கதக்களி- விமர்சனம்

கதை, ஒரு ‘பந்த்’ நாளில் நடப்பதாக வைத்துக் கொண்டாலும் கூட, வெளியூரிலிருந்து வந்து இறங்குவார் விஷால்! அவரை பொருத்தவரை அதுதான் சென்ட்டிமென்ட். கோடம்பாக்கத்தில் இப்படியொரு கதை‘கிலி’ நிலவி வரும் சூழ்நிலையில், அவரை வைத்து ‘கதக்களி’ ஆடக் கிளம்பியிருக்கிறார் பாண்டிராஜ், அதுவும் விஷாலின் நிகர லாப சென்ட்டிமென்ட்டுகளுக்கு உட்பட்டு!

கடலூரை கலக்கி வரும் ரவுடி தம்பாவுக்கும், விஷால் குடும்பத்திற்கும் ஒரு பிளாஷ்பேக் பிரச்சனை இருக்கிறது. வெளிநாட்டுக்கு வேலைக்கு போன விஷால் மீண்டும் கடலூருக்கு திரும்புகிறார். இன்னும் நாலு நாளில் அவருக்கு கல்யாணம். நண்பர்களுக்கு இன்விடேஷன் கொடுக்க கிளம்பும்போதுதான் தெரிகிறது. இவரது உற்ற நண்பன் ஒருவன், தம்பாவிடம் தற்போது வேலைக்கு சேர்ந்திருக்கிற விஷயம். “தம்பா நல்லவருடா… அவருக்கும் இன்விடேஷன் கொடு. கல்யாணத்துக்கு வருவார்” என்று நண்பன் உசுப்பிவிட, கொடுக்கிறார் விஷால். “ஊர்ல இருந்தால்(?) அவசியம் கல்யாணத்துக்கு வரணும்” என்று இவர் கூறும் அந்த வசனத்தை அப்படியே க்ளைமாக்சில் திரும்ப போடுகிறார்கள். அட… ஒரு சாதாரண வசனத்திற்குள்தான் எத்தனை வன்மம் குரூரம்?

சென்னையிலிருக்கும் வருங்கால மனைவியுடன் சேர்ந்து புடவை எடுக்க வரும் விஷாலுக்கு அண்ணனிடமிருந்து போன். “தம்பாவை போட்டுட்டாங்க!” என்று. அதிர்ச்சியுறும் விஷால், தம்பாவுடன் இருந்த நண்பனுக்கு போன் பண்ணி, “நீ ஜாக்கிரதையா இருந்துக்கோ. உன்னையும் போட்ற போறாங்க” என்று அட்வைஸ் பண்ண, ஆரம்பிக்கிறது பிரச்சனை. “உனக்கெப்படி தம்பா செத்தது தெரியும்? நீயும் உங்க அண்ணனும்தான் சேர்ந்து அவரை போட்ருக்கணும்” என்று குமுறும் நண்பன், போலீசில் புகார் கொடுக்க, சென்னையிலிருக்கும் விஷாலை உடனே விசாரணைக்கு அழைக்கிறார் ‘விவகார’ இன்ஸ்பெக்டர்.

சென்னையிலிருந்து விஷால் கடலூருக்கு திரும்பி வரும் திகில் நிமிஷங்கள் இரண்டாவது பாதியாகவும், இவருக்கும் கேத்ரீன் தெரசாவுக்குமான காதல் முதல் பாதியாகவும் நகர, “தம்பாவை போட்டது யார்?” என்கிற கேள்வியை நோக்கி நகர்கிறது க்ளைமாக்ஸ்.

விஷால் கேத்ரீன் காதலில் ஆங்காங்கே அழகு. ஆங்காங்கே ஜவ்வு. ராங்கால் லவ்வையடுத்து இருவரும், நேரில் சந்திக்கும் நிமிஷங்களில் இன்னும் சுவாரஸ்யமாக முடிகிறது அது. காதலியிடம் லேசாக அலட்டிக் கொள்ளும் விஷால் ரசிக்க வைக்கிறார். அவரது வழிசலும் கூட அழகுதான். அந்த கண்ணாடி அவரது நடிகர் சங்க வேலை பளு, இதர இதர இழுபறிகளையும் அதற்கான சோர்வையும் மறைக்க உதவியிருக்கிறது. அந்த முன் நெற்றி மூடிய ஹேர் ஸ்டைலும் நன்றாகவே இருக்கிறது.

கதை பற்றிக் கொள்ள ஆரம்பித்தவுடன், கடலூருக்கு போவதா, வேண்டாமா என்று அவர் தவிக்கும் தவிப்பில் நமக்கு லப் டப் எகிறுகிறது. இன்ஸ்பெக்டர் விசாரிக்கும் நிமிஷங்களில் ‘விஷால் ஆக்ஷன் ஹீராவாச்சே’ என்கிற ஆர்வம் கொப்பளித்து, சூழ்நிலையை காமெடியாக்கி விடுவாரோ என்று நினைக்க வைக்கிறார் பாண்டிராஜ். நல்லவேளை, அந்த இடத்தில் மிக யதார்த்தமாக காட்சியை நகர்த்தியிருப்பது சிறப்பு. மிக சரியான நேரத்தில் அவர் தப்பி ஓடி, மீண்டும் அதே போலீசை வளைத்து நிஜத்தை கக்க வைப்பதும் பலே திருப்பம்தான். ஆனால் அதையெல்லாம் காட்சியாக விளக்காமல், “என்னது தூக்கிட்டாங்களா?” என்று ஒரு கான்ஸ்டபிளை வைத்து கதையை முடித்திருப்பது மன்னிக்கவே முடியாது மங்குனி ஆட்டம்.

கேத்ரீன் அழகுதான். அவருக்கு குரல் கொடுத்த சவீதா ஓவராக கொஞ்சி, அந்த அழகின் மீது சில அவஸ்தைகளை தடவி வைத்திருக்கிறார்.

விஷாலின் அண்ணனாக நடித்திருக்கும் மைம் கோபி, குடும்பத்தோடு தப்பி தலைமறைவாக ஓடி அந்த திகில் நிமிடங்களை அப்படியே உணர வைக்கிறார். நல்ல நடிகர் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார். பாராட்டுகள்.

அந்த தம்பா, கோலிசோடா மதுசூதன்தான். பாதியிலேயே போய் விட்டாலும், மனுஷனை பார்த்த மாத்திரத்திலேயே கிடுகிடுக்கிறது. இருந்தாலும் மதுவின் ஓப்பனிங் காட்சியான சென்னை கடலூர் மீனவர்களுக்கிடையே முட்டிக் கொள்ளும் அந்த முதல் காட்சி எதற்கும் உதவாத வீண் செலவு.

கருணாஸ் மூக்குக்கு குளோஸ் அப் வைப்பதையெல்லாம் சென்சாரில் ஒரு அம்சமாகவே வைத்து தடை போடலாம். பட்… ஆங்காங்கே கவனிக்க வைத்து சிரிக்க வைக்கிறார் கருணாஸ். கொஞ்ச நேரமே வந்தாலும் குலுங்க வைத்துவிட்டு போகிறார் இமான் அண்ணாச்சி.

இசை ஹிப் ஹாப் ஆதி. பாடல்களில் அழகே அழகே… பாடல் அழகு! பின்னணி இசையில் சற்றே முரண்டு பிடிக்கிறார். பட்டி பார்க்க பார்க்க சரியாகலாம். பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவால், கதையில் ஒரு ஆக்ஷன் மூட் விலகாமல் ஒட்டிக் கொள்கிறது.

அந்த கடைசி காட்சி, கதையின் போக்கையே மாற்றிவிடுகிற திருப்பம் என்றாலும், அதுவரை விஷாலின் பதற்றமும் தேடலும் புலனாய்வும் ஏனென்ற கேள்வியை எழுப்பி விடுகிறது. கொலையாளி யாரென்பதை வாரிசுக்கு அடையாளப்படுத்திவிட்டு அவர் கிளம்புவதாகவே படத்தை முடித்திருக்கலாம்.

சமயங்களில் ஸ்டெப்புகள் தவறினாலும், கதக்களி ஆட்டத்தில் விறுவிறுப்பே அதிகம்!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பூசணிக்காய் உடைச்சாச்சு! தெறி ஷுட்டிங் ஓவர்

என்னது... தமிழ்நாட்ல இவ்ளோ மேட்டரு நடந்துருச்சா, நமக்கு தெரியாம போச்சே? என்று விஜய் ஆச்சர்யப்பட்டாலும் நம்பிட வேண்டியதுதான். ஏனென்றால், தமிழ்நாட்டை உலுக்கி வரும் பீப், ஜல்லிக்கட்டு எது...

Close