ராஜபக்சே நண்பரின் குடும்பவிழா! விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், சமந்தா உள்ளிட்ட மொத்த ‘கத்தி’ குழுவினரும் லண்டன் பயணம்
இன்னும் சில தினங்களில் லண்டன் செல்லவிருக்கிறார் விஜய். இந்த அழைப்பு உலகமெங்கும் வாழும் தமிழ் மக்கள் தற்போது விழுந்து விழுந்து விவாதித்து வரும் ராஜபக்சேவின் பார்ட்னரான லைக்கா மொபைல் நிறுவன அதிபர் அல்லிராஜாவினுடயதாம். தனது தாயாரான ஞானம் பெயரிலேயே சினிமா புரடக்ஷன் நிறுவனம் அமைத்து ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற படத்தை தயாரித்தவர்தான் அல்லிராஜா. ஆனால் அப்போதெல்லாம் அவரை பற்றி அதிகம் தெரியாமல் அமைதி காத்துவிட்டது சினிமாவுலகம்.
தற்போது அவர் விஜய் நடிக்கும் ‘கத்தி’ படத்தை தயாரிக்கும் போதுதான் மேற்படி லைக்கா நிறுவனம் எது? அதன் தலைவர் யார்? அவருடைய கூட்டாளி யார்? என்றெல்லாம் கேள்வி எழுந்தது. லண்டனில் மட்டுமல்ல, உலகத்தின் பல நாடுகளில் பிரபலமாக விளங்கும் இந்த லைக்கா மொபைல் அதிபர் அல்லிராஜா ஐங்கரன் நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார். ஆனால் அவருக்கும் ராஜபக்சேவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று ஐங்கரன் நிறுவனம் விளக்கம் கூறியுள்ளது.
இதற்கிடையில் தனது தாயார் ஞானம் அம்மாளின் பிறந்த தினத்தை வெகு விமரிசையாக கொண்டாட திட்டமிட்டிருக்கிறாராம் அல்லிராஜா. இதற்காக தனது தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் ‘கத்தி’ படக்குழுவினர் அத்தனை பேரையும் லண்டனுக்கு அழைத்திருக்கிறார். அவரது அழைப்பை ஏற்று இன்னும் சில தினங்களில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் சென்னையிலிருந்து தனி விமானத்தில் செல்லவிருக்கிறார்கள். இந்த விருந்து கேளிக்கைக்காகவே சுமார் 25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாம்.
விஜய், சமந்தா, ஏ.ஆர்.முருகதாஸ், ஆகியோருடன் படத்தில் நடித்த இன்னபிற துணை நடிகர் நடிகைகளும் கூட செல்வார்கள் என்கிறது நமக்கு கிடைத்த தகவல்கள்.