ஏன் எனக்கு இங்க ரூம் போட்டீங்க? கிஷோர் கேள்வி, கிறுகிறுத்த இயக்குனர்!
தலைப்பை படிச்சதும், கிஷோரும் கெட்டுப் போயிட்டாரா என்ற சந்தேகத்தோடுதானே இந்த செய்திக்குள் நுழைந்தீர்கள்? அங்குதான் இருக்கு ட்விஸ்ட்! பொதுவாகவே நடிகர்களுக்கும் சரி, நடிகைகளுக்கும் சரி, ஒரு வித கெட்ட மனோபாவம் இருக்கிறது. அவருக்கு அவ்ளோ பெரிய ஓட்டல்ல ரூம் போட்ருக்கீங்க? நான் மட்டும் சீப்பா? என்பதுதான் அது. ஒவ்வொரு பட கம்பெனிகளிலும் தயாரிப்பு நிர்வாகிகள் இந்த ஒரு விஷயத்தை சமாளித்து கரையேறுவதற்குள், கடைவாய் பல்லே சுளுக்கி போய்விடும். அந்தளவுக்கு சம்பந்தப்பட்ட நடிகர் நடிகைகளை கன்வின்ஸ் செய்தாக வேண்டும்.
இன்னும் சில இரண்டாம் நிலை ஹீரோக்கள் இருக்கிறார்கள். தான் நடிக்கும் படத்திற்கு இவ்வளவுதான் பிசினஸ் என்பதெல்லாம் தெரியும். இருந்தாலும், விஜய் சார் ஷுட்டிங்னா எங்க வந்து தங்குவாரோ, அந்த ஓட்டல்ல ரூம் போடுங்க என்பார்கள் வாய் கூசாமல். அப்படியொரு காஸ்ட்லியான ரூமில் தங்கிவிட்டால், விஜய்யை தொட்டுவிட்டதாக நினைப்பு. தன் பலம் உணராமலே இப்படி வெட்டி பந்தா பண்ணும் நடிகர்கள் கிஷோரின் நிழலை தொட்டாவது கும்பிட வேண்டும். அப்படியொரு மனுஷன் அவர் என்கிறார்கள் தயாரிப்பு நிர்வாகிகள்.
அண்மையில் ஒரு புதிய இயக்குனரின் படம். கிஷோர்தான் ஹீரோ. சென்னை வடபழனியில் இருக்கும் அந்த பச்சை ஓட்டலில் ரூம் போட்டுவிட்டார்கள். நாளொன்றுக்கு எட்டாயிரத்திற்கு குறையாது. அறைக்கு வந்த கிஷோர் அதிர்ந்து போனாராம். ஏன் சார்… நீங்களே சின்ன பட்ஜெட் படம்தானே பண்றீங்க? எதுக்கு தினமும் இவ்ளோ செலவு பண்றீங்க? சின்ன ஓட்டல்ல ரூம் போடுங்க. போதும் என்றாராம். இந்த காலத்தில் இப்படியொரு நடிகரா? மயக்கம் போட்டு விழாத குறைதான் கம்பெனிக்கு. அதற்கப்புறம் வேறொரு ஓட்டலில் ரும் போட்டுக் கொடுத்தால், அங்கும் நெகிழ வைத்துவிட்டார் மனுஷன்.
நான் தனிப்பட்ட முறையில் ஆர்டர் பண்ணும் சாப்பாட்டு ஐட்டங்களுக்கு நானே பில் கொடுத்துக் கொள்கிறேன் என்றாராம். அட… கிஷோர் மாதிரி நாலு பேர் இருந்தால் போதும். தமிழ் இன்டஸ்ட்ரி உருப்படும். காதுல விழுதா கண்ணுங்களா?
No Flights only train and bus travelling small budget movies