முடிவுக்கு வந்தது கத்தி பிரச்சனை! சற்று முன்னர் கிடைத்த தகவல்…
தரப்பட்ட போஸ்டரை ஒட்டுவதா, வேண்டாமா? முன் பதிவு தொடங்கலாமா, இல்லையா? இப்படி கேள்வியும் கிறுக்கலுமாக கிடந்த அத்தனை தியேட்டர்களுக்கும் ஆரவார முடிவு கிடைச்சாச்சு. கடந்த இரண்டு நாட்களாகவே செம இழுபறியில் இருந்த கத்தி வெளியீட்டு பிரச்சனை, சற்று முன்னர் முடிவுக்கு வந்ததாக தகவல் பரவுகிறது. தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மற்றும் தமிழர் சார்ந்த இயக்கங்கள் ‘லைக்கா’ என்ற பெயரை மட்டும் நீக்கிவிட்டு படத்தை வெளியிட்டுக் கொள்ளுங்கள் என்று முண்டா தட்டிக் கொண்டு களத்தில் இறங்க, முடிந்தவரைக்கும் அதற்கு இசைவு கொடுக்காமல் இழுத்தடித்து வந்தார்கள் கத்தி தயாரிப்பாளர்கள்.
இந்த பிரச்சனையில் அரசலும் புரசலுமாக திரையுலகத்தின் முன்னணி ஹீரோக்களும் விஜய்க்கு ஆதரவாகவே இருந்தார்கள். அவ்வப்போது போன் போட்டு சம்பந்தப்பட்டவர்களிடம் ‘பிரச்சனை தீர்ந்ததா?’ என்று கேட்டுக் கொண்டே இருந்தது தனி சுவாரஸ்யம். விஷால் உணர்ச்சி வசப்பட்டு விநியோகஸ்தர்களிடம் குமுறியதெல்லாம் தனிக்கதை.
‘ரிசர்வேஷன் செய்யப்படுகிறது…’ என்று கடந்த இரண்டு நாட்களாகவே நாளிதழில் விளம்பரம் வந்தாலும், கவுன்டரை குளோஸ் பண்ணியே வைத்திருந்தார்கள் கத்திக்கு. இன்டர்நெட் புக்கிங்கும் நஹி . நேரம் செல்ல செல்ல, அவ்ளோதான் கத்தி என்ற எண்ணமும் தலையோங்கியது. எல்லா சந்தேகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
சற்று முன்னர் முடிந்த பேச்சு வார்த்தைக்கு பிறகு கத்தி தீபாவளிக்கு வருவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில், தமிழகம் மற்றும் புதுவையில் லைக்கா என்ற பெயரில்லாமல் கத்தி வெளியிடப்படுமாம். மற்றபடி உலகெங்கும் லைகா வெளியீடுதான். இப்படியொரு ஒப்பந்தத்தை இரு தரப்பும் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து நாளை காலையில் இருந்து ரிசர்வேஷன் துவங்குகிறதாம்.
விஜய் ரசிகர்கள் நிம்மதியாக உறங்கப் போகலாம்!