‘இந்த கார வச்சுருந்த சொப்பன சுந்தரிய இப்ப யாரு வச்சுருக்கா?’

‘இந்த கார வச்சுருந்த சொப்பன சுந்தரிய இப்ப யாரு வச்சுருக்கா?’ என்பதெல்லாம் முக்கியமில்லாத விஷயமாகிவிட்டது! சொப்பன சுந்தரி யாருட்ட இருந்தாதான் என்ன? அவளோட காரு இப்போ யாருகிட்ட இருக்கு? என்று ‘கார் கால’ மேகங்களாக கார்களை சுற்றி வர ஆரம்பித்திருக்கிறது கோடம்பாக்க விஐபிகளின் லுக்! நாலு சோப்பு வாங்குனா நல்லா தேய்ச்சு குளிக்க மூணு நகம் இலவசம். ரெண்டு பாக்கெட் ஷாம்பூ வாங்குனா, மூணு பக்கெட் தண்ணி இலவசம்ங்கிற அளவுக்கு ஆளையே ‘கவுக்குற’ டெக்னிக் இங்கு எல்லாருக்கும் தெரிந்திருக்கிறது. முன்னணி ஹீரோக்களின் கால்ஷீட் கிடைச்சா போதும், அவர்களுக்கு உயர் ரக கார்களை இலவசமாக தர்ற அளவுக்கு தாராளமாகிக் கிடக்கிறது சிலபல தயாரிப்பாளர்களின் மனசு.

ஒருபுறம் வாங்குகிற சம்பளத்தையெல்லாம் கார்களில் முடக்கிவிடுகிற நட்சத்திரங்கள், அதை பராமரிப்பதற்கு படுகிற பாடு இருக்கிறதே… அது யானைக்கு எண்ணை தேய்ச்சு குளிக்க வைக்கிற கதைதான். ஒரு மூன்றெழுத்து நிறுவன தயாரிப்பாளர் ரோல் ராய்ஸ் கார்கள் மூன்று வைத்திருக்கிறார். ஒவ்வொரு காரும் சுமார் மூன்று கோடி மதிப்புள்ளது. இந்த கார்கள் சாலையில் வந்தாலே, பின் தொடரும் வாகனங்கள் ‘உள்ளே ஓபாமா இருப்பாரோ?’ என்கிற திகிலோடும் மரியாதையோடும் விலகி வழிவிடுகிறார்கள். நல்ல விஷயம். ஆனால் சினிமா விழாக்களுக்கு வரும்போது இந்த கார்களை சுற்றி பாதுகாப்புக்கு நிற்கவே நாலு பேர் வேறொரு காரில் பின்தொடர்கிற காமெடியெல்லாம் நடக்கும். பக்கத்தில் யார் போனாலும், டிராபிக் போலீஸ் மாதிரி குறுக்கே கை போட்டு ரூட்டை மாற்றிவிடுவார்கள் இந்த செக்யூரிடிகள்.

இப்படி மெர்க்குரி பல்பையே மூக்குத்தியாக போட்டுக் கொண்டவர்களின் பளபளப்பு மற்றவர்களின் கண்களை கூச வைக்காத வரைக்கும் சந்தோஷம்தான்.

டைரக்டர் ஷங்கர் ரோல் ராய்ஸ் கார் வைத்திருக்கிறார். இந்த நிறுவனத்தின் காரை பணம் வைத்திருக்கும் யார் நினைத்தாலும் வாங்கிவிட முடியாது. வாங்குகிற நபருக்கு சொசைட்டியில் என்ன மரியாதை இருக்கிறது. அவர் இந்த காரை வைத்திருக்க தகுதியானவர்தானா என்றெல்லாம் ஒரு பெரிய புலனாய்வு குழுவை கொண்டு விசாரித்து திருப்தி இருந்தால் மட்டுமே டெலிவரி செய்வார்களாம். இல்லையென்றால் ரொக்கமாக கோடிகளை கொட்டினாலும், நோ சொல்லிவிடுவார்களாம். (நெசமாவா?)

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் விலையுயர்ந்த கார்கள் மூன்று வைத்திருக்கிறார். அதிலும் ‘லம்போகினி’ என்ற உயர் ரக கார், சென்னையில் அவரிடம் மட்டுமே இருப்பதாக கூறுகிறார்கள். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அந்த கார், கப்பலில் சென்னைக்கு வந்துவிட்டது. அதை கன்டெயினரிலிருந்து இறக்குவதற்கான தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் இங்கு இல்லை. அதற்கப்புறம் ஜெர்மனியிலிருந்து ஆட்கள் வந்து காரை இறக்கினார்கள். செலவு? அதற்கே ஐம்பது லட்சம் ஆனதாம். அப்படியென்றால் காரின் விலை? அந்த காரை சென்னை டிராபிக்கில் ஓட்டிவிட முடியுமா என்ன? வாரத்திற்கு ஒரு முறையாவது லம்போகினி காரில் சுற்றி வர வேண்டிய ஹாரிஸ், வீட்டில் நிறுத்திவிட்டு தினமும் மூன்று முறை அதை சுற்றி சுற்றி வருகிறார். இருந்தாலும் ‘நான் லம்போகினி வச்சுருக்கேன்ல?’ என்ற கம்பீரத்திற்கு ஈடேது!

இதுபோன்ற கார்கள் ஒரு ரயிலின் சிங்கிள் கம்பார்ட்மென்ட் நீளத்திலிருப்பது உள்ளேயிருப்பவர்களுக்கு வேண்டுமானால் சவுகர்யம். நம்ம ஊர் சாலைகளின் நீள அகலத்தில் இவைகள் சிக்கிக் கொண்டால், ‘இன்னாத்துக்குடா ரயில இட்டாந்து நடு ரோட்ல விட்ருக்கானுவ?’ என்று லட்சார்ச்சணை செய்பவர்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகாமல் தப்பவே முடியாது.

அந்த விஷயத்தில் அஜீத் எளிமை. ஒரு ஸ்விப்ட் வைத்திருக்கிறார். அதில்தான் பயணம். வீட்டிலிருக்கும் மற்றொரு ஆடி கார் மனைவி ஷாலினிக்கு. பெரும்பாலும் காரில் பாடல் கேட்பதில்லை. நள்ளிரவில் காரை எடுத்துக் கொண்டு கண்ணாடிகளையும் இறக்கிவிட்டுவிட்டு சென்னையை சுற்றி வருவது அவரது ஹாபி.

வெளி நாட்டு கார்களை ஏகப்பட்ட பணம் கொடுத்து வாங்குவது. அதை தாறுமாறாக ஓட்டி எதிலாவது இடித்து நசுக்குவது என்று கருணாசின் கார் ஸ்டைல் வேறு மாதிரி.

ரஜினிக்கு எப்போதும் அம்பாசிடர்தான் பிடிக்கும். தி.நகரிலிருக்கும் ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில் காரை புக் பண்ணிக் கொண்டு நள்ளிரவில் சென்னையை சுற்றுவது ரஜினியின் விருப்பம்.

இங்குதான் கார் ஒன்றினால் வந்த கலவர நிலவரம் ஒன்று!

எப்போதும் சர்ச்சையை தலை பாகையாக கட்டிக் கொள்கிற பெரிய நடிகர் அவர். தலைமுறை தாண்டியும் தனக்கான ரசிகர் கூட்டத்தை அப்படியே வைத்திருக்கும் டாப் ஹீரோ. மார்க்கெட்டில் மட்டுமல்ல, நடிப்பிலும் அவர்தான் டாப். அவருக்கும் சேனல் அதிகாரி ஒருவருக்கும் நிகழ்ந்த பிரச்சனை அவ்வளவு மரியாதையாக இல்லை. ஏன்? எல்லாம் பாழாய் போன அந்த காரால் வந்த வினை.

தான் பணியாற்றும் அந்த சேனலுக்காக சில முறை ஹீரோவை சந்தித்தார் அதிகாரி. அப்புறம் மெல்ல தங்கள் சேனலில் அவரை அழைத்து சிறப்பு மரியாதை செய்வதுடன், நல்ல நல்ல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க வைத்தார். அப்படியே நட்பு நன்றாக வளர்ந்தது. அதற்கப்புறம் தனது வீட்டிலிருந்து சேனலுக்கு கிளம்பினாலும், போகும் வழியில் ‘ஆண்டவனே…’ என்று ஹீரோவை வணங்கிவிட்டு செல்கிற அளவுக்கு திக்கோ திக் ஆகிவிட்டார். இப்படி மெல்ல மெல்ல நட்பை வளர்த்தவர், நான்தான் அந்த ஹீரோவுக்கு மேனேஜர் என்று சொல்லிக் கொள்கிற அளவுக்கு கோடம்பாக்கத்தில் பிரபலமாகிவிட்டார். அப்படி சும்மா சொல்லிக் கொள்ளாமல் தனக்கு கிடைத்த இடத்திற்கும், இடத்தை தந்த ஆண்டவனுக்கும் நேர்மையாக இருந்து, வரவேண்டிய பண பாக்கியையெல்லாம் வசூல் செய்து கொடுத்து வந்தார்.

ஹீரோ வாங்குகிற சொத்துபத்துகளில் கூட சேனல் அதிகாரியின் அக்கறை இருந்தது. நாலு இடத்தில் விசாரிப்பது. விலை குறைவாக பேசிக் கொடுப்பது என்று வெகு சீக்கிரம் ஆண்டவனின் மனசுக்குள் வந்துவிட்டார்.

பக்தன் தர்ற பிரசாதத்தை ஏத்துகிட்டு பாத்திரத்தை திருப்பி தர்றதுதானே கடவுளோட கருணை? ஆனால் ஆண்டவன் சில விஷயங்களில் ஸ்ட்ரிக்டு. அது புரியாத சேனல் பிரபலம், ‘வாசல்ல நாலைஞ்சு வண்டி நிக்குதே சார். அதுல ஒரு வண்டிய நீங்க வெளியில் எடுக்கறதேயில்லையே?’ என்றார் கேஷுவலாக. இந்த இடத்தில் ஆண்டவன் என்ன செய்திருக்க வேண்டும்.

பக்தா… இந்த சாவி. எடுத்துக்கோ… ஓட்டு… என்பதைதானே? ஆனால் ஹீரோ அதை செய்யவில்லை. ‘அதுவா. அந்த வண்டிய வித்துடலாம்னு இருக்கேன் ’ என்றார் கேஷுவலாக. அதற்கப்புறமும் அந்த சம்பாஷணை நீளும் என்பது அவருக்கு தெரியவில்லை. ‘அப்படியா? அப்படின்னா நானே அதை எடுத்துக்குறேன். என்ன விலையோ? அதுக்கு ஒரு செக் கொடுத்துர்றேன்’ என்றார் இவர். அதுவும் ஒரு உயர் ரக கார்தான். மார்க்கெட்டில் என்ன விலையோ, அதை நிர்ணயித்து ஒரு செக்கை எழுதி ஹீரோ கையில் கொடுத்துவிட்டு அன்றே காரோடு வீட்டுக்கு போயிருந்தார் சேனல் பார்ட்டி.

ஹீரோ அந்த செக்கை கை நீட்டி வாங்குகிற நேரத்தில் ‘அதுக்கென்ன… இருக்கட்டும். வச்சுக்கங்க. என்னோட கிஃப்ட்டா இருக்கட்டும்’ என்று சொல்வார் என்பது இவரது எண்ணம். அதுதான் நடக்கவில்லையே?

இருந்தாலும், கார் வந்த சந்தோஷத்தில் ஒரு வாரம் சுர்ரென ஓடியது. இந்த சந்தோஷ ரணகளத்தில், தான் கொடுத்த செக்கை மறந்தே போனார். ஹீரோவின் அலுவலக ஊழியர்கள் செக்கை பேங்கில் போட, மறுநாளே அது கோயம்பேடு காய்கறி லாரியில் பயணம் செய்த களைப்போடு திரும்பி வந்திருந்தது. எல்லாருக்கும் ஷாக். ஆபிஸ் நிர்வாகிகள் சேனல் பிரமுகருக்கு போன் போட்டு, ‘என்னாச்சு சார்? செக் திரும்பி வந்துருச்சே’ என்றார்கள். இவருக்கு அதைவிட ஷாக்கோ ஷாக். நம்ம ஹீரோ ஒரு பேச்சுக்கு கூட செக் வேணாம்னு சொல்லல. அதற்கப்புறமும் அதை பேங்க்ல போட்டுட்டாரே என்பதுதான் அது.

‘எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு போட்ருக்கலாம்ல? எப்ப போடணும்னு நான் சொல்றேன். அப்ப போடுங்க’ என்று கூறிவிட்டார். அதோடு ஹீரோவின் வீட்டுக்கான தனது போக்குவரத்தையும் நிறுத்திவிட்டார். அதற்காக விடுவார்களா என்ன? தினந்தோறும் போன் செய்து ‘சார்… செக்கை போட்டுடலாமா?’ என்று கேட்டுக் கொண்டேயிருந்தார்கள் ஊழியர்கள்.

ஒரு சந்தர்ப்பத்தில் பதில் சொல்வதையும் நிறுத்தினார் சேனல் ஜென்ட்டில்மேன். சம்பந்தப்பட்ட ஆபிசிலிருந்து வருகிற போன்களையும் கால் பிளாக் செய்துவிட்டார். ம்ஹும்… அதற்கப்புறம் போன் வரவேயில்லை. நாட்கள் ஓடின. திடீரென ஒரு அதிகாலை நேரம். காலிங் பெல் அடிக்க, ‘பால் பாக்கெட், பேப்பர் போடுகிற பையன் போட்டுட்டு போக வேண்டியதுதானே? எதுக்கு பெல் அடிக்கிறான்’ என்ற சந்தேகத்தோடு கதவை திறந்தார்.

என்னவொரு அதிர்ச்சி. ஹீரோவின் அலுவலக ஊழியர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். ‘சார் வணக்கம். நம்ம சார் கீழேதான் இருக்கார். உங்ககிட்டயிருந்து கார் சாவிய வாங்கிட்டு வரச்சொன்னார்’ என்றார் எவ்வித சலனமும் இல்லாமல். படுபயங்கர அதிர்ச்சிக்கு ஆளாகியிருந்தார் சேனல் சாப். இப்படியெல்லாம் நடக்கும் என்று நினைத்தே பார்க்கவில்லை அவர். கேட்டு கேட்டு பார்த்து ஒரு கட்டத்தில் கேட்காமலே விட்டுவிடுவார் என்பது இவரது நினைப்பு. இருந்தாலும் தான் அணுஅணுவாக ரசித்த ஹீரோ, இப்போது தன் வீட்டு வாசலில் நிற்கிறார். சாமியே பக்தனை பார்க்க வந்த நேரம் அது. ஆனால் பக்தனுக்குதான் சாமியை முகம் கொடுத்து பார்க்கிற துணிச்சல் இல்லை. சைலண்டாக உள்ளே போனவர் சாவியை கொண்டு வந்து ஊழியர் கையில் கொடுத்தார். சிறிது நேரத்தில் பொய்ங்…. என்ற ஹாரன் சப்தத்துடன் கார் இவரது அபார்ட்மென்ட்டிலிருந்து வெளியேறியது.

யாரோ யார் மனசிலிருந்தோ அந்த காரைவிடவும் வேகமாக வெளியேறிக் கொண்டிருந்தார்கள்!

(குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் ஆர்.எஸ்.அந்தணன் எழுதி வரும் ‘கோடம்பாக்கம் செக்போஸ்ட்’ தொடரிலிருந்து…)

1 Comment
  1. Ahmed says

    இந்திய திரை உலகில் எளிமையின் சிகரம் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினி தான். வேறு யாரும் கிடையாது.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
வை ராஜா வை… படத்தில் ஒரு ரகசியம்! நல்லா வையுங்க ராஜா வையுங்க?

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியிருக்கும் வை ராஜா வை படம் மே 1 ந் தேதி வெளியாகிறது. இந்த நிமிஷம் வரைக்கும் ஒரு ரகசியத்தை காத்து வருகிறார் ஐஸ்வர்யா....

Close