கலைஞரிடம் வந்த கத்தி
அரசியல் வேறு, சினிமா வேறு, என்கிற சித்தாந்தமெல்லாம் வெறும் பேச்சுதான். டாப் ஹீரோக்களின் படங்கள் வெளியாகிற போதெல்லாம் சைலன்ட்டாக மூக்கை நுழைத்துக் கொள்ளும் அரசியல்! சினிமாக்காரர்கள் மட்டும் லேசுப்பட்டவர்களா? வசனங்களில் அரசியலை சீண்டுவார்கள். இப்படி ‘மதியான குழம்புக்கு மலைப்பாம்பு துண்டம்தான்’ என்று வேடிக்கை காட்டுகிற இவர்களை யாராலும் லேசில் புரிந்து கொள்ள முடியாது.
கத்தி படத்தில் எல்லா பிரச்சனைகளையும் இழுத்து தீப்பொறி பறக்க வசனம் பேசிய விஜய், அப்படியே 2ஜி அலைக்கற்றை பற்றியும் வசனங்களை எடுத்துவிட, ஐயோ பாவம்… அதிகம் நொந்தவர் திமுக வின் மாவட்ட செயலளார் ஜெ.அன்பழகன்தான். கத்தி வெளியீட்டில் ஏற்பட்ட பிரச்சனையின் போதெல்லாம் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்தவரும் அவர்தான். தலைவா வெளியீட்டில் பிரச்சனை வந்தபோது கூட, ‘நானே படத்தை வெளியிடுறேன். தர்றீங்களா?’ என்று கேட்டார். இப்போது ‘கத்திக்கு என் ஆதரவு உண்டு. ரசிகர்களும் முதல்நாளே தியேட்டருக்கு சென்று தங்கள் ஆதரவை காட்டி கத்தியை வெற்றிபெற செய்ய வேண்டும்’ என்றார். கடைசியில் அவரது கட்சியையே படத்தில் செம வாரு வாரியிருந்ததால் ஜெ.அன்பழகன் கப்சிப்.
எல்லாரும் வேணும் என்று விஜய் நினைத்தாரோ இல்லையோ? படத்தின் தயாரிப்பாளர் கருணாமூர்த்தி நினைத்திருக்கிறார். அதன் விளைவாக படம் வெளியாகிற நாள் வரைக்கும் பொறுமையாக இருந்தவர், படம் வெளியாகி எல்லா இடங்களிலும் சூப்பர் ஹிட் என்று தெரிந்ததும் செய்த முதல் வேலை என்ன தெரியுமா? கலைஞர் டி.வி.க்கும் விளம்பரம் கொடுங்க என்றதுதான். மற்ற தொலைக்காட்சிகளில் வெளிவந்த கத்தி விளம்பரம், சரியாக கலைஞர் டி.வியிலும் வர ஆரம்பித்திருக்கிறது.
பைபாஸ் ஆபரேஷன் முடிஞ்சாச்சு. இனி மருத்துவரின் ஸ்டெதாஸ்கோப்பை இழுத்து விளையாடினால் கூட தப்பில்லைதான்!