ஷுட்டிங்கை வேடிக்கை பார்க்க வந்தவருக்கு பெரிய கேரக்டர்! பிரபு சாலமனின் மேஜிக்!
நல்ல இயக்குனர் இருந்தால் மட்டுமே இதெல்லாம் சாத்தியம். வெறும் கூழாங்கல்லாக இருந்தால் கூட அதையும் வைரமாக ஜொலிக்க வைக்கும் அநேக இயக்குனர்கள் இங்கு இருந்தாலும், ‘பொழுது போகல… ஏதோ ஷுட்டிங்கை வேடிக்கை பார்க்க வந்தோம்’ என்று விட்டோத்தியாக வந்தவர்களை கூட கைதட்டல் பெற வைப்பதுதான் எவ்வளவு பெரிய கடினம்? அதை அசால்ட்டாக செய்திருக்கிறார் டைரக்டர் பிரபு சாலமன்.
அண்மையில் வெளிவந்து எல்லாரையும் பிரமிப்பில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது ‘கயல்’. அந்த கடைசி நேர சுனாமி காட்சிக்காக மொத்த ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். நடுநடுவே ரசனை தூவல்களாக பிரபு சாலமன் அறிமுகப்படுத்தும் நடிகர்கள் தரும் பிரமிப்பு இருக்கிறதே… அட்ட்ட்ட்ட்டகாசம்!
தென் மாவட்டத்தில் ‘கயல்’ பட ஷுட்டிங் நடந்து கொண்டிருந்தது. அவ்வளவு இடி பிடி கூட்டத்திற்கு நடுவிலும் வயதை பற்றிக் கூட கவலைப்படாமல் ஷுட்டிங்கை வேடிக்கை பார்க்க வந்திருந்தார் 85 வயசு பெரியவர் ஒருவர். யார் யாரெல்லாமோ நடிக்கிறாங்க. நமக்கு நடிப்பு வராதா என்று யோசித்தாரோ என்னவோ? ‘தம்பி… எனக்கெல்லாம் நடிப்பு வருமா?’ என்றாராம் பிரபு சாலமனிடம். அவ்வளவு பிசியிலும் பெரியவரின் வார்த்தையை காதில் வாங்கிய பிரபுசாலமன், ‘ஐயா… உள்ள வாங்க’ என்று கூட்டத்திலிருந்து அவரை உள்ளே இழுத்துக் கொண்டார். அதற்கப்புறம் அவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர் என்பதையும் தெரிந்து கொண்டார்.
பங்களா ஜமீன் டிரஸ் போட்டுக் கொண்டு பேத்தியின் கல்யாணத்தை ரசிக்க கிளம்பிவிடும் பெரியவராக நடிக்க வைத்துவிட்டார். முதலில் ஒரு காட்சி மட்டும்தான் அவருக்கு தரப்பட்டிருந்ததாம். பெரியவர் நடித்த நடிப்பில் பூரித்துப் போன பிரபு சாலமன் அவருக்கு ஒரு பெரிய பகுதியையே ஒதுக்கி விட்டார். தமிழகம் முழுக்க அந்த பெரியவருக்கு இப்போது பெரிய ரசிகர் கூட்டம். அவ்வளவு ஏன்? படத்தின் விளம்பரங்களில் வரும் சின்ன சின்ன ட்ரெய்லரிடம் கூட பெரியவர் ‘களை’ கட்டுகிறார்.