சமையல்காரி கை நோகுதே… சைவமானார் ஹீரோ!

சைவமே சாந்தி என்பவர்களுக்கும், அசைவமே ஆனந்தம் என்பவர்களுக்கும் இடையே ஆண்டாண்டு காலமாக நடக்கும் கருத்…, ஸாரி ‘வயித்து’ வேறுபாடு இந்த ஆன்ட்ராய்டு காலத்திலும் தொடர்கிறது! சைவ வள்ளலார்களுக்கும், அசைவ உண்ணலார்களுக்கும் இடையே நடக்கும் இந்த போட்டிக்கு எந்த சாப்பாட்டு ராமனாலும் சரியான தீர்ப்பு சொல்லிவிட முடியாது. ‘எங்க நெய்தோசைக்கு ஈடாகுமா உங்க நெத்திலிகுழம்பு?’ என்பார்கள் இவர்கள். ‘கருவாட்டு ருசிக்கு ஈடாகுமா உங்க கத்திரிக்கா பொறியல்?’ என்பார்கள் அவர்கள். எதிர்காலத்துல அண்டங்காக்கா பொரியலையும், அல்சேஷன் வறுவலையும் தொட்டுப்பார்க்கிற துர்பாக்கியம் வந்தாலும் வரும். யார் கண்டது?

இது ஒருபுறமிருக்க ஆர்கானிக் ஃபுட், ஆஃப் பாயில் காய்கறிகள், மூலிகை உணவகங்கள், கலோரிகள் என்று மக்களுக்கு பச்சை பசேல் காட்டி சைவத் தூண்டில் போடுகிற அக்கறையும் நடக்கிறது. வேடிக்கை என்னவென்றால் இவர்கள் தருகிற அரை வேக்காட்டு மொச்சை கொட்டையும், வெள்ளாட்டு மட்டன் சுக்காவும் ஒரே ரேட் என்பதுதான்!

‘இறந்தவன சுமந்தவனும் இறந்துட்டான். இதை இருப்பவனும் எண்ணிப்பார்க்க மறந்துட்டான்’ங்கிற மாதிரி, நான்வெஜ்ஜோ, வெஜ்ஜோ… ரெண்டு பேரையுமே அறுபதுகளுக்குள்ள ஆஞ்சியோகிராம், எக்ஸ்ரே, சிடி ஸ்கேனுன்னு அல்லாட விட்ருது உடம்பு. ‘கருவாட்ட தின்னேன். பிபி’ என்கிறார்கள் அவர்கள். ‘உருளைக்கிழங்கு தின்னேன். சுகர்’ என்கிறார்கள் இவர்கள். நடுவில், ‘விலங்குகளை கொல்லாதே’ என்று பிராணிகளை போல வேஷம் போட்டுக் கொண்டு கூண்டுக்குள் நின்று ‘போஸ்’ கொடுக்கிறார்கள் நடிகைகள். கூண்டுக்குள்ள இருக்கிற பிகரை பார்த்தியே, அவங்க சொன்ன கருத்தை கேட்டியான்னு கேளுங்க… ‘தலப்பாக்கட்டி பிரியாணி மேல சத்தியமா நமக்கு அதெல்லாம் சரிப்படாது’ என்பார்கள் இளசுகள்.

இனிமே வரப்போற சினிமாவுல கூட சிவன் கோவில் ஐயரா நடிக்க முடியாதளவுக்கு இலை நிறைய எலும்பை கடிச்சு போட்டுட்டாரு ராஜ்கிரண். ‘பிரபு சார் நடிக்கிற படத்துல சின்ன ரோல் கிடைச்சா கூட போதும். சிவாஜிக்கே சமைச்சு போட்ட நள மகராஜாக்கள் கையால நமக்கும் ஊர்வன, பறப்பன, குதிப்பனவெல்லாம் கிடைக்கும்’ என்று சப்புக் கொட்டுகிற வழக்கம் இருக்கிறது கோடம்பாக்கத்தின் முக்கியஸ்தர்களின் நாக்குக்கு! ஏன்? ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு வரும்போதே, கார் டிக்கி நிறைய டிபன் கேரியரோடு வந்திறங்குவார் பிரபு. உள்ளே இருப்பதெல்லாம் ஒன்ஸ்மோர் ருசி!

‘நான் அம்மனா நடிக்கிற படத்தின் ஷுட்டிங் முடியற வரைக்கும் முட்டை கூட சாப்பிட மாட்டேன். அவ்வளவு ஏன்? முட்டைன்னு பேப்பர்ல எழுதியிருந்தா கூட படிக்க மாட்டேன்’னு கே.ஆர்.விஜயாம்மா கொடுத்த பேட்டிய தொள்ளாயிரமாவது தடவையா பிரசுரிச்ச சினிமா பத்திரிகையெல்லாம் இங்க இருக்கு. சொன்ன மாதிரி, பக்தி பட ஷுட்டிங்னா, ‘பகவானே இது உனக்கே நியாயமா?’ ரேஞ்சிலேயே ஸ்பாட்டுக்கு வருவார்கள் மற்ற சினிமா தொழிலாளர்கள். ‘நடிக்கிறவங்க வேணும்னா நாக்குக்கு பூட்டு போட்டுக்கட்டும். நமக்கென்னப்பா வந்துச்சு’ என்பது அவர்களின் கேள்வி.

இந்த வெஜ் – நான்வெஜ் யுத்தத்துக்கு நடுவுலதான் லஞ்ச் பாக்சை தொறந்து, ‘என்னோட இதயம் இதுக்குள்ள இருக்கு. பத்திரமா பார்த்துக்கோ’ என்று ஒரு சமையல்கார ஆன்ட்டியை கரெக்ட் பண்ணினார் அந்த ஹீரோ. ‘அட… கரப்பான்பூச்சியா இருந்தாலும் அதுக்கும் பெயின்ட் அடிச்சு பொன் வண்டுன்னு பேரு வச்சுருவாய்ங்க போலிருக்கே?

ஹீரோ யாருன்னுதானே அலர்றீங்க? சொல்லுவோம்ல! அதுக்கு முன்னாடி இன்னொரு சங்கதி…

நம்ம ஹீரோக்கள் உணவு விஷயத்துல அக்கறையா இருக்காங்களான்னு தெரியாது. ஆனால், அப்படி இருக்கனும்ன்னு வற்புறுத்துன ஒருத்தருக்கு வந்த வாழ்வு இருக்கே, அது ரொம்ப சுவாரஸ்யம். ஆட்டோகிராப் படத்துல சேரன் சின்ன பையனா நடிச்சிருப்பாரு. வாரணம் ஆயிரம் படத்துல சூர்யா சின்னப் பையனா வருவாரு. விட்டா விஜயகுமார், ராதாரவியையெல்லாம் கூட ஸ்கூல் படிக்கிற ஸ்டூடன்சா காட்டிவிடும் போலிருக்கு இயக்குனர்களின் கற்பனை.

திடீர்னு எப்படி சின்ன பையனாவறது? பட்டினி கிடக்கலாம். ஆனால், பட்டினி கிடந்தா பல்லுதான் வெளியில வரும். பார்க்க நல்லாயிருக்கணும்ல? அங்கதான் வர்றாரு நம்ம நியூட்ரிஷியன்.! நடிகர் நடிகைகளுக்கு மட்டும் ஸ்பெஷலா கோச்சிங் கொடுக்கிற மாஸ்டர் இவர். சேரன் சூர்யாவுக்கெல்லாம் இவர்தான் கோச்சிங் கொடுத்து வந்தார். ‘காலையில் கையளவு பச்சையா முளைச்ச பாசி பருப்பை முழுங்குங்க. அதுல இருக்கிற கலோரி, பனிரெண்டு பத்து வரைக்கும் தாங்கும். பனிரெண்டு பதினொன்னுக்கு, ஒருவாட்டி இந்த இலைய பறிச்சு தின்னுங்க. அது இரண்டு மணி வரைக்கும் உங்களுக்கு போதும். வெறும் வயித்துல நாலு பாதாம். லஞ்ச்சுக்கு பின்னாடி நாலு முந்திரி’னு ஏதோ சந்திராயன் விஞ்ஞானி ரேஞ்சுக்கு இவர் சொல்வதை சாப்பிட்டால், பட்டினி கிடந்தாலும் பல்ஸ் இயங்கும். கெட்டே போனாலும் கிட்னி இயங்கும்னு ஏகப்பட்ட பில்டப்.

இப்படி வெறும் நியூட்ரிஷியனா சினிமா ஏரியாவுல நடமாடுன இவரையே ஹீரோவாக்கிருச்சு சினிமாவுலகம். பெரிய ஹீரோக்களிடம் கால்ஷீட்டுக்கு போனால், ‘ஒரு முப்பது வருஷம் கழிச்சு வாங்க பார்க்கலாம்’ங்கிற அளவுக்கு இருக்கு டிமாண்ட்! அதனால்தான் இப்படியொரு ரிஸ்க். இப்போது அவர் நடிச்ச இரண்டு மூணு படம் ரிலீசாகி ஓரளவுக்கு ஒடவும் ஆரம்பிச்சாச்சு. நடப்பு ஸ்டேட்டஸ்படி அவரு சம்பளம் முப்பது லட்சத்துக்கு மேல. நாற்பது லட்சத்துக்கும் கீழே! வாழ்நாள் முழுக்க பருப்பு வித்தாலும், பத்து லட்சத்தை முழுசா பார்த்திருக்க முடியாதே? அதான் வாழ்வுங்கறது.

இப்படி சாப்பாட்டு விஷயத்துல ஆயிரம் நன்மை தீமைகள் இருக்கு. இங்குதான் சமையல்காரிங்கிற ஹாட் பாக்ஸ்க்குள் சூடான இட்லி போல சுருண்டு படுத்துவிட்டார் நம்ம ஹீரோ.

தாஜ்மஹாலை கட்டிய மேஸ்திரி….
சதாம் உசேனின் சமையல்காரர்….
எம்ஜிஆரின் மேக்கப்மேன்….
ஐஸ்வர்யாராயின் டைலர்…

இப்படி சிலர் மீதுதான் பிரமிப்பு வரும். அப்படியொரு பிரமிப்புக்குரிய டாப் நடிகர் வீட்டு சமையல்காரிதான் இவர். உடல்நிலை சரியில்லாமல் போன பின்பு அசைவத்தை அறவே விட்டுவிட்டார் அந்த நடிகர். உறவுமுறை அழைப்பின் பேரில் அவ்வப்போது அங்கு போய் வந்து கொண்டிருந்த இந்த இளம் ஹீரோதான், சட்டென விழுந்துவிட்டார் சமையல்கட்டில்! அது ஒன்றும் ருசி தந்த மாயமல்ல, மயிலு ஸ்ரீதேவியை கொண்டாடிய இதே ஊரில்தான் குயிலு சரிதாவுக்கும் சந்துக்கு சந்து ரசிகர் மன்றம் முளைத்தது. கருப்போ, சிவப்போ, மாநிறமோ, மட்டப்பலகையோ? தடுக்கி விழ வைக்கிற ஏதோ ஒன்று இருக்கணும். அது அந்த சமையல்காரியிடம் இருந்தது.

பத்தாம்ப்பு பையன் டீச்சரோட ஓடிப்போற இந்த காலத்துல, காதல் எவன் குடியையும் கெடுக்கும்!. எவன் குடிக்கும் போதையாகும்!!. இவர் சைவமானதற்கு காரணம் மருதாணி ஏற வேண்டிய சமையல்காரியின் விரல்களில் மசாலா சிவப்பு ஏறணுமா? என்பதால் மட்டுமல்ல, அவர் விரும்பிய அந்த ஆன்ட்டியே சரியான சைவ பரம்பரைதானாம்.

அடை காக்குற கோழியிடம், ஆபிசுக்கு போ என்றால் கேட்குமா? அடிக்கடி அந்த பெரிய ஹீரோ வீட்டு சமையல் கட்டிலேயே இவர் நடமாடியதால், சந்தேகம் வலுத்தது அந்த குடும்பத்திற்கு. அங்கு வைத்த வலையில்தான் சிக்கினார் நம்ம யங் ஹீரோ. மாட்ற வரைக்கும்தானே மது பாட்டிலை ஒளிக்கணும்? மாட்டிட்டா…? மிக்சிங்குக்கு கொஞ்சம் சோடா கிடைக்குமா? ரேஞ்சில்தான் ரியாக்ஷன் இருக்கும்! அதற்கப்புறம் சொந்த மனைவியிடமே சோடா, பீடாவெல்லாம் கேட்க ஆரம்பித்துவிட்டார் யங் ஹீரோ. ஒரு கட்டத்தில் ‘போய் தொலை’ என்று விட்டுவிட்டார்கள்.

ஒளிச்சு வச்ச புல்லாங்குழல்ல, ஓடுற ஃபேன் விழுந்தா மாதிரி, இப்போ ஊருக்கே கேட்குது ராகம்! எப்படி?

சமீபத்தில் இவர் நடித்த ஒரு படத்தின் அவுட்டோர் ஷுட்டிங் அது. தனது படை பரிவாரங்களோடு போய் இறங்கிவிட்டார் யங் ஹீரோ. என்னதான் பெரிய சம்பளம் வாங்குகிற ஹீரோவாக இருந்தாலும், அவருக்கு மட்டும் எடுபிடி வேலை பார்க்கலாம். அவருடன் வந்தவர்களுக்கெல்லாமா பார்க்க முடியும்? ‘கூட்டம் கூட்டமா வர்றாரு. எல்லாருக்கும் எக்சிக்யூட்டிவ் ரூம் ஒதுக்க வேண்டியிருக்கு. எல்லாருக்கும் எல்லாமும் தர வேண்டியிருக்கு’ என்றெல்லாம் தயாரிப்பாளர் காதுக்கு விஷயத்தை கொண்டு போனார்கள். நாகரிகமாக சொன்னால், பற்ற வைத்தல் என்று பெயர்! நாராசமாக சொன்னால் ‘போட்டுக் கொடுத்தல்’ என்று பெயர்! அவர்கள் சொன்னதில் நிஜம் பாதி. ரீல் மீதி. கொண்ட ஊசியால குத்துனது பத்தாதுன்னு கோணி ஊசியையும் பயன்படுத்தினார்கள் அந்த உளவுத்‘துரை’கள்! அதிலும் ‘ஒரு நடுத்தர வயசு அம்மா அவர் கூடவே வருது சார். ரெண்டு பேரும் ஒரே ரூம்லதான் தங்குறாங்க’ என்று வந்த வேலையை செவ்வனே செய்துவிட்டு கிளம்பினார்கள்.

பெரிய சம்பளம் வாங்குகிற ஹீரோ. மார்கெட் வியாபாரத்தில் அவருக்கு பெரிய மவுசு இருக்கிறது. அவர் கால்ஷீட் கிடைப்பதே பெரிய விஷயம். இந்த நேரத்தில் அவரிடம் இது குறித்து பேசினால் என்ன நினைப்பார்? பலவாறு யோசித்த தயாரிப்பாளர் இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தார். என்ன வேணும்னாலும் நினைக்கட்டும். கண்ணுக்கு தெரிஞ்சு அவர் வீணாப் போவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

நேரடியாகவே விஷயத்துக்கு வந்துவிட்டார் தயாரிப்பாளர். ‘நீங்க என்ன ஃபுட் வேணும்னாலும் கேளுங்க. உலகத்தின் எந்த மூலையிலிருந்தாலும் பிளைட்லயாவது வரவழைச்சு கொடுக்கிறேன். ஆனால் அந்தம்மாவ உங்க கூட தங்க வச்சுகிட்டு, சமைச்சுப் போட சொல்றது நல்லாவா இருக்கு?’ தயாரிப்பாளர் இப்படி கேட்க, அதற்கு ஹீரோ சொன்ன பதில்தான் ‘செம்புலப் பெயல் நீர்!’

‘பரவால்ல சார். நான் பட்டினியா கிடந்தாலும் பரவால்ல. பக்கத்துல அவங்க இருக்கணும்! ’ அதற்கப்புறம் தயாரிப்பாளர் பேசவேயில்லை.

செம்புல பெயல் நீரெல்லாம், ஒரு சந்தர்ப்பத்தில் சொம்புல பிடிச்ச நீரா தெரியும்போது காதல் மாறும்! தமிழ்சினிமா பார்க்காத தெய்வீகக் காதலா?

(குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் ஆர்.எஸ்.அந்தணன் எழுதிவரும் கோடம்பாக்கம் செக்போஸ்ட் தொடரிலிருந்து….)

2 Comments
  1. howdoesitmatter says

    who is this? you haven’t left any clues at all…

  2. Dhanush says

    Dhanush

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நடிகை ‘சந்தோஷி’யின் புதிய அவதாரம்!

நமக்கு தேவையான ஆடைகள், ஆபரணங்கள் மட்டுமல்லாது பெண்களுக்கென பிரத்யேகமாக தனி அழகு நிலையம் அனைத்தையும் ஒரே இடத்தில் பெறமுடியும் என்றால் அது ‘ப்ளஸ்’ஸில்(PLUSH) மட்டும் தான். சென்னையில்...

Close