கோச்சடையான் ரிலீஸ் மீண்டும் தள்ளி வைப்பு ஏன்? சுட சுட சில பின்னணிகள்
மே 9 ந் தேதி வெளியாகவிருந்த கோச்சடையான் திரைப்படம் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் முன் பதிவு செய்யப்பட்டிருந்த டிக்கெட்டுகள் கேன்சல் செய்யப்பட்டு உரியவர்களுக்கு பணம் திரும்ப வழங்கப்பட்டது. ஏனிந்த திடீர் தடுமாற்றம்? என்ற குழப்பத்துடன் ரசிகர்கள் தங்கள் பணத்தை திரும்ப பெற்று சென்றனர். இதற்கிடையில் இந்த முறையும் ரிலீஸ் தேதி தள்ளிப் போனதன் பின்னணி என்ன என்று விசாரித்தால், விநியோகஸ்தர் மற்றும் பைனான்சியர்களின் தொடர் பிடிவாதம்தான் காரணம் என்று தெரிய வருகிறது.
இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் சுமார் நாற்பது கோடிக்கும் மேல் சில விநியோகஸ்தர்களுக்கும் பைனான்சியர்களுக்கும் பாக்கி வைத்திருக்கிறதாம். இந்த பணத்தை செட்டில் செய்துவிட்டு படத்தை வெளியிடும்படி அவர்கள் பிடிவாதம் காட்டி வந்தார்கள். நடுவில் இவர்களுக்கு ரொக்க தொகையாக பத்து கோடி திருப்பி வழங்கப்பட்டது. மீதமுள்ள தொகைக்கு காசோலையும் வழங்கப்பட்டதாம். இந்த காசோலை வங்கியில் செல்லுபடியானால்தான் படத்தை வெளியிட விடுவோம் என்பதில் பிடிவாதமாக இருந்தார்கள் மேற்படி கடன் பார்ட்டிகள்.
இதற்காக நாடெங்கிலுமிருக்கிற தியேட்டர்களிலிருந்து அட்வான்ஸ் தொகையை பெற அதிரடியாக திட்டம் வகுக்கப்பட்டது. தியேட்டர் ஒன்றுக்கு பத்து லட்சம் முன் தொகை வேண்டும் என்று கேட்கப்பட்டதாம். ஆனால் இந்த படத்தின் மீது ஆரம்பத்திலிருந்தே நம்பிக்கை காட்டாத சில தியேட்டர்காரர்கள் அவ்வளவு பணத்தை அட்வான்சாக தர முன்வரவில்லை. அதுமட்டுமல்ல, இந்த தொகை நஷ்டமானால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று அக்ரிமென்ட் போட முனைந்தார்களாம். இதன் காரணமாகவே அவ்வளவு பெரிய மதுரையில் மூன்றே மூன்று தியேட்டர்களில் மட்டுமே கோச்சடையான் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் பிடிவாதமாக இருந்த பைனான்ஸ் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு ஒரு முக்கியமான அதிகார மையத்திலிருந்து தொலைபேசி சென்றதாகவும், படத்தை வெளியிட உதவும்படி கேட்டுக் கொண்டதாகவும் தகவல்கள் கசிகின்றன. இந்த தொலைபேசி ட்ரீட்மென்ட்டுக்கு பிறகு படம் வெளியாகிவிடும் என்ற நம்பிக்கை கோச்சடையான் குழுவினருக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் க்ளைமாக்ஸ் நேரத்தில் என்ன திருப்பம் நிகழ்ந்ததோ? மீண்டும் பிடிவாதம் காட்ட ஆரம்பித்துவிட்டார்கள் கடன் பார்ட்டிகள்.
இறுதி முடிவு என்னவாம்? இப்போதைய நிலவரப்படி மே 23 ந் தேதிக்கு பட வெளியீட்டை தள்ளி வைத்திருக்கிறார்கள்.