கத்தி விமர்சனம்

சொக்காயை பிடித்து கேள்வி கேட்கிற மாஸ் ஹீரோக்கள் யாரும், அப்போதும் கூட கொஞ்சம் அடக்கி வாசிக்கவே ஆசைப்படுவார்கள். ஆனால் இந்த படத்தில் விஜய் ஏர்கலப்பைக்கு ஆதரவாக இருதோள்கள் உயர்த்துகிறார். ‘விவசாயம்தான்டா முதுகெலும்பு. அதையும் இழந்துட்டு எதை வச்சு உயிர் வாழ்வே? என்று கேள்வி கேட்கிறார். டீப் வில்லேஜ் தொடங்கி டாப் சிட்டி வரைக்கும் விஜய்க்கென இருக்கும் மாஸ், இந்த படத்தின் கருத்தை எங்கேயோ கொண்டு போய் சேர்க்கும். அந்த ஒரு விஷயத்திற்காகவே விஜய்க்கு ஒரு வெல்கம்! கத்திக்கு ஒரு கவன ஈர்ப்பு!

வெளிமாநில சிறையிலிருந்து தப்பிக்கும் விஜய், அங்கிருந்து சென்னைக்கு வந்து சேர்கிறார். அறைத்தோழன் சதீஷ் உதவியுடன் போலி பாஸ்போர்ட் எடுத்து பாங்காக் செல்வதுதான் அவரது குளுகுளு திட்டம். ஏர்போர்ட்டில் சமந்தாவை நோக்கும் இந்த விளையாட்டுப்புள்ள விஜய், அந்த வினாடியே பாங்காக் பயணத்திற்கு ஒரேயடியாக முழுக்கு போட்டுவிட்டு ‘சமந்தாவே நமஹ’ என்று திரிய நினைக்கிறார். நடுவில் தன்னை போலவே இருக்கும் இன்னொரு விஜய்யை யாரோ மர்ம நபர்கள் சுட்டுவிட்டு தப்பியோட, அவரை கொண்டுபோய் மருத்துவமனையில் சேர்க்கிறார். சுடப்பட்ட விஜய் ஒரு முதியோர் இல்லம் நடத்துவதையும், அவருக்கு பல லட்ச ரூபாய் பணம் தருவதற்காக சிலர் முன் வருவதையும் அறிந்து, மேற்படி விஜய்யை தப்பி வந்த சிறைக்கு பேக்கப் பண்ணி விட்டு இங்கேயே தங்குகிறார்….வேறொன்றுமில்லை, பணத்தை ஸ்வாகா செய்யும் திட்டத்துடன்தான்! இவரை அவரென்று நினைத்துக் கொண்டு மற்றவர்கள் டீல் செய்வதும், அவராகவே இவர் மாறி சில முக்கிய முடிவுகளை எடுப்பதும்தான் படம்.

ஆள்மாறாட்ட விஜய் எப்போது சிக்குகிறார்? தன்னை விட தன் லட்சியத்தை முன்னெடுத்துச் செல்லும் விஜய்யை ஒரிஜனல் விஜய் எப்போது சந்தித்தார்? இருவரும் என்னவானார்கள்? சமந்தாவின் லவ் என்னாச்சு? இப்படி பற்பல கேள்விகள். சிற்சில சுவாரஸ்யங்கள் என்று கத்தி, சில இடங்களில் மழுங்கிய கத்தியாகவும், சில இடங்களில் கருகரு கத்தியாகவும் மாறி மாறி கூர்மை காட்டுகிறது. எப்படியிருந்தாலும், எவ்வளவு ரத்தம் சிந்தினாலும் விஜய்யின் கேரியரில் ‘பி பாஸிட்டிவ்’ படம்தான் இது.

விஜய்யின் முதல் வித்தியாசமே படம் நெடுகிலும் அவரை சுற்றி நாளைக்கோ, மறுநாளோ என்கிற பெரிசுகள் இருப்பதுதான். ‘கெழங்கட்டைகளை வச்சுகிட்டு போராட்டம் பண்றீங்க?’ என்று டி.வி நிருபர் ஒருவர் கேட்கிற அளவுக்கு பெரிசுங்க ஏரியா அது. வேறொரு சந்தர்ப்பத்தில் அதற்கு விளக்கமும் கொடுக்கிறார் விஜய். தந்தை பெரியார், அன்னை தெரசா, அண்ணல் காந்தி என்று அவரவர் வயசை சொல்லி பொளக்கிறாரே… விஜய்யின் ஆக்ரோஷ பதிலே அந்த பெரிசுகளையும், அவர்களை நேசிக்கும் விஜய்யையும் நேசிக்க வைக்கிறது. இந்த படத்திற்காக வசனம் எழுதிய ஏ.ஆர்.முருகதாசை கூட பிறகு பாராட்டலாம். எதிர்கால அரசியல், நிகழ்கால கவிழ்ப்புகள் என்று எதற்கும் அஞ்சாமல், அவற்றை விஜய் தன் வாயால் உச்சரிக்கும் ஒவ்வொரு தருணமும், சூடானவை. தைரியமானவை. அதுவும் 2ஜி அலைக்கற்றை மோசடி பற்றியெல்லாம் அவர் பேசும்போது, இந்த கர்ஜனை எப்படி சாத்தியமாச்சு என்று ஆச்சர்யப்பட வைக்கிறது.

படத்தில் இரண்டு விஜய் என்று காட்டும்போதே இவருக்கும் அவருக்கும் என்ன வித்தியாசம் என்று தேட ஆரம்பிக்கிறது கண்கள். ஆனால், ஜீவானந்தத்திற்கும், கதிரேசனுக்கும் நடுவே குணத்தால் சுவர் எழுப்பி, நடிப்பால் அசர வைக்கிறார் விஜய். வடை மாவை கொண்டு வத்தல் பிழிந்த மாதிரி, அரைகுறையாகதான் இருக்கிறது விஜய் சமந்தா லவ். இருந்தாலும், அதிலொன்றும் பெரிய நஷ்டம் இல்லை. நடுநடுவே டூயட் பாடிக் கொள்கிறார்கள். ரகசியமாக சிரித்துக் கொள்கிறார்கள். பட்… சண்டை காட்சிக்கும் ஒரு லாஜிக் வைத்து அடிக்கிறாரே… அங்கே நிற்கிறது விஜய்யின் ஆக்ஷனும், முருகதாசின் பர்பெக்ஷனும். ‘ஒரே நேரத்தில் நாற்பது பேரு வர்றாங்களே, எப்பிடிடா?’ என்கிற சதீஷிடம், கொத்தாக சில்லரை அள்ளி வைத்துக் கொண்டு ‘காசை கீழே போடும்போது கரண்ட் ஆஃப் பண்ணு. அப்புறம் ஆன் பண்ணு. திரும்பவும் காசு போடும்போது கரண்ட் ஆஃப் பண்ணு’ என்று திட்டம் வகுத்து கட்டம் கட்டுவது செம… செம…!

சட்டென்று ‘புளூ பிரிண்ட் கொடுங்க’ என கேட்டு வாங்கி, சடாரென அதை மேசையில் விரித்து பிளான் போடும் விஜய், அவ்வப்போது மேஜைக்கு கீழே குனியும்போது கீழே குழாய் தெரிவதெல்லாம், இன்னும் கொஞ்சநாளைக்கு பேஸ்புக், ட்விட்டர்களை கதற வைக்கும். அப்படியொரு பொழுதுபோக்கு பீரங்கி…ங்ணா அது!

‘நம்ம ஊரு பிரச்சனையை நாட்டுக்கு வெளிப்படுத்துறதுக்கு ஒரு மீடியா கூட முன் வரலே. விடுங்க. நாமளே அவங்களை வரவழைப்போம்’ என்று அவர் போடுகிற திட்டத்தில் லாஜிக் இல்லாவிட்டாலும் ரகளை இருக்கிறது. ‘சென்னைக்கு போற குடிநீரை நாலு நாளைக்கு முடக்குறோம்’ என்று களமிறங்கும் அவரும், பெருசுகளும் நினைத்த மாதிரியே சென்னையை ஸ்தம்பிக்க வைப்பது கற்பனைக்கும் எட்டாத சொரேர்…! இந்த தடாலடியை முன் வைத்து அவர் மீடியாவை நெருப்பில் புரட்டி எடுப்பதை எந்த வகையில் சேர்க்க? (நாட்ல சட்டம் ஒழுங்கு சவுரியமா இருக்குன்னா அதுக்கு மீடியாயும் ஒரு காரணம்ங்ணா… )

ஜீவானந்தம், கிராமத்தை விட்டு சிட்டிக்கு வருவது ஏன்? அந்த கிராமத்தின் நிஜ வேதனை என்ன என்பதை ஒரு அரை மணி நேர பிளாஷ்பேக்காக காட்டுகிறார் ஏ.ஆர்..முருகதாஸ். ஒளிப்பதிவாளர் தந்திருக்கும் அந்த ‘டோர்ன்’ அவசியமேயில்லையே ஐயா? இருந்தாலும் அந்த கதை சொல்லும் நிஜம்தான் படத்தை உயிரோட்டமாக ஓட வைக்கும் ரத்த நாளம்.

சமந்தா ஆள் சிக்கென்று இருக்கிறார். முகத்தில்தான் ஏனோ எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ் எடையுடன் ‘பூரிப்பு’ பொங்குகிறது. சற்றே குறைப்பது சவுரியம் தாயீ…! காமெடிக்கு சந்தானம், சூரி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. ஒரு வடிவேலுவும், பவர் ஸ்டார் சீனிவாசனும் கூடவா கிடைக்காமல் போய்விட்டார்கள். விஜய்யுடன் இணைந்து நம்மை சிரிக்க வைக்கிறேன் பேர்வழி என்று சல்லடை போடுகிறார் சதீஷ். பட் சிரிப்புதான் சிக்கவேயில்லை. நல்லவேளை, தனிப்பட்ட விஜய்யே அதையும் தந்துவிடுவதால் தப்பித்தோம்.

எம்.என்.சி நிறுவனங்கள் எப்படியெல்லாம் பொதுமக்களின் சொத்துக்களை கபளீகரம் பண்ணுகிறது என்பதை அதன் எல்லைவரை சென்று விளக்கியிருக்கிறார் முருகதாஸ். அந்த கேரக்டருக்கு சர்வ பொருத்தமாக இருக்கிறார் நீல் நிதின் முகேஷ்.

பாடல்களில் செல்ஃபி புள்ள -யில் கலக்குகிறார் அனிருத். அந்த ஹிப்ஹாப் தமிழனின் எக்ஸ்பிரஸ் வேக தமிழ் பாட்டு எப்பவோ வந்த ஓல்டு பேஷன் அண்ணாச்சி. ஒரு காட்சியில் பூமிக்கடியில் ஓடும் நீரோட்டத்தை மற்றவர்களுக்கு ஒலிக்க விடுகிறார் விஜய். அதை காதில் கேட்டு அனுபவிப்பதற்குள் குறுக்கீடு செய்கிறது அனிருத்தின் பின்னணி இசை. இப்படி அபத்தம் பாதி, அப்பம் மீதி என்று கலவையாக கவர்கிறார் மனுஷன்.

பன்னாட்டு நிறுவனங்கள் வரட்டும். நல்லதுதான். ஆனால் அவையெல்லாம் என்ன மாதிரியான கம்பெனிகளாக இருக்க வேண்டும் என்று விஜய் விவரிக்கும் ஒவ்வொரு வசனத்திற்கும் தியேட்டரில் கைதட்டல்கள் பறக்கிறது. கம்யூனிசம்னா என்ன என்று கேட்கும்போது, ‘என் பசி தீர்ந்த பிறகு, நான் சாப்பிடும் ஒவ்வொரு இட்லியும் இன்னொருவருடையது’ என்று விஜய் கூறும் வசனம், சின்ன தீப்பெட்டிக்குள் அடக்கப்பட்ட தீப்பிழம்பு. ‘உலகம் முழுக்க ரசிகர்கள். ரசிகர்கள்தான் உலகம்’ என்று வாழும் விஜய்க்கு இந்த வசனங்கள் தரப்போகும் பரிசுகள் எதுவாகவும் இருக்கட்டும்… இனி ஹீரோக்கள் அனைவரும் சப்தமாக பேச வேண்டிய நேரம் இது என்பதை உணர்த்தியிருக்கிறார் அவர்.

கெத்து ஃபைட்டு, குத்து பாட்டு, வெத்து வேட்டு வசனங்கள் என்ற குறுகிய வட்டத்திலிருந்தே ரசிகர்களை வளைத்துக் கொண்டிருந்த விஜய், தன் எல்லைகளை விரித்து இறக்கைகளை பறக்க விட்டிருக்கிறார். இத…இத…இததான் எதிர்பார்க்குது ஊரும் உலகமும்! கமான் விஜய்…

-ஆர்.எஸ்.அந்தணன்

1 Comment
  1. ananth says

    over jaalra adikathinka anthanan sir good content worst screenplay,spread thoughts

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கத்திக்கு ஆதரவாக மக்கள் பவரை காட்டணும்! இலங்கைக்கு ‘விசிட் ’ போன அசின் ஆக்ரோஷம்!

தன் மீது பாய்ந்த குண்டூசி, விஜய் மீது கடப்பாரையாக மோதுவதை சற்று கவலையோடு கவனித்துக் கொண்டிருக்கிறார் நடிகை அசின். கலையையும் அரசியலையும் மிக்ஸ் பண்ணாதீங்க என்று அவர்...

Close