கிருமி -விமர்சனம்

காக்கி சட்டையில் காக்கா எச்சம் போடுகிற கதைளும், அதே காக்கி சட்டையில் பதக்கம் குத்தும் கதைகளும் என்று இரு வேறு கதைகள் கோடம்பாக்கத்தில் வேண்டுமளவுக்கு புழங்கியவைதான்! இங்குதான் இதே காக்கி சட்டை பற்றிய இன்னொரு பழக்கப்படாத ஏரியாவை தொட்டிருக்கிறார் டைரக்டர் அனுசரண். திரைக்கதையில் ‘காக்கா முட்டை’ மணிகண்டனுக்கும் சரிசமமான அளவுக்கு பங்கு இருப்பதால், அந்த ‘பங்கு தந்தைக்கும்’ சேர்த்து ஒரு ஆஹா! கேமிரா டோன், இரவில் நடக்கும் காட்சிகள் என்று கதை நகர்வதால், ‘எங்கே நம்ம பாக்கெட்டிலும் கஞ்சா வச்சு புடுச்சுருவாங்களோ’ என்ற கவனச் சிதறலுக்கும் ஆளாக விடுகிறது கிருமி. எப்படியோ “நமக்கெதுக்குடா வம்பு?” என்று படம் முடிகிறது. ஆமாம்… அந்த ஹீரோ செஞ்சது ரைட்டா? தப்பா? மனநிலையோடு வெளியேறுகிறான் ரசிகன்.

எனிவே… கிருமியில் பரவிக்கிடக்கும் க்ரைம் சமாச்சாரம், அப்பாவி இளைஞர்களுக்கான எச்சரிக்கை மணி!

வெட்டியாக இருப்பதையே வேலையாக வைத்திருக்கும் கதிருக்கு, கல்யாணம் ஆகி ஒரு குழந்தையும் இருக்கிறது. அந்த நேரத்தில் போலீஸ் இன்பார்மராக இருக்கும் சார்லியின் உதவியுடன் கதிருக்கு போலீஸ் ஸ்டேஷனில் ஒரு வேலை. பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் என்று சொல்லப்படும் அந்த வகை வேலையில் முழு திருப்தியாகும் கதிர், தன்னையே போலீசாக கருதிக் கொள்கிறார். அதே ஏரியாவில் பார்… சீட்டாட்டம் என்று கல்லா கட்டும் தென்னவன் கோஷ்டியை இன்ஸ்பெக்டருக்கு உளவாளியாக இருந்து போட்டும் கொடுக்கிறார். தன் லிமிட் தாண்டி அடுத்த லிமிட்டில் ரைட் நடத்தும் இன்ஸ்பெக்டரால் ஏற்படும் அத்தனை வில்லங்கமும் கதிரின் தலையையும் பதம் பார்க்க அதிலிருந்து அவர் தப்பித்தது எப்படி? போலீஸ் மூளை வில்லங்கம் செய்ய ஆரம்பித்தால், சாதாரணனின் நிலை என்ன? இதுதான் விறுவிறுப்பான கிருமி.

கதைக்கு கதிர் பொருத்தமானவர் என்பதைவிட அவரது கண்கள் பொருத்தமாக இருப்பது விசேஷம். அந்த துறுதுறு கண்களில் நிறைய உணர்ச்சிகளை கொட்ட முடிகிறது அவரால். மனைவி ரேஷ்மிமேனனுடன் ரொமான்ஸ்… அசருகிற நேரத்தில் கிடைக்கிற வேறொருத்தியையும் லூட் விடுவது என்று யூத் ஏரியாவிலும் புகுந்து ‘மாமூல்’ வாங்குகிறார் கதிர். தன்னை போட்டுத்தள்ள துரத்தும் ரவுடிகளிடம் சிக்காமல் தப்பி ஓடுவதும், ‘பயமா இருக்கு சார்….’ என்று இன்ஸ்சிடம் புலம்புவதுமாக பீதி கிளப்பியிருக்கிறார்.

ரேஷ்மிமேனனை லேசாக தரையில் போட்டு புரட்டியெடுத்த மாதிரி டல் பண்ணியிருக்கிறார்கள். ஆனால் பளிச்சென்று முந்திக்கொண்டு நிற்கிறது அவரது இயல்பான நடிப்பு. குழந்தை பர்த்டேவுக்கு வீட்டுக்குள்ளேயே என்ட்ரி கொடுத்துவிடும் இன்ஸ்பெக்டர், அதற்கப்புறம் அழகான ரேஷ்மியை என்ன செய்வாரோ என்று ஒரு நிமிஷம் நினைக்க வைக்கிற இயக்குனர், அடச்சே… என்று அடுத்தடுத்த காட்சிகளில் விட்டு தாவிவிடுவதும் அழகுதான்.

அந்த இன்ஸ்பெக்டர்கள் டேவிட்டும், மாரிமுத்துவும் ச்சும்மா மிரட்டியிருக்கிறார்கள். அதிலும் டேவிட்டின் முகத்தில் துளி கூட குற்றவுணர்ச்சி என்பதேயில்லை. ஆனால் எடுத்தால் கவிழ்த்தால் தந்திரம். கம்பீரம். என்று கலக்கியிருக்கிறார். இரண்டு இன்ஸ்களையும் விசாரிக்கும் உயர் போலீஸ் அதிகாரி பேசும் ஒரு வசனத்திற்கு தியேட்டரே கைதட்டி மகிழ்கிறது. “அஞ்சு எருமை மாட்டை கொடுத்து மேய்ச்சிட்டு வரச்சொன்னா, நாலு தொலைஞ்சுட்டுன்னு சொல்லிட்டு, அந்த ஒண்ணையும் வித்து திங்கிறவங்கதானய்யா நீங்க?” – செம்ம மணிகண்டன்!

எல்லா படத்திலும் பச்சாதமான கேரக்டர் என்றால் வழிந்து வழிந்து அள்ளிக் கொடுப்பார் சார்லி. இந்த படத்திலும் அப்படியொரு கேரக்டர். விடுவாரா? ஓடிர்றா… என்று கதிரை காப்பாற்றிவிட்டு தான் உயிரை விடும் காட்சியில் கலங்க விடுகிறார். அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் அந்த அக்காவும் மனசை கனமாக்கிவிட்டு போகிறார்.

டைமிங் காமெடியில் அசரடிக்கிறார் அந்த பன்னிமூஞ்சி வாயன். எனக்கெல்லாம் பொண்ணு கிடைச்சா பூ மாதிரி வச்சுப்பேன். எவன் குடுக்குறான் என்று அவர் ஆதங்கப்படுகிற போது கூட சரவெடியாகிறது தியேட்டர்.

அருள் வின்சென்டின் ஒளிப்பதிவும், கே-வின் இசையும் பின்னி பிணைந்து பிரமாதப்படுத்தியிருக்கிறது.

கிளைமாக்சில் வரும் அந்த கடைசி காட்சியில் மட்டும் கொஞ்சம் விறுவிறுப்பை கூட்டியிருந்தால், இந்த கிருமி காரமான கிரேவியாக நாக்கிலேயே நின்றிருக்கும்! பட்….?

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
KO 2 – Kohila Song Promo

https://www.youtube.com/watch?v=2bbrbsSh7zs

Close