ஒரு பய வரக்கூடாது. கேட்டை மூடு! கார்த்திக் சுப்புராஜ் செய்தது சரியா?

தமிழ்சினிமாவில் புது முயற்சிகள் வரும்போதெல்லாம், வெற்றிலை பாக்கு, மேள தாள சகிதம் வாசலில் நின்று வரவேற்கிற வழக்கம் பத்திரிகையாளர்களுக்கும் அவர்கள் மூலம் ரசிகர்களுக்கும் உண்டு. இதற்கு ஏராளமான முன் உதாரணங்கள் இருக்கிறது. சேரனின் C2H பற்றிய அறிவிப்புகள் வரும்போதெல்லாம், ‘மலர்ந்தது புரட்சி, மடிந்தது வறட்சி’ என்றெல்லாம் கூச்சல் போட்டு கொண்டிய பிரஸ்சின் எதிர்பார்ப்புகளுக்கு, சேரனே சங்கு ஊதியது வருத்தத்திலும் வருத்தம்.

நல்ல முயற்சிகள் ஆரம்ப நிலையிலேயே சொதப்பப்பட்டால், அதற்கப்புறம் அதை நாலு கால் ஜீவன் கூட சீண்டாது. அப்படியொரு சொதப்பல்தான் கார்த்திக் சுப்புராஜின் அவியல்! ஐந்து குறும்படங்களை இணைத்து அவற்றை ஒரு படமாக்கி தருவதென்பது அற்புதமான முயற்சி. நல்ல நல்ல கான்செப்ட்கள் ரசிகர்களை சென்றடையும் என்பதுடன், ஒரே படத்தை இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கண்டு தொலைக்கிற அயற்சியிலிருந்தும் அவனுக்கு விடுதலை கிடைக்கும். ஆனால் அந்த ஐந்து படங்களும் அவனை இருக்கையை விட்டு நகர முடியாததாக்க வேண்டும் அல்லவா? அங்குதான் தன் முயற்சிக்கு தானே முடக்கு வாதம் ஏற்படுத்தியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

அவியல் படத்தில் முதலில் சொல்லப்பட்ட கதையும், அதில் நடித்த நடிகர் நடிகைகளும் அபாரம். ஒரு இருபது நிமிடத்திற்குள் அந்த இயக்குனர் வைத்த ட்விஸ்ட், அதை தலையில் தாங்கி நடித்த அந்த வாலிபனும், ஒரு வயசு மட்டுமே மூத்த அந்த சித்தியும் மனதை கொள்ளையடித்துவிட்டார்கள். பெரிய திரைக்கு வந்தால் பிரமாதமான இடத்தை பிடித்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையை தந்த அந்த ஒரு படத்தை தவிர, மீதி கோர்த்துவிடப்பட்ட நான்கும் திராபை.

நமது வருத்தமெல்லாம் ஒன்றே ஒன்றுதான். இந்த நல்ல வாய்ப்பை ஏன் சரியாக பயன்படுத்திக் கொள்ள தவறினார் கார்த்திக் சுப்புராஜ். அவியல் குவியலின் அந்த முதல் படம் போலவே மீதி நான்கையும் தேடி தேடி கண்டு பிடித்து சேர்த்திருந்தால், இந்த முயற்சி கொண்டாடப்பட்டு இருக்குமே? இனிமேல் இப்படி ஒருவர், குறும்படங்களின் கலவை என்று கூறிக் கொண்டு வந்தால், எந்த ரசிகன் உள்ளே வருவான்?

சொல்லுங்க கார்த்திக் சுப்புராஜ்?

Read previous post:
Tholaindhaen – Aagam Video Song

https://youtu.be/AIpFGsPFHVk

Close