கடவுளே சிக்கியிருந்தாலும், கரண்டியை பழுக்க போட்டிருப்பார்
வெளிச்சத்துல எடுக்கணும். இருட்டுல பார்க்கணும். இதுதான் சினிமா சூத்திரம்!
சிலரோட சூத்திரமே வேற… அவங்க தேடுற அந்த இருட்டு அவங்க மனசுலயே இருக்கும். அதுவும் போதாது என்று ‘ஹோல் சேல் ரேட்ல கொஞ்சம் கும்மிருட்டு கிடைக்குமா?’ என்று அலைவார்கள்! கருமத்தை தொலைக்கதான் காசிக்கு போவாங்க. நானும் போனேன். திரும்பி வரும்போது, என்னோட சேர்ந்து முப்பது லட்ச ரூபாய் கருமமும் வந்துச்சு’ என்று புதிர் போட்டார் அந்த பட அதிபர்.
‘காலை டிபன் ஆம்பள பொணம். மதியத்துக்கு ஆணோ, பெண்ணோ… நடுத்தர வயசா பார்த்துக்கோ, அதுல லெக் பீஸ் முக்கியம்! ராவுக்கு இரண்டு கை சூப் போதும்டா. வவுறு மந்தமா இருக்கு. ஏலேய்… பார்த்துப்பா. போன தடவ விரல கடிக்கும்போது அவன் போட்டிருந்த மோதிரமும் சேர்ந்து உள்ள போயிருச்சு. பீஸ செலக்ட் பண்ணும்போது இதெல்லாம் இருக்கான்னு உத்து கவனிச்சு உருவி எடுத்துகிட்டு வா… ’ இப்படி சிஷ்யர்களிடம் ‘ரெடர்’ கிளப்பும் அகோரிகளை, பிணந்தின்னி ஸ்பெஷலிஸ்டுகள் என்பார்கள்! அவர்கள் நிறைந்த காசியில்தான், அந்த கொடூரி இயக்குனரிடம் சிக்கி ‘கொலாஜ்’ ஆகி திரும்பியிருந்தார் நம்ம பட அதிபர்.
அதை சொல்வதற்கு முன் டைரக்டரை பற்றி சிறுகுறிப்பு வரைவது முக்கியம். அடிப்படையில் நாத்திகர். ஆனால் அது ஃபுல் டைம் கொள்கையா என்றால் அது பெரிய மர்மம்.
சில நேரங்களில் தனது ஆபிஸ் கதவை சார்த்திக் கொண்டு உள்ளே போனால், மீண்டும் கதவு திறக்க ரெண்டு மணி நேரமோ, மூணு மணி நேரமோ கூட ஆகலாம். அப்படி என்னதான்யா பண்றாரு உள்ளே?
கழுத்தில் உத்திராட்ச மாலையை போட்டுக் கொண்டு, ஒரு மெழுகு வர்த்தியை கொளுத்தி வைத்துக் கொண்டு உட்கார்ந்து விடுவார். எதிரிலிருக்கும் சுவரில் ஒரு போர்டு இருக்கும். அதில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்களை கேட்டால் ஆடிப்போய் விடுவீர்கள். ‘நீ திறமைசாலி. நீ எதற்கும் அஞ்சாதவன். உன்னால் எதையும் வெல்ல முடியும்’ இதே டைப்பில் இன்னும் என்னென்னவோ!
நாலு படத்துக்கு தேவையான புட்டேஜை எடுத்து, அதுல மூணு படத்தை குப்பையில போட்டுட்டு ஒரு படத்தை எடிட் பண்றவருக்கு சினிமா அவ்வளவு பெரிய அந்தஸ்தை கொடுக்குதே என்றெல்லாம் சினிமாவுலகம் உப்புத்தாள் கொண்டு சொந்த நாக்குகளில் சொறிந்து கொண்டாலும், ஆடியன்ஸ் அப்ளாஸ்சே வேற! அவர்களை பொறுத்தவரை காலங்களில் அவர் வசந்தம். படைப்பாளிகளில் அவர் பட்டு சொக்கா!
இவரால்தான் இன்னும் விழு(ந்த)ப் புண் தாங்கி நிற்கிறார் அந்த பட அதிபர். அது ஒரு கொடூரமான நாள். ஒரு நிகழ்ச்சியில் இவரை பார்த்த இயக்குனர், ‘அண்ணே… நீங்க இப்ப வச்சுருக்கீங்களே ரெண்டு நாள் தாடி. அதை அப்படியே விட்ருங்க. ஒரு வாரம் கழிச்சு நான் வந்து உங்களை பார்க்குறேன்’னு சொல்லும்போதே, இவருக்கு புரிந்துவிட்டது. அவர் படத்தில் நாம் நடிக்கப் போகிறோம் என்று. இருந்தாலும் நாம பணம் போட்டு எடுத்த படத்துலேயே தலைய காட்டல. இன்னொருவர் படத்துல நடிச்சு என்னத்தை கிழிக்க போறோம் என்கிற எதிர்மறை வினையெச்சமும் வந்து ‘எதுக்குங்க அதெல்லாம்?’ என்றது.
‘நமக்கு அதெல்லாம் சரிப்படாது தம்பி’ என்று கூறி விட்டார். இருந்தாலும் மறுநாளே இவரை தேடி வந்த தயாரிப்பு நிர்வாகிகள், ‘சார் இதுவரைக்கும் தொள்ளாயிரத்து சொச்சம் பேரை பார்த்துட்டார். யாரும் அவருக்கு சரிப்படல. என்னவோ உங்களை பார்த்ததும் இவருதான் நாம தேடுன ஆளுன்னு முடிவு பண்ணிட்டாரு. அவர் படத்துல நடிக்கறது நீங்க பூர்வ ஜென்மத்துல புண்ணியம். சரின்னு சொல்லுங்க’ என்றார்கள்.
மரவட்டை ஊறி கருங்கட்டை கரைஞ்சா மாதிரி, கரைஞ்சே போனார் பட அதிபர். எல்லாரும் கிளம்பி காசிக்கு போனார்கள். தயாரிப்பாளர் கொடுத்த ஐந்து லட்சத்தோடு ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு வந்திறங்கினார் தயாரிப்பு நிர்வாகி. இந்த படத்திற்காக ஏசியிலேயே வாழ்ந்த ஒரு யங் ஹீரோவை சிரங்கு வந்த சிங்கம் போலாக்கியிருந்தார் இயக்குனர். காதோரம் தட்டிவிட்டால், நாலைந்து காடை கவுதாரிகள் பறக்கிற அளவுக்கு ஜடாமுடியோடு திரிந்து கொண்டிருந்த அந்த ஹீரோ உட்பட சுமார் ஐம்பது பேர் காசிக்கு வந்திறங்க, கையிலிருக்கிற பணத்தை வைத்து ஏழெட்டு நாட்களை சமாளிக்கலாம் என்று கணக்கு போட்டிருந்தார் தயாரிப்பு நிர்வாகி. அதற்குள் அடுத்த செட் பணம் வந்துவிடும் என்பது அவரது கணக்கு.
இங்க திரியுற சாமியாருங்க, பிச்சைக்காரங்கன்னு நூறு பேராவது வேணும். புடிச்சுட்டு வா… என்று கட்டளையிட்டார் இயக்குனர், அவர்களையும் சேர்த்தால், தினந்தோறும் 160 பேர் படப்பிடிப்பில். போன முதல் நாளே நம்ம பட அதிபருக்கு ஹார்ட் அட்டாக்கை வரவழைத்தார் இயக்குனர்.
காசியின் கரையெல்லாம் கங்கை புரண்டு ஓடுவாள். இருந்தாலும், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மரங்கள் இல்லை. கொளுத்தும் வெயிலில் ஒதுங்க நிழல் இல்லை. நெருப்பில் விழுந்த நெய் பாட்டில் மாதிரி ஆகியிருந்தார்கள் எல்லாரும். ஹீரோவை அழைத்த இயக்குனர், தம்பி… நீ இவரை பிடிச்சு தரதரன்னு இந்த கட்டாந்தரையில இழுத்துட்டு வரணும். இதைதான் இன்னைக்கு எடுக்கப் போறோம் என்றார்.
நம்ம டைரக்டர் இருக்காரே… ஒவ்வொரு காட்சிக்கும் ரிகர்சலே மூணு நாட்களுக்கு குறையாமல் நடக்கும். நம்ம பட அதிபரை காலையில் தரையில் போட்டு இழுக்க ஆரம்பித்தார்கள். ஒண்ணு… ரெண்டு… மூணு… என்று ஆரம்பித்து, ஐம்பது அறுபது என்று போய் கொண்டிருந்தது இழுப்பும் ரிகர்சலும். கை, கால், இடுப்பு, இன்னபிற ஏரியாக்கள் என்று படுபயங்கர டேமேஜ்! நேரம் செல்ல செல்ல, காசி விஸ்வநாதா… என் உசுரு பிடிச்சுருந்தா எடுத்துக்கோ. இப்படி சித்திரவதை பண்ணிதான் எடுத்துக்கணுமா?’ என்கிற அளவுக்கு கதற ஆரம்பித்துவிட்டார் பட அதிபர்.
ஹீரோவிடம் , ஏய்… நீ தலை கீழா நில்லு. கண்ணுல ரத்தம் தெரியணும் என்று கூறிவிடுவார் டைரக்டர். அந்த கட்டாந்தரையில் கபாலத்தை கிறுகிறுக்க வைக்கும் வெயிலில் இவர் தலைகீழாக நின்றால், கண்ணுல மட்டுமா ரத்தம் வரும்? உடம்பிலிருக்கிற ஒன்பது துவாரத்திலும் பிய்த்துக் கொண்டது. கபாலத்தில் நுழைந்த வெயில், கால் பாதம் வழியே வெளியேறி, ‘நான் இங்கிருக்கேன்…’ என்று கூவியது. இருந்தாலும், வெறி வந்த மாதிரி சொன்னவற்றையெல்லாம் செய்தார்கள்.
இதற்கிடையில், அழைத்து வரப்பட்ட சாமியார்களுக்கு சாப்பாடு, பேட்டா என்று கை காசு ரெண்டே நாளில் கரைந்தது. ஊருக்கு போன் பண்ணி ‘பணம் கரைச்சுருச்சு. இதுக்கு மேலும் இங்க வேலை நடக்கணும்னா பணம் அனுப்புங்க’ என்றார் தயாரிப்பு நிர்வாகி. அதுக்குள்ள அஞ்சு லட்சம் காலியா?. இப்படியே போனா நம்ம பியூச்சருக்கு காசியில ஒதுங்க விட்ருவாய்ங்க என்பதை கண நேரத்தில் புரிந்து கொண்ட தயாரிப்பாளர், போனை சுவிட்ச்ஆஃப் பண்ணிவிட்டு ஓய்ந்துவிட்டார். ம்ஹும்… யாரை நம்பியும் இங்கு ஒரு நாள் காலம் தள்ள முடியாது என்பதை உணர்ந்த தயாரிப்பு நிர்வாகி அங்கிருந்து சொல்லாமல் கொள்ளாமல் ஓடினார்.
மறுநாள் மேய்ப்பன் இல்லாத ஆடுகள் ஆனார்கள் அத்தனை பேரும். திங்கறதுக்கு தழை கூட வேணாம். தழைன்னு பேப்பர்ல எழுதி கொடுக்கிற அளவுக்கு ஒரு சப்போர்ட் இருந்தா கூட பசியாறிடலாம் என்கிற நிலைமை. எப்படியோ, தனக்கு தெரிந்த சென்னை நண்பர்களிடம் ஏடிஎம்-ல் பணம் போட சொல்லி முதல் நாளை நகர்த்தினார் ஹீரோ. ரெண்டாம் நாளுக்கு? ‘ஏன்யா பதர்றீங்க? வந்துருவான்’ என்றார் டைரக்டர். இங்குதான் அந்த பொல்லாத பரமபத விளையாட்டில் பாம்பு வாலை டச் பண்ணினார் நம்ம பட அதிபர்.
சென்னையிலிருக்கும் புகழ் பெற்ற பட நிறுவனம் ஒன்றுக்கு போன் அடித்தவர், ‘காசியில சிக்கிக்கிட்டோம். அப்படியே இந்த பிராஜக்டை உங்க கம்பெனிக்கு மாத்தி கொடுக்கிறோம். ஒரு முப்பது லட்சத்தை அக்கவுன்ட்ல போட்ற முடியுமா?’ என்றார். செயலிலும் நேர்மையிலும் ‘அழகான’ தயாரிப்பாளர்… ‘மணி’ கேட்கிறார். அவருக்காக கொடுப்போமே என்று நினைத்த நிறுவனம் அடுத்த நிமிஷமே பணத்தை அக்கவுன்ட்டில் டிரான்ஸ்பர் செய்ய, மீண்டும் காசி ஷுட்டிங் களேபரமாக தொடர்ந்தது. ஒரு முக்கியமான பிணந்தின்னி சாமியார் கேரக்டரில் டி.வி நடிகர் ஒருவர் நடித்திருந்தார். முப்பது நாட்கள் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியிருந்தார்கள் எல்லாரும். வந்த வேகத்தில் இந்த படத்திற்காக வேறொரு தயாரிப்பாளரையும் தனது செல்வாக்கில் ஏற்பாடு செய்திருந்தார் பட அதிபர். அதான் பழைய தயாரிப்பாளர் பம்மிவிட்டாரே…
இதற்கிடையில், எடுத்தவரைக்கும் படத்தை போட்டுப்பார்த்தார் இயக்குனர். ‘அந்த டி.வி நடிகன் சொதப்பிட்டான்யா… ம்ஹும்… மொதல்லோர்ந்து எடுத்துருவோம். அந்த சாமியார் கேரக்டருக்கு வேற ஆள பாரு. இப்ப எடுத்தது எல்லாம் வேஸ்ட். அப்படியே தூக்கி போட்ற வேண்டியதுதான்’ என்றார் எவ்வித பதற்றத்திற்கும் இடம் கொடுக்காமல்.
இது ஒன்றும் அவருக்கு புதுசல்ல. இதற்கு முன் பலமுறை நடந்திருக்கிறது. சரி… நீக்கி தொலைக்கட்டும். அல்லும் பகலுமா தேய்ஞ்சு, சாணியும் வறட்டியுமா காய்ஞ்சி, உசுரு தப்புனா ஊழ்வினை புண்ணியம்…னு கதறி கதறி நடித்தவர்களின் உழைப்புக்கெல்லாம் அர்த்தமே இல்லாமல் இப்படி ஷாக் கொடுத்தால்? இதைதான் நடு நெற்றி நரம்படி என்கிறது கொடுங்கோலர்களின் டிக்ஷனரி . ‘இத்தனை நாள் நான் எடுத்தது வெறும் டெஸ்ட் ஷுட்தான்’ என்று அப்படியே அள்ளி குப்பையில் போடுவாரே… அங்கு உடையும் தயாரிப்பாளரின் சீனப் பெருஞ்சுவர்.
‘ஏன் தம்பி… முப்பது நாள் புட்டேஜ். பல லட்சம் செலவு. தூக்கிப் போட சொல்றீயே?’ என்று பட அதிபர் பஞ்சாயத்துக்கு போக, ‘எல்லாம் உன்னாலதான்யா’ என்றார் டைரக்டர். ஏனாம்? ‘நீ மட்டும் அன்னைக்கு முப்பது லட்சத்தை புரட்டி கொடுக்கலேன்னா எல்லாரும் படம் எடுக்காம திரும்பியிருக்கலாம்ல? என்று டைரக்டர் எகிற, அன்றிலிருந்து இரண்டு பேருக்குமான பேச்சு வார்த்தையே கட்! உடுக்கை இழந்தவன் கைகளுக்கெல்லாம் இப்படி கடுப்பை கிளப்புகிற மனிதர்கள்தான் கிடைப்பார்கள் போல!
மீண்டும் படப்பிடிப்பு துவங்கியது. காஞ்சிபுரத்தில் ஒரு கட்டாந்தரை சிமென்ட் பரப்பில் ஷுட்டிங். அப்பா மகன் காலில் விழுவது போல ஷாட். நம்ம பட அதிபர்தான் அப்பா! மே மாச வெயிலில் சிமென்ட் கட்டாந்தரை எப்படியிருக்கும்?
விழுந்தார்.
விழு..ந்..தார்.
வி…ழு..ந்…தா…ர்…
கிட்டதட்ட இருபது டேக். முதல் ஷாட்லயே ஓகே ஆகிருச்சே என்று கேமிராமேன் பின்னாலிருந்து கட்டை விரலை உயர்த்தினாலும், அந்த ‘கெட்ட’ விரலுக்கு திருப்தி வரணுமே? ம்ஹூம்… ரீடேக் ரீடேக்… என்று போய் கொண்டேயிருந்தது. விழுந்தவருக்கு கட் சொல்ல, வேண்டுமென்றே சில நிமிடங்கள் எடுத்துக் கொண்டார் இயக்குனர்.
அது நடந்து பல வருஷங்கள் ஆகிவிட்டது. அந்த படத்திற்கு அவார்டு கிடைக்கும் என்றார்கள். ‘கிடைச்சுதே…. இதோ! சாடிஸ்ட் தம்பி அவன்…’ என்றபடியே தனது வேஷ்டியை விலக்கி பட அதிபர் முழங்காலை காட்டினார். கருப்பு கருப்பாய் கையலகத்திற்கு இரண்டு தழும்புகள்.
நல்லவேளை… கடவுளே சிக்கியிருந்தாலும், கரண்டியை பழுக்க போட்டிருப்பார் நம்ம இயக்குனர்! ஏனென்றால் படைப்பென்ற உலகத்தில் அவர்தானே கடவுள்!
(குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் ஆர்.எஸ்.அந்தணன் எழுதி வரும் கோடம்பாக்கம் செக்போஸ்ட் தொடரிலிருந்து…)