இனிமேலாவது தேறுவாரா? கார்த்திக்ராஜாவின் எதிர்காலம் எப்படி?!
ஆடியோ மார்க்கெட் அதல பாதாளத்தில் விழுந்திருச்சு என்கிற புலம்பல்கள் அவ்வப்போது சினிமாவில் ஒலித்தாலும், முன்னணி இசையமைப்பாளர்களின் படங்கள் என்றால், பணத்தை கொட்ட தயாராகவே இருக்கின்றன மேற்படி கம்பெனிகள். எனவே ஆடியோ மார்க்கெட் காயலான் கடை ரேஞ்சுக்கு இறங்கவில்லை என்கிற உண்மையோடு பின் வரும் இந்த விஷயத்தை அணுகலாம்.
அசப்பில் இளையராஜாவை போல இருந்தாலும், மியூசிக் போடுகிற விஷயத்தில் அப்பா போலில்லை கார்த்திக்ராஜா. படு சோம்பேறி என்று பெயரெடுத்தவர். ‘ரொம்ப திறமைசாலி. பட் எப்பதான் முன்னறேப் போறாரோ?’ என்று சினிமாவுலகம் கவலைப்பட்ட காலமும் போயே போச். தமிழை கொத்தி குதறும் இசையமைப்பாளர்களுக்கெல்லாம் மகுடம் சூட்டுகிற அளவுக்கு மக்களின் ரசனையிலும் பெருத்த மாற்றம். இந்த நேரத்தில்தான் திடீரென்று முழித்துக் கொண்டிருக்கிறார் கார்த்திக்ராஜா.
தனது பெயரில் தனது அம்மாவின் பெயரையும் சேர்த்துக் கொண்டு கார்த்திக்ராஜா ஜீவா ஆகியிருக்கிறார். தாயின் ஆசிர்வாதம் பெற்ற எந்த பிள்ளைகளும் சோடை போவதில்லை என்கிற வாக்குபடி, இவரது வாழ்வில் புது வசந்தம் வீச ஆரம்பித்திருக்கிறது. விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தின் இசையமைப்பாளர் கார்த்திக்ராஜாதான். பாடல்கள் எல்லாவற்றையும் சிறப்பாக ட்யூன் போட்டு சொன்ன நேரத்தில் முடித்தும் கொடுத்திருக்கிறாராம்.
மகனை பெரிய அளவில் லாஞ்ச் செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கும் விஜயகாந்த், இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டிருக்கிறார். இந்த நேரத்தில்தான் லகரி என்கிற பிரபலமான இசை நிறுவனம் ஒன்று நாற்பத்திரண்டு லட்ச ரூபாய்க்கு இப்படத்தின் பாடல் வெளியீட்டு உரிமையை பெற்றிருக்கிறது. அப்படியே இந்த பரபரப்பின் பின்னாலேயே நடந்தால், அப்பா அளவுக்கு முன்னேறாவிட்டாலும், அட்லீஸ்ட் தம்பியிடத்தையாவது பிடிக்கலாம் கார்த்திக்.
காலம் என்ன கணக்கு போட்டிருக்கோ?