தென்கிழக்கு, வடகிழக்கு பருவ மழைக்குப் பிறகு தியேட்டரில் ஒரு மழை!
‘மழை’ என்ற பெயரே கடலூர் சென்னை மக்கள் மனதில் பெரிய அதிர்வை ஏற்படுத்தி வரும் நேரமிது! அதற்காக மழையை ரசிக்காமலிருக்க முடியுமா என்ன? “நாங்க சொல்ற மழையை சினிமாவில் ரசிங்க” என்று திட்டம் போட்டு ஒரு படம் எடுத்திருக்கிறார் இயக்குனர் கதிரவன். படத்தின் பெயர் கோடை மழை. இந்த தலைப்பு படத்திற்கு 100 சதவீதம் பொருத்தமான தலைப்பு என்கிறார் அவர்.
அதாவது இடைவேளைக்கு முன்பு வரும் காட்சிகள் எல்லாம் கோடையிலும், இடைவேளைக்கு பின்பு வரும் காட்சிகள் யாவும் மழை காலத்திலும் எடுத்திருக்கிறார்களாம். இதற்காகவே நாங்க காத்திருந்து பல காட்சிகளை ஷுட் பண்ணியிருக்கிறோம். சங்கரன் கோவில் பகுதியில்தான் இந்த கதை நடக்கிறது. முழுக்க முழுக்க யதார்த்தமான வாழ்வியலை சொல்லும் படமா வந்திருக்கு. ஆச்சர்யம் என்னன்னா, கவிஞர் வைரமுத்து எவ்வளவோ பாடல்களை எழுதியிருக்கிறார். ஆனால் திருநேல்வேலி பாஷையை மையமாக வைத்து எந்த பாடலும் எழுதியதில்ல. முதன் முறையா இந்த படத்துக்காக எழுதியிருக்கார் என்றார் கதிரவன்.
அவர் பாடல்கள் எழுதிய படங்களையே அவர் பார்ப்பதில்லை என்கிற ஒரு தகவல் உண்டு வைரமுத்துவை பொறுத்தவரை. ஆனால் இந்த படத்தை பார்ப்பதற்காக வந்திருந்தாராம். படம் முடிந்து இருபது நிமிடங்கள் அப்படியே அமைதியாக இருந்தவர், “இந்த படத்தின் பாதிப்பிலிருந்து நான் மீள்வதற்கு சில நாட்கள் பிடிக்கும்” என்றாராம். இதைவிட சிறந்த பாராட்டு வேறென்ன இருந்துவிடப் போகிறது. சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போயிருக்கிறார் கதிரவன்.
ஒரு முக்கியமான விஷயம். நடிகை அஞ்சலி புகழ் மு.களஞ்சியம் இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். அவரது தங்கைதான் ஹீரோயின் பிரியங்கா. “இந்த படத்தில் யாருக்குமே நெகட்டிவ் ரோல் இல்ல. அதை மட்டும் இப்போதைக்கு சொல்லிக்கிறேன்” என்றார் கதிரவன். கேட்பதற்கு எல்லாமே பாசிட்டிவா இருக்கும் போது, எங்கேயிருந்து நெகட்டிவ் வரும்?
தென்கிழக்கு, வடகிழக்கு பருவ மழையெல்லாம் முடிந்த பின்பு, ஜனவரியில் திரைக்கு வருகிறது கோடை மழை! குடையில்லாத மனசோடு காத்திருக்கோம் வாங்க கதிரவன்!