‘கத்தி ‘க்…திக்… திக்! கவுன்ட்டவுன் ஸ்டார்ட்? கத்தி வரலேன்னா, களமிறங்குகிறார் ஜெயம் ரவி?

தீபாவளி வருவதை பட்டாசுகள் நினைவூட்டுகிறதோ, இல்லையோ? படங்கள் நினைவூட்டும்! ஒருகாலத்தில் ஏழெட்டு படங்கள் வந்த காலம் போய் இப்போது உன்னைப்புடி என்னைப்புடி என்று அரும்பாடுபட்டு ஒன்றோ, ரெண்டோதான் வருகிறது. இந்த லட்சணத்தில் விஜய் படம் வந்தால் என்னாகும்? வராவிட்டால் என்னாகும்? என்கிற பெருங்கணக்கு போட்டு காய் நகர்த்த ஆரம்பித்திருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

பூஜை படத்திற்கு பூஜை போடும்போதே இது தீபாவளி ரிலீஸ் என்கிற கான்பிடன்ட்டோடு படத்தை துவங்கினார் விஷால். சொன்னபடி எல்லா வேலைகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டார்கள். சுமார் 350 தியேட்டர்களில் பூஜை ரிலீஸ் உறுதி என்கிறது தியேட்டர் வட்டாரம். நல்ல தியேட்டர்கள் என்று கணக்கெடுத்தால் தமிழ்நாட்டில் 500 ஐ தாண்டாதாம். அதில் 350 ஐ பூஜை பிடித்துக் கொண்டால்? நல்லதும் கெட்டதுமாக இன்னும் 450 தேறும் என்கிறார்கள். இதில்தான் விஜய்யின் கத்தி வர வேண்டும்.

இந்த நிமிடம் வரைக்கும் கத்தியை வாங்க ஆர்வமாக இருக்கும் விநியோகஸ்தர்கள் முன் பணம் கொடுக்கதான் அச்சம் காட்டுகிறார்களாம். ஏன்? கத்திக்கு ஆரம்பத்திலிருந்தே வருகிற பிரச்சனைதான். பணத்தை வட்டிக்கு வாங்கி இவர்களிடம் கொடுத்து… வட்டியும் போய் அசலும் அடைபட்டுவிட்டால் என்னாவது என்பதுதான் விநியோகஸ்தர்களின் விரக்தி. இந்த டென்ஷன் தீபாவளிக்கு முதல் நாள் வரைக்கும் இருக்கும் என்கிறார்கள்.

ஒருவேளை கத்தி வரலேன்னு தெரிஞ்சா கத்திக்காக காத்திருக்கிற தியேட்டர்களை கைப்பற்றி விட வேண்டும் என்று துடிக்கிறது இன்னொரு முக்கியமான படம். அதுதான் ஜெயம் ரவியின் பூலோகம். இந்த படம் முடிந்து பல மாதங்கள் ஆச்சு, நல்ல ரிலீஸ் தேதி கிடைக்கிற வரைக்கும் படத்தை வெளியே விடுவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன். அவர்தான் கத்தி வரலேன்னா…? என்ற கணக்கை நெற்றி பொட்டில் வைத்துக் கொண்டு உற்று உற்று கவனித்து வருகிறாராம்.

விஜய் இடத்தை ஜெயம் ரவி நிரப்புவாரா? அதைதான் ஜனங்கள் பொறுத்துக் கொள்வார்களா? கேள்விகள்… கேள்விகள்… இருந்தாலும் வரப்போவது ரெண்டு படங்கள்தான் என்பதால் எதுவும் நமத்துப்போகாது என்பது மட்டும் நிச்சயம்!

Read previous post:
“POOJAI” Press Meet Photos

Close