காவியத்தலைவன் / விமர்சனம்

ஃபோர்ட்டி ப்ளஸ் காலத்திலிருந்த நாடகக் கலையை, மல்டி ப்ளக்ஸ் காலத்தில் மறுபதிவு செய்ய வந்திருக்கிறார் வசந்தபாலன். அவரது நினைப்பும், அதற்கான உழைப்பும் பலமாக இருந்தாலும், அதை சுமக்கின்ற தோள்கள் என்னவாக இருக்கிறது என்பது முக்கியமாச்சே!

நாடகங்களில் ராஜபார்ட் வேஷம் யார் போடுகிறார்களோ, அவர்கள்தான் அந்த காலத்து சூப்பர் ஸ்டார். அப்படியொரு ஸ்டாராக வேண்டும் என்று துடிக்கிறார் பிருத்திவிராஜ். ஆனால் அவரைவிட பிரமாதமாக நடித்து தள்ளுகிறார் சித்தார்த். வேறு வழியில்லாமல் தாமாகவே கிரீடங்கள் அவர் தலையை அலங்கரிக்க, தன் தலையில் ஒவ்வொரு முறையும் துண்டு விழுகிறதே என்கிற ஆத்திரம் கூடிக் கொண்டே போகிறது பிருத்விக்கு. போட்ட துண்டுகள் போதாதென்று பெரிய இடியை இறக்குகிறார் சித்தார்த். ப்ருத்வியால் காதலிக்கப்படும் வேதிகா, சித்தார்த் மீது காதல் பார்வை வீசுவதுதான் அது.

சித்தார்த்தை ஒழிக்க வழி? இருக்கவே இருக்கிறது போட்டுக் கொடுக்கும் வித்தை. நாடக குழுவின் தலைவரும், நாடக உலகின் சாமியுமான நாசரிடம் சித்தார்த்தின் வேறொரு ஜமீன் காதல் பற்றி போட்டுக் கொடுகிறார் . அவ்வளவுதான்… போட்டு வெளுக்கும் நாசர், ‘நீ வௌங்கவே மாட்டே.. இனி நீ முகத்துக்கு அரிதாரம் பூசக்கூடாது. உன் கால்கள் சலங்கை கட்டக் கூடாது’. என்று வண்டி வண்டியாக சாபம் கொடுக்கிறார். மனம் ஒடிந்து போகும் சித்தார்த், அவ்வளவுக்கும் காரணம் தான் அண்ணனாக நினைக்கும் ப்ருத்விதான் என்று புரியாமலிருக்கிறார். ஒருகட்டத்தில் நாசர் இறந்துவிட, நாடக கம்பெனி ப்ருவிதி வசம் போகிறது. அதற்கப்புறமும் சித்தார்த்தை வைத்துக் கொண்டு சீரழிய ப்ருத்வி என்ன பரம்பொருளா? விரட்டியடிக்கிறார்.

இந்தியா முழுசும் சுற்றி, அண்டை நாடுகளான இலங்கை, சிங்கப்பூர், மலேசியா என்று நாடக கலையை கொடி கட்டி பறக்கவிடுகிறார் ப்ருத்வி. அப்படியே லட்சம் லட்சமாக சம்பாதித்து ஒரு ஜமீன் போல வாழ்கிறார். ஆனால் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வேதிகா மட்டும், சித்தார்த் நினைப்பாகவே இருக்கிறார். காலம் உருண்டோட… மீண்டும் எங்கு வந்து மிங்க்கிள் ஆகிறார் சித்தார்த்? வேதிகா காதல் நிறைவேறியதா? மொத்த ஆடியன்சும் எப்படா வரும் என்று காத்துக் கொண்டிருந்த க்ளைமாக்ஸ் வருகிறது. ‘மங்களமோ மங்களம்… வசந்தபாலன் ஜெயமோகன் கூட்டணியின் பீரியட் பிலிம் ஆசைக்கே மங்களம்’ என்று வெளியேறுகிறார்கள் ரசிகர்கள்.

ப்ருத்வி நடிப்பை சித்தார்த் பீட் பண்ணிவிட்டதாக படம் முழுக்க சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். சித்தார்த்தும் அதை காப்பாற்ற வேண்டும் என்ற அக்கறையில் விழுந்தடித்து நடிக்கிறார். அதுவும் ஓரிடத்தில், ப்ருத்வி வசனம் பேசும் அதே காட்சியை தன் ஸ்டைலில் நடந்து கொண்டும், லேசாக அரை வட்டம் அடித்துக் கொண்டும் அவர் நடிக்கும் போது, ‘புள்ள தேறிடுச்சே…’ என்று கூட தோன்றுகிறது. ‘நீ என்ன எனக்கு சாபம் விடுறது? குருவுக்கே நான் சாபம் விடுறேன். உன் கை கால் வௌங்காம போயிரும்’ என்று நாசருக்கு சாபம் விடுகிற காட்சியில் சித்தார்த் சிகரம் ஏறி நிற்கிறார். ஆனால் அந்த இரண்டு அப்பத்தை வைத்துக் கொண்டு மொத்த ஊருக்கும் பசி போக்கிய பெருமை அவரை சேரவே சேராது.

ப்ருத்வி பாவம்… உயிரை கொடுத்து நடித்தாலும், அவரது மலையாளம் கலந்த தமிழை ஒப்புக் கொள்ளவே முடியவில்லை. ஒரு காலத்தில் இடிமுரசாகவும், வெடி மின்னலாகவும் வசனம் பேசி திரிந்த நமது தமிழ் உச்சரிப்பு திலகங்கள் மட்டும் அதை கேட்டிருந்தால் மீண்டும் ஒருமுறை கல்லறைக்குள்ளிருந்து எழுந்து வந்து மூச்சு பிடிக்க வசனம் பேசிவிட்டு செத்துப் போயிருப்பார்கள். இந்த உலகத்தையே ஜெயிச்சுட்டேன் என்கிற மமதையுடன் அவர் கண்ணாடி பார்த்து புருவம் நெரிக்கிற நேர்த்திக்கு மட்டும், ‘எல்லாம் கடந்த’ நேசத்தோடு ஒரு பொக்கே.

வேதிகாவையே ஹீரோயின் கணக்கில் சேர்த்துக் கொள்ள முடியவில்லை. இதில் அனைகா என்றொரு அரண்மனை எலியை நடிக்க வைத்திருக்கிறார்கள். குளோஸ் அப்புகள் கொடூரம். லாங் ஷாட்டுகளும் நையப்புடைக்கிறது. வர வர வசந்தபாலனின் டேஸ்ட், முடியல பாஸ்…! அவ்வளவு பெரிய இளவரசியை பார்க்க, எவ்வளவு ஈசியாக போய் வருகிறார் சித்தார்த்? அபத்தம்.

சித்தார்த்துக்கு திடீர் தேசப்பற்று வருவதை கூட மன்னித்துவிடலாம். ஆனால் சுதேசி நாடகங்களை போட்டு செமத்தியாக காசு பார்க்கிறார்கள் என்கிற கான்சப்ட்தான் கண்றாவி. ‘வடக்கில் சுதந்திர முழக்கம் கேட்குது. இங்குதான் அந்த உணர்வே இல்லாமலிருக்கிறோம்’ என்றெல்லாம் இஷ்டத்திற்கும் எழுதியிருக்கிறார் ஜெயமோகன். அவரா இப்படி என்கிற அதிர்ச்சிதான் வருகிறது.

வேதிகா என் நடிப்பு எப்படி என்று சித்தார்த்திடம் கேட்கிறார் ஒருமுறை. அப்படியே கழுத்தை நெரிச்சுடலாம் போலிருக்கு என்று விமர்சிக்கிறார் சித்து. அதற்கப்புறம் வேதிகாவின் நடிப்பில் ஒரு புரட்சியுமில்லை. கொடியை வைத்துக் கொண்டு வந்தே மாதரம் வந்தே மாதரம் என்று குரல் கொடுப்பதோடு சரி. அதை நல்ல நடிப்பு என்று சித்தார்த் பாராட்டுகிறார். இதையெல்லாம் பார்க்கும்போது, ஒரு கட்டத்தில் படத்தை முடிச்சா போதும் என்கிற எண்ணத்திற்கு வந்திருக்கிறார் வசந்தபாலன் என்றே தோன்றுகிறது.

படத்தில் வசந்தபாலன் உழைக்காத உழைப்புக்கும் சேர்த்து அருள் பாலித்திருக்கிறார் ஆர்ட் டைரக்டர் சந்தானம். இசைப்புயலின் வேகம் சற்றே இறங்கி அடிக்கிறது. நிமிடத்திற்கு நிமிடம் வந்து போகும் பாடல்களில் ஒன்றிரண்டை தவிர வேறொன்றும் உருப்படியில்லை. பின்னணி இசையில் ஐம்பது வயதுக்காரர்கள் கேட்ட நாடக அனுபவத்தை கூட, தரவில்லையே ஏ.ஆர்ஆர் சார்? நீரஷ்ஷாவின் ஒளிப்பதிவு என்பதாலேயே தைரியமாக படத்தில் நிறைய இருட்டுக்காட்சிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. அந்த லாந்தர் வெளிச்சமும், அது தரும் மயக்கமுமாக களமாடி நிற்கிறார் நீரவ்.

இந்த படம் சுதேசிக்காக போராடிய நாடகக்காரர்களின் கதையா? இரண்டு பெரும் நடிகர்களின் ஈகோவா? முப்பது நாற்பதுகளில் நமது பொழுதுபோக்கு இப்படிதான் இருந்தது என்பதன் குறுந்தகவலா? அல்லது… அல்லது… வசதியாக படம் எடுக்க வருகிற ஒன்றிரண்டு தயாரிப்பாளர்களையும் அசதியாக்கி ஓட வைக்க வேண்டும் என்கிற பெரும் பிரயத்தனமா?

வசந்தபாலன்… உங்களிடமிருந்து உடனடி தேவை அங்காடித்தெருக்களும், வெயில்களும்தான். அரவானை மிஞ்சும் காவியம் இனி வேண்டாம். இன்னமும் உங்கள் மீது நம்பிக்கையோடு காத்திருக்கிறது தமிழ் சனம்!

-ஆர்.எஸ்.அந்தணன்

Read previous post:
Celebrities at journalist anupama son’s reception gallery

Close