பரிபூரண பவுர்ணமி பாலசந்தர்…
கவிதாலயாவின் எவர் கிரீன் ஹீரோ திருவள்ளுவர்தான். பின்புறமாக திரும்பியிருக்கும் அவர் அப்படியே ரசிகர்களை நோக்கி முன்புறமாக திரும்பும்போது ‘முதற்றே உலகு’ முடிந்து போயிருக்கும். இன்று தமிழ்சினிமாவில் முன்னணியில் இருக்கும் அத்தனை பேருக்கும் அகர முதலவும் திருவள்ளுவரும் யாரென்றால் அது இயக்குனர் சிகரம் கே.பி தான்!
கடந்த சில தினங்களாக கோடம்பாக்கத்தின் எல்லா தெருக்களும் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் வீட்டு வாசலில்தான் முடிகின்றன. அவர் அலுவலக வாசலில் பூச்செரியும் மரங்கள் அத்தனையும் வாழ்த்து கூற வருகிறவர்களை புன்முறுவலோடு நோக்குகின்றன. அடிப்படையில் தாவர நேசிப்பாளரான பாலசந்தரால் வளர்க்கப்பட்ட அந்த மரங்கள் இந்த நல்ல செய்திக்காக காத்திருந்த காலங்கள் சற்று கூடுதலானவைதான். கே.பாலசந்தருக்கு தாதா சாகேப் பால்கே விருதை அறிவித்துள்ளது மத்திய அரசு. எப்போதோ கிடைத்திருக்க வேண்டிய கவுரவம் அல்லவா இது?
போகட்டும்… இந்த கவுரவம் அவரது சினிமா சாதனைக்காக மட்டும் வழங்கப்பட்டது அல்ல. வாழ்வும் கலையும் கலந்த மனிதர் அவர். தனது அடுத்த தலைமுறையை மனசு நிறைய பாராட்ட தெரிந்தவர். எல்லாருடைய வெற்றிகளையும் கொண்டாடுகிற மனம் படைத்தவர்.
காதல் திரைப்படம் வெளியான நேரம். எந்த படத்தையும் தியேட்டருக்கு சென்று பார்க்கிற வழக்கமுள்ள பாலசந்தர், படம் பார்த்துவிட்டு திரும்பும் போதே பாலாஜி சக்திவேல் நம்பர் இருக்கா என்கிறார் தனது உதவியாளரிடம். அப்புறம் என்ன நினைத்தாரோ, வேண்டாம். நாளைக்கு நான் நேராவே போய் வாழ்த்துறேன். ஒரு கலைஞனுக்குரிய கவுரவம் அதுதான் என்று கூறிவிட்டு அமைதியாகிறார்.
மீண்டும் தனது உதவியாளர் மோகனிடம், நான் பாலாஜி சக்திவேல் ஆபிஸ் எங்கேயிருக்குன்னு விசாரிச்சேன்னு அவர்கிட்டேயே கேட்டுடாதே. தெரிஞ்சா அவர் ஓடி வந்திடுவார். அது வேணாம். யாருக்கும் தெரியாம விசாரிச்சுக்கோ. எந்த நேரத்தில் இருப்பார்னும் தெரிஞ்சு வச்சுக்கோ என்கிறார்.
மறுநாள் யாருக்கும் முன்னறிவிக்காமல் பாலாஜி சக்திவேல் ஆபிசுக்கே போய் இறங்குகிறார். பிரச்சனை என்னவென்றால் அலுவலகம் இருப்பது முதல் மாடி. ஐயா நான் வேணும்னா மேல போய் சொல்லட்டுமா? யோசனை சொல்கிற மோகனின் வாயை அடைத்துவிட்டு சிரமத்துடன் முதல் மாடி ஏறி செல்கிறார். மொத்த ஆபிசும் பதறுகிறது. சார்… நீங்க வர்றீங்கன்னு தெரிஞ்சா நானே ஓடி வந்திருப்பேனே என்கிறார் பாலாஜி சக்திவேல்.
மிக மிக நெகிழ்ச்சியான தருணம் அது. அதன்பின் எத்தனையோ விருதுகளை அந்த படத்திற்காக பெற்றுவிட்டார் பாலாஜி சக்திவேல். எதுவும் இந்த பாராட்டுக்கு ஈடாகாது என்பது அவருக்கே தெரியும்.
பாராட்டுகிற விஷயத்தில் பஞ்சமே வைப்பதில்லை பாலசந்தர். சஹானா என்ற தொலைக்காட்சி சீரியலுக்கு வசனம் எழுதிக் கொண்டிருந்தார் உதவி இயக்குனர் தாமிரா. திடீரென்று ஒரு காட்சிக்கு டயலாக் எழுத வேண்டிய சூழ்நிலை. நான் வெளியில போறேன். இதான் சுச்சுவேஷன். எழுதி வச்சுரு. நான் அந்த பக்கம் போனதும் நீ இந்தப்பக்கம் தம்மடிக்க போயிடாத. வேணும்னா பால்கனியை திறந்து தம்மடிச்சுட்டு இங்கேயே உட்கார்ந்து எழுது. நான் வர்ற வரைக்கும் வெயிட் பண்ண வேணாம். எழுதி முடிச்சுட்டா கிளம்பிரலாம். நண்பனிடம் சொல்வது போல சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
சொன்னபடியே எழுதி முடித்துவிட்டு வீடு திரும்பிய தாமிராவுக்கு அடுத்த சில மணி நேரத்தில் போன். எதிர்முனையில் கே.பி. ரொம்ப நல்லாயிருக்குடா. இதுல என்ன எழுதியிருக்கியோ, அதை அப்படியே எடுக்க முடியும்னு நினைக்கிறேன். அப்படியே எடுக்க ட்ரை பண்ணுறேன். நு£று படங்களை இயக்கி முடித்த ஒரு ஜாம்பவான் ஒரு உதவி இயக்குனரிடம் பேசிய வார்த்தைகள்தான் இது. அப்படியே விட்டிருந்தால் கூட அது அதிசயம் இல்லை. இலங்கைக்கு போயிருந்தார் படப்பிடிப்புக்கு. அங்கிருந்து சென்னைக்கு போன் அடித்துவிட்டார். தம்பி… நீ எழுதியிருக்கறதை அழகா எடுத்துட்டேண்டா. ரொம்ப திருப்தியா இருக்கு.
பிறகு சென்னைக்கு வந்து அதை எடிட் செய்த பிறகும் இதே தாமிராவுக்கு போன் அடிக்கிறார் கே.பி. இப்ப வந்து பாரேன். உன் வசனத்துக்கு நான் உயிர் கொடுத்திருக்கிறேனா என்று. நம்புங்கள். இப்படியெல்லாம் பேசுவது பிதாமகர் பாலசந்தர்தான்!
ரஜினி, கமல், சிரஞ்சீவி, நாகேஷ்… இப்படி பாலசந்தர் என்ற படைப்பாளி ஈன்றவை எல்லாமே சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட புலிக்குட்டிகள்.
ரஜினிக்கு நெருக்கடியான நேரங்களில் எல்லாம் அவர் இருப்பது பாலசந்தரின் வீட்டில்தான். அவரது வீட்டில்தான் ரஜினியை குழந்தையாக பார்க்க முடியும். அறுபது வயது குழந்தைக்கும் எண்பது வயது தகப்பனுக்கும் இருக்கிற அந்நியோன்னிய உறவை அந்த சந்தர்பத்தில் பார்த்து வியந்தவர்கள் அதை அடுத்த ஜென்மத்திலும் கூட நினைவு வைத்திருப்பார்கள்.
வீட்டில் ரஜினியை குழந்தையாக பார்க்கிற கே.பி. மேடைக்கு வந்துவிட்டால் ரஜினிக்கு கொடுக்க வேண்டிய சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை கொடுக்க தவறுவதேயில்லை. அந்த இடத்தில் ரஜினி வளர்ந்த நடிகர். கே.பி. அதை உணர்ந்த இயக்குனர்.
ரஜினியை தகப்பன் மனநிலையிலும், ரசிகன் மனநிலையிலும், குருவின் மனநிலையிலும் பார்க்கக் கூடிய ஒரே தகுதி இன்று கே.பிக்கு மட்டும்தான் இருக்கிறது.
இந்த தாதா சாகேப் பால்கே விருது எத்தனையோ காரணங்களுக்காக அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் வெற்றி தோல்வி தாண்டி பரிபூரணமாக வாழ்கிற மனிதர் அவர்.
இந்த விருது அதற்காகவும்தான்!
-ஆர்.எஸ்.அந்தணன்
(கே.பாலசந்தருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்ட போது எழுதியது. இப்போது மீள் பதிவாக இங்கே)