திவீரன் படத்தில் ஆரம்பித்த வழக்கம், நடுவில் ஒரு சில படங்களை தவிர மீதி எல்லா படங்களையும் ஞானவேல்ராஜாவே தயாரித்தாரல்லவா? இனிமேல் அந்த வழக்கம் மாறி வெளி கம்பெனி படங்களிலும் கார்த்தி நடிப்பார் என்று தெரிகிறது.
இந்த அட்வைஸ் தம்பிக்கு மட்டும் என்றால் எப்படி? அண்ணன் சூர்யாவுக்கும் இந்த அட்வைஸ் தரப்பட்டுள்ளதாம். தனது சொந்த நிறுவனமான 2டி நிறுவனத்திலேயே நடிக்க விரும்பிய சூர்யாவும் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டு வெளி நிறுவனங்களுக்கு வாய்ப்பு கொடுப்பார் என்று தெரிகிறது.
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்கிற பிள்ளைகளை சமுதாயமும் அரவணைத்துக் கொள்ளும் என்பது இருவர் விஷயத்திலும் நிஜமானால் சந்தோஷம்!