கத்துக்குட்டி – விமர்சனம்

நஞ்சையும், புஞ்சையும் கொஞ்சி விளையாடிய தஞ்சை, இன்று ஒரு எலிக் குஞ்சைப் போல பேஸ்த் அடித்துக்கிடக்கிறது. எல்லாம் மீத்தேன் வாயு எடுக்கிறேன் பேர்வழி என்று அரசுகள் தரும் குடைச்சலால்தான்! வாழ்வாதாரத்தை வற்றிப் போக வைக்கும் அந்த முரட்டு முயற்சிக்கு, ஒரு முரட்டு அறை விடுகிறது கத்துக்குட்டி! சற்று கவனம் சிதறியிருந்தால் கூட, டாகுமென்ட்ரி வகையில் முடிந்திருக்கும். ஆனால் கூரான காம்பஸ்கள் நிறைந்த ஜியாமென்ட்ரி பாக்சுக்குள் குட்டி குட்டி கலர் மிட்டாய்களை கொட்டி வைத்த மாதிரி, அதற்குள் காதல், தேர்தல், மோதல், சாதல், என்று பரபர விறுவிறு விஷயங்களை கொட்டி இரண்டரை மணி நேர இனிப்பு செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் சரவணன்.

ஆள் பகுத்தறிவாளர் என்பதை டைட்டில் கார்டிலேயே உணர்த்திவிடுகிறார். ‘இவனை நம்புனா தெருவுல விட்டுட்டு போயிடுவானே…’ என்கிற டயலாக் வரும்போது, இவரது பெயர் கரெக்டாக டைட்டிலில் பளிச்சிடுகிறது. (என்னாவொரு துணிச்சல்ங்கிறேன்…! ) அதற்கப்புறமும் வரி வரியாக நினைத்து நினைத்து ரசிக்க வைக்கிறது ஒவ்வொரு வசனங்களும். சமகால அரசியலையும், சமூக மாற்றங்களையும் இழுத்து வைத்து கேலி பேசுகிற அந்த வசனங்களுக்காகவே இன்னொரு முறை ‘ரிப்பீட்’ அடிக்கலாம்!

நரேன்தான் ஹீரோ. நேர்மையான அரசியல்வாதியின் மகன். அவரது வேலை நேரம்… வெட்டி வம்பும், ஓய்வு நேரம்… குடியாகவும் இருக்கிறது. குடியிருக்கும் தெருவில் ஆரம்பித்து பக்கத்து கிராமம் வரைக்கும் இவரும் இவரது பெஸ்ட் பிரண்ட் சூரியும் வளர்க்காத வம்பு சண்டையில்லை. டிகிரி முடித்த பொறுக்கியாகவே திரியும் இவருக்கு திடீரென தேர்தலில் நிற்கிற வாய்ப்பு வர, எதிர்க்கட்சியும் ஒரு படித்த இளைஞரை இறக்குகிறது. கடும் போட்டி? யாருக்கு வெற்றி என்பது க்ளைமாக்ஸ். ஒரு விவசாயியின் பட்டினிச் சாவை, அரசு எந்திரமும் அதிகாரிகளும் எப்படி கொச்சைப்படுத்துகிறார்கள் என்பதையும் நடுவில் புகுத்தி விறுவிறுப்பான திரைக்கதையாலும், வெட்டிரும்பு வசனங்களாலும் அசரடித்திருக்கிறார் சரவணன்.

மீத்தேன் வாயுவை மண்ணிலிருந்து எப்படி எடுக்கிறார்கள் என்பதை இரண்டு நிமிஷத்திற்கும் குறைவான விளக்கப்படம் மூலமாக அவர் காட்டுகிற போது ரத்தம் கொதிக்கிறது. ‘உலக நாடுகளில் எல்லாம் தடை செய்யப்பட்ட அந்த முயற்சியை இங்கே ஏண்டா அனுமதிக்கிறீங்க?’ என்று இவர் கேட்கிற கேள்விக்கு எந்த கொம்பனாலும் பதில் சொல்ல முடியாது.

ரியல் எஸ்டேட் ஷுட்டிங்குக்காக வந்து, நரேனிடம் மாட்டிக் கொள்ளும் நடிகை தேவிப்பிரியாவிடம், நரேன் கேட்கிற கேள்விகள் ஒவ்வொன்றும் ‘எவன் தலையிலாவது நிலத்தை கட்டிடணும்’ என்று முக்குகிற நடிகர் நடிகைகளுக்கு குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தாமல் விடாது. “உங்க தொழிலுக்குள்ள நாங்க தலையிடுறோமா? ஏண்டி விவசாயியோட தொழில்ல வந்து தலையிடுறீங்க” என்று அவர் கேட்கிற கேள்விக்கு யாரால் பதில் சொல்ல முடியும்?

‘‘எறும்பை எதுக்குப்பா அடிக்கணும். கொஞ்சம் சர்க்கரையை எடுத்து தூரத்துல வச்சா அதுவே நகர்ந்து போயிடுமே” என்று பேசி முதல் காட்சியிலேயே மனசுக்குள் வந்துவிடுகிறார் ஹீரோயின் சிருஷ்டி டாங்கே. இவர் மனதில் நரேனுக்கு என்ன மாதிரியான இடம்? அதற்கப்புறம் உண்மை தெரிந்ததும் அது என்னவாகிறது? என்பதையெல்லாம் யூகிக்க முடிந்தாலும், இவர்களின் இந்த காதல் போர்ஷன் ஒரு ரசனை ரங்கோலிதான்!

‘சிரிச்சேயாகணும். வேற வழியில்ல’ என்பதை போலதான் இருக்கின்றன படத்தின் பெரும்பாலான காட்சிகள். அதில் சரியாக ‘பிட்டிங்’ வைத்து பொருந்திக் கொள்கிறார் சூரி. இவரது சுமார் முணுமுணுப்புக்கு கூட இடியாக சிரிக்கிறது தியேட்டர். ‘போம்மா நம்மாழ்வார் பேத்தி. போய் எறும்புக்கு எலும்பு சூப்பு வச்சுக்கொடு’ என்று போகிற போக்கில் இவர் போட்டுவிட்டு போகிற டயலாக்கை அடுத்த காட்சியிலும் நினைத்து சிரிக்கலாம்.

படத்தில் இரு முக்கியமான கேரக்டர்கள். பாரதிராஜா தம்பி ஜெயராஜும், தயாரிப்பாளர் ஞானவேலும்தான் அவர்கள்! ஒரு அரசியல்வாதி தகப்பனின் தவிப்பையும் பெருமையையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் ஜெயராஜ். ‘மகன் தறுதலையா போயிட்டானே’ என்கிற கவலை தோளில் கிடக்கிற துண்டை விட பொருத்தமாக உட்கார்ந்து கொள்கிறது அவரது முகத்தில். மாவட்டமாக வரும் ஞானவேல் கம்பீரமான கரை வேட்டியாகவும், யாரும் இல்லாத நேரத்தில் கடைந்தெடுத்த தர லோக்கலுமாக டபுள் முகம் காட்டுகிறார். அதுவும் எதிர்க்கட்சிக்காரனின் ஜாதகத்தை சாமியாரிடம் காட்டி, அவனுக்கு அரசியலில் எதிர்காலமே இல்லை என்று தெரிந்தபின்பு ஒரு குத்தாட்டம் போடுகிறார் பாருங்கள்… விழுந்து விழுந்து சிரித்து விலா சுளுக்கிக் கொள்கிறது தியேட்டர்.

தேர்தல் நேரத்து ஓட்டு எண்ணிக்கை அறிவிப்பை ‘அமைதிப்படை’ படத்திற்கு பிறகு அதிகம் ரசித்தது இந்த படத்தில்தான்!

அருள்தேவின் இசையில் அமைதியான, அலட்டல் இல்லாத, அதே நேரத்தில் பொருத்தமான பாடல்கள். பின்னணி இசையும் துருத்திக் கொண்டு நிற்கவில்லை. சந்தோஷ் ஸ்ரீராமின் ஒளிப்பதிவில் பாதிக்குமேல் இரவுக்காட்சிகள்தான். அதுவே சிருஷ்டியையும் நரேனையும்… ஏன் சூரியையும் கூட அழகாக காட்டுகிறது.

வானத்திற்கு கீழேயிருக்கிற அத்தனை பிரச்சனை பற்றியும் பேசுகிறார்கள். ஆனால் ஒரு இடத்தில் கூட பிரச்சார நெடியில்லை. கருத்துப் பிரசாரத்தோடு கமர்ஷியல் பிரசாதத்தையும் கலப்பது எப்படி என்பதை வரப்போகும் இயக்குனர்களுக்கு ‘கத்துக்கொடுக்கிற’ குட்டி இது!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அதுக்கு நான் ரெடி இல்ல! ஹன்சிகா பதிலால் ஜி.வி.பிரகாஷ் அதிர்ச்சி?

சிகரெட் புகைக்கும் சாம்பிராணி புகைக்கும் இருக்கிற வித்தியாசத்தை இந்நேரம் புரிந்து கொண்டிருப்பார் ஜி.வி.பிரகாஷ். த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படம் இன்னும் கொடி நீட்டி கொய்யாப்பழம் பறித்துக் கொண்டிருக்கிறது....

Close