நாலாபுறத்திலும் நெருக்கடி கத்தி…இனி அவ்ளோதான்?

ராஜபக்சே, சுபாஷ்கரன் அல்லிராஜா, லைக்கா, காமன்வெல்த் மாநாட்டுக்கு உதவி, எல்லாவற்றையும் தாண்டி இப்போது புதிய சிக்கலில் சிக்கிக் கொண்டிருக்கிறது கத்தி. இந்த படத்தின் கதை தொடர்பான விவகாரம் நீதிமன்றத்திலிருப்பதால், எப்போ தீர்ப்பு வந்து? எப்போ படத்தை ரிலீஸ் பண்ணி? எப்போ ரசிகர்கள் கைதட்டி? அட போங்கப்பா!

பொதுவாகவே நம் ஊரில் ஒரு வழக்கு போட்டால், குற்றவாளி குழிக்கு போன பின்னால்தான் பிடிவாரண்ட்டே வரும். அந்தளவுக்கு வேகம்! ‘கத்தியின் கதை என்னுடையது. நான் முருகதாசிடம் இந்த கதையை இரண்டரை மணி நேரம் சொன்னேன். கதையை கேட்டவர் நன்றாக இருப்பதாக கூறி அவரது கம்பெனியிலேயே என்னை படம் இயக்க சொன்னார். கதையை இன்னும் மெருகேற்றி வரும்படி கூறியிருந்தார். அதற்காகவே ஒன்றரை வருடம் செலவிட்டேன். இப்போது அவர் எடுத்து வரும் ‘கத்தி’ படத்தின் கதை என்னுடையது என்று அறிகிறேன். எனவே என்னை முருகதாசிடம் அறிமுகப்படுத்தி வைத்து கதை சொல்ல வைத்த ஜெகனையும் முருகதாசையும் கைது செய்து விசாரிக்க வேண்டும். எனக்கான நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும்’ என்று மீஞ்சூர் கோபி என்பவர் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இவருக்கு ஆதரவாக பிரபல வழக்கறிஞர் சங்கரசுப்பு வாதாடி வருகிறார்.

நீதிமன்றம் இருவரது கதையின் முழு ஸ்கிரிப்டையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தது. மீஞ்சூர் கோபி தன் ஸ்கிரிப்டை ஒப்படைத்துவிட்டார். ஆனால் முருகதாஸ் தரப்பிலிருந்து இன்னும் ஸ்கிரிப்ட் வரவில்லையாம். ஸ்கிரிப்ட் கோர்ட்டுக்கு போனால் கதை லீக் ஆகிவிடும் என்று அஞ்சுகிறாராம் அவர்.

நமது சந்தேகமெல்லாம் இதுதான். ஒரு வழக்கு நீதிமன்றத்திற்கு போனால், தீர்ப்பு எத்தனை வருடம் கழித்து வரும் என்பது நம்மை படைத்த கடவுளுக்கு கூட தெரியாது. பல வழக்குகளின் கதி அப்படிதான். அந்த லிஸ்ட்டில் கத்தியும் சேர்ந்தால் என்னாவது? சிந்துபாத் லைலாவை தேடிப்போன கதைதான் போலிருக்கிறது.

கத்தியை சுற்றி பின்னப்படும் வலைகள் சிலந்தி வலையாக இருந்தால் சரக்கென அறுத்தெறிந்துவிடுவார்கள். ஒவ்வொன்றும் இரும்பு வலையாக இருக்கிறதே… என்ன செய்யப் போகிறார்களோ?

Read previous post:
புதுமுகங்கள் நடிக்கும் விடியும் வரை விண்மீன்களாவோம்

சாவேனியர் புரொடக்ஷன்ஸ் என்ற படநிறுவனம் சார்பாக B.விஜய்குமார் கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்கி தயாரித்து நடிக்கும் படத்திற்கு  “விடியும் வரை விண்மீன்களாவோம்” என்று பெயரிடப் பட்டுள்ளது. கதாநாயகர்களாக B.விஜய்குமார் , ஜெயகாந்தன்,சிவபெருமாள்,சந்துரு...

Close